ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!
Sairam! This is available only in Tamil*
- அவர்பெற்றார் இவர்பெற்றார்
- அவையெல்லாம் குழந்தைகளே!
- இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா
- எனும்பெயரைக் கொண்டபெருந்
- தவள்பெற்றாள் தான்பெற்றாள்
- தரணியெலாம் உய்ந்திடவே
- சிவம்பெற்றாள் சக்தியினைச்
- சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்!
- நோயுற்றார் பிணிதீர்ந்தார்
- நோற்பாரோ தவம்தீர்ந்தார்
- போயுற்றார் புட்டபர்த்திப்
- பொன்னகரை, ஈஸ்வரம்மா
- தாயுற்ற தவப்புதல்வன்
- தன்னிகரில் லாத்தலைவன்
- சாயீசன் சன்னிதியில்
- சன்மமிலா வாழ்வுற்றாரே!
- நீலவொளிச் சிறுபந்தாய்
- நிமலமகள் கருப்புகுந்தான்
- ஆலமதை அருந்தியவன்
- அவள்மடியில் அமுதருந்த!
- சீலமிகும் ஈஸ்வரம்மா
- செய்ததவம் எவர்செய்தார்
- பாலகனாய்ப் பரமனையே
- பரிவுடனே வளர்த்தெடுக்க!
- நாமகிரி நல்வயிற்றில்
- “நாதனவன் வருவன்”என
- ஆமந்த அவதூதர்
- அறிவித்த காரணத்தால்
- “நாமமினி ஈஸ்வரம்மா!”
- நவின்றாராம் கொண்டமரும்;
- பூமகளின் புகழ்மகனே
- போற்றுகநின் திருநாமம்!
- போற்றுகநின் பூம்பாதம்
- போற்றுகநின் பெருங்கருணை
- போற்றுகநின் ஞானமொழி
- போற்றுநின் பொற்கரங்கள்
- போற்றுகநின் மெய்யருளால்
- பொலிவுற்ற வேதவழி
- போற்றுகவே ஈஸ்வரம்மா
- பொற்கருவில் வந்தஇறை!
- மதுரபாரதி