சம்சாரக் கப்பலின் தியான மாலுமி இறைவன் சத்ய சாயி!

காண்கின்ற உலகம் நிலையற்றது என்பது தியானத்தின் மூலம் அறியப்படுகிறது. புதிய இடத்தில் சரியான வழியறியாது மக்கள் அங்குமிங்கும் அலையும் போது, யாராவது ஒருவர் நேர்வழியைக் காண்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மக்கள் அவரைக் கேலி செய்து அவமானப்படுத்தினால், கூறியதைக் கேட்காததால் குழப்பமும் அழிவுமே ஏற்படும்.

தற்பொழுது, அன்பின் வடிவங்களான சான்றோரின் அன்பை அறியாமையால் தவறாக புரிந்துக் கொண்டு தனக்குள் நஞ்சாக மாற்றித் துன்பப்படுவது மக்களின் பழக்கமாகிவிட்டது. அன்பும் அழிவும் ஒரே இடத்திலிருந்து தான் தோன்றுகின்றன. நவரத்தினங்கள், சந்திரன், அமிர்தம், லஷ்மி தேவி ஆகியவரை அளித்த அதே கடல்தான் உலகை அழிக்கவல்ல ஆலகால விஷத்தையும் நல்கியது. இத்தகைய சூழ்நிலையில், மனிதன், ஸ்ரீமன் நாராயணனை போன்று நல்லதையும் மங்களமானவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அமிர்தமும், லட்சுமியும் கிடைப்பது எவ்வாறு? சிவனைப் போன்ற தீரமிகுந்தவர்கள் நஞ்சை அருந்தலாம். அது அவருக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காது. மனித வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது. ஆனந்தத்தை அனுபவிக்க ஆர்வமும் உறுதியும் உள்ளவர்கள் கொந்தளிக்கும் சம்சாரக் கடலைக் கடக்க முடியும். மற்றவர் மூழ்கிவிடுவார்கள்.

பிரக்ருதியின் குணங்களைக் கடக்கும் சக்தி மனிதர் எவருக்கும் இல்லை. கடவுளின் அருள் மூலமாகத்தான் அத்தகைய ஆற்றல் கிடைக்கிறது.  அந்த அருளை ஜபத்தின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் அடைய வேண்டும். இதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். தன்னிடமுள்ள பிரக்ருதியின் இயல்புகளை அடக்குதல் யாராலும் இயலாத காரியம்.யார் பிரக்ருதியைத் தன் கைவசம் கொண்டுள்ளாரோ, யாருடைய உத்தரவுக்குப் பிரக்ருதி கீழ்ப்படிகிறதோ அவர்களுக்கு தான் அத்தகைய ஆற்றல் உண்டு. பிரக்ருதியே பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் அடிப்படையும். அதுவே படைப்புக்கும் இருப்புக்கும் அடிப்படை. ஆண், பெண், விலங்கு, பறவை, மரம் தாவரம் இவையனைத்தும் பிரக்ருதி. இவையெல்லாம் பிரக்ருதியிலிருந்து மாறுபட்டவையல்ல. இந்த முடிவில்லாத பிரக்ருதியைத் தூண்டும் சக்தி (புருஷன்) ஆண்டவனேயாகும். இந்த உண்மை மனத்திலிருந்து நழுவாதிருக்க, இதை அனுபவித்து உணர வேண்டும். இதற்கும் ஜபமும் தியானமும் தேவையான ஒழுக்கம். இந்தப் பிரக்ருதி ஒரு கடலைப் போன்றது. அது கொஞ்சம் அசைந்தாலும், பல கோடி உயிர்கள் அழியும்; கப்பல்கள் துண்டு துண்டாக உடைந்து சிதறும். இந்த கடலைச் சொந்த முயற்சியால் மட்டும் கடக்கவே முடியாது. அதற்கு ஆண்டவன் அருள் தேவை. அருள் என்ற தோணி தேடி ஆண்டவனைப் பிரார்த்தனை செய். அது கிடைத்ததும், கணப்பொழுதில் கரை சேர முடியும்.

ஆதாரம்:தியான வாஹினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0