தியானம்
Sairam! This is available only in Tamil*
- “எப்படி கட்டுக்கடங்காத யானையை ஒரு மெல்லிய கயிற்றினால் கட்டுப்படுத்த முடியாதோ,அதுபோல மற்ற வழிகளால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது.மனதை ஆத்மாவில் மூழ்கச்செய்ய, தியானம் மிக அவசியம்”
- -பகவான் சத்யசாயிபாபா
- தியான வாஹினி,ப.79.
- பகவான் சத்யசாயிபாபாவின், தியானம் பற்றிய உபதேசத்தை அடி நாதமாகக் கொண்டு அவர் சங்கல்பத்தால் அமைந்ததே… “ஸ்ரீ சத்யசாயி கவிதைகளில்” வரும் “தியானம்”என்ற இந்தக் கவிதை…
- தியானம்
- ஒன்றுமில்லாத மனதில்தான் ஒளிகுவிந்து நிற்கிறது!
- ஏதுமற்ற மனதில்தான் சீதக்கதிர்மதி உதிக்கிறது!
- தியானம் என்ற நித்யதவம் சத்யமாயிருந்தால்
- சச்சிதானந்தம் அங்கே சாசுவதமாய் ஒளிர்கிறது!
- ஆனால் ஸ்வாமி!
- சித்தசுத்திக்கான தியான நிலை கைகூடுவது கடினமாயிருக்கிறது!
- முழுமுதல் உன்னை நெஞ்சில் இருத்தி விழிகள் மூக்கு நுனிபார்க்க
- வெகு நேரமாய் அமர்ந்திருக்கிறேன்.
- சதா உன்னில் கரைந்து கிடக்கும் மனம் தியானத்திற்கென்று அமர்ந்தால்
- பிடிவாதமாய் அமர்த்துகையில் பிடிகொடுக்காமல் துள்ளும் சிறுமியைப்போல் ஓடுகிறது.
- விருந்திலையில்பரிமாறப்பட்ட பதார்த்தங்களை வேடிக்கை பார்ப்பது போலும்..
- ஜன்னலோரத்தில் அமர்ந்து பாதசாரிகளை பராக்குப் பார்ப்பதுபோலும்..
- அதன்பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறது மனம்!
- பஞ்சகல்யாணிக் குதிரைகளாய் பஞ்சபுலன்களும் திசைக்குத்
- திசை அலைகின்றன.
- ஜன்னலோரக் காற்று மெலிதாய் வெளிச்சம் சுகந்தமாய்ச்
- சூழல் தெய்வவாசம் தோய்ந்த சிற்றறை
- எல்லாம் இருந்தும் அறுத்துக் கொண்டோடும் ஜல்லிக்கட்டுக் காளையாய்
- முரண்டு பிடிக்கிறது மனம்.
- சற்குரு எனக்கு சத்யசாயி நீ அல்லவோ?
- தியான யோகம் சொன்ன கிருஷ்ணமுராரி நீயல்லவோ?
- இதற்கொரு வழிசொல்வாய் ஸ்வாமி
- ஸ்வாமியின் திருமுகத்தில் புன்னகை ததும்புகிறது!
- அன்போடு சொல்கிறார்.
- நீ தியானத்திலா அமர்ந்திருக்கிறாய்?
- உன் மனம் மார்க்கெட்டைச் சுற்றிவருகிறது!
- உன் மூக்கின்மேலமரும் ஈயின்மேல் போகிறது உன் கவனம்.
- அதை விரட்டப்போராடுகிறாய் ஈயின்மேல் தியானம் செய்கிறாயா?
- இறைவன்மேல் தியானம் செய்கிறாயா?
- சலனமற்ற மனம் அசைவற்ற பார்வையில் மனங்குவியும்
- மகேசன் ஒளிர்வான்!
- பற்றற்ற நிலையில்தான் தியானம் பற்றும்
- உன்னை மற உடலைமற பற்றைத் துற
- மனதின் கடிவாளம் உன்னிடம் இருக்கட்டும்
- ஏதுமற்ற மனதில்தான் ஜோதியாய் ஒளிர்வேன்நான்.
- நிமிர்ந்து அமர் சிந்தனை நிமிரும் உன் முதுகெலும்புக்கூட்டில்
- 9ஆவது 12ஆவது எலும்புகளுக்கிடையே உள்ளது சுஷும்னா நாடி.
- பிராணனுக்குப் பிரதான ஸ்தானம்!
- நிமிர்ந்து அமர்ந்தால்தான் காற்று நேர்ப்படும்
- கவனம் நேர்ப்படும் தியானம் நேர்ப்படும்
- தீபம் நேர்ப்படும்.
- ஸ்வாமியின் திருமுகம் நோக்கிக்கேட்கிறேன்.
- ஸ்வாமி
- ஸ்வாமி நீ
- ஆயிரம் சொன்னாலும்
- அடங்காமல் ஓடும் மனமடக்க
- முடியவில்லையே ஸ்வாமி.
- வெளியில் போகும்
- வாகனங்களின் சப்தம்
- பாதசாரிகளின் பேச்சு
- கேட்கும்பாட்டு எல்லாம்
- கலவையாய்க் காதுகளில்
- குலவையிட்டுக் குவிகிறது.
- அங்கங்கேயிருந்து கிளம்பும்
- நளபாகவாசனைஅத்தனையும்
- நாசியில் குவிகிறது.
- மூடியிருக்கும் கண்களுக்குள்
- முந்நூறு காட்சி
- முப்போதும் குவிகிறது.
- பதிந்த சம்பவம்
- புதிய சம்பவம்
- பூர்வசம்பவம் என்று
- சம்பவங்களோ மனதில்
- சதா குவிகிறது.
- நவரசத்திணறலாய்
- உணர்ச்சி குவிகிறது.
- இதில்
- மனங்குவிதல் நிகழ்வது
- எப்படித்தான் ஸ்வாமி?
- எத்தனை நேரம்
- அமர்ந்தாலும்
- ஆதிசிவனே மனதில்
- ஜோதி ஒளிர்வதில்லை.
- பக்குவமில்லைபவித்ரமில்லை
- பற்றுகள் வளர்ந்து
- புற்றுகட்டி மூடுவதால்
- பரமசிவன் தெரிவதில்லை.
- ஸ்வாமி பலமாய்ச்சிரிக்கிறார்
- பரிவோடு மொழிகிறார்.
- சரி சரி கேட்பாய்
- சரியாகும் இனி
- சாத்விக உணவில்
- கவனம் செலுத்து
- மனதின் சஞ்சாரத்தை
- அதன்வழி நிறுத்து.
- காலிவயிறு அல்லது
- கால்வயிற்றுணவு
- சத்சங்க நேசிப்பு
- தேர்ந்த வாசிப்பு
- கண்டது படித்துக்
- கலைந்து போகாதே
- நீலகண்டத்தை
- நெஞ்சில் நிறுத்து.
- பிடித்திருப்பதையெல்லாம்
- விட்டுவிடு
- கையில் கிடைத்த சாயியைக்
- கெட்டியாய்ப்பிடி.
- பூமிக்குமேல் சற்றே
- மெத்தென்ற ஆசனம்
- சாமிக்கு முன்னால்
- சமநிலை கொள்வாய்.
- கடமுட ஆசனம்
- கடினமாயிருக்கும்
- வெகுசுக ஆசனம்
- சுகபோகமாய்விடும்.
- முற்றும்துறந்த
- முனிவரும்கூட
- யோகநிலை சித்திக்கப்
- போராடுவதுண்டு.
- தன்மனமடங்கும் வழியை
- வசிஷ்டரிடம்
- ஶ்ரீராமனே கூடக்
- கேட்டதுண்டு.
- வாசனையால் வரும் குழப்பம்
- வல்லோர்க்குமுண்டு.
- சூர்ப்பனகை நடந்த
- காட்டின் வழி நடந்தபோது
- இலட்சுமணனுக்கே கூட
- அயோத்திக்கேபோய்விடலாம்
- என்ற எதிர்ச்சிந்தனை
- வந்ததாம்.
- நானும் நீயும் ஒன்றென்ற
- தாதாத்மியபாவம்
- பொங்கினால்
- உன்
- தளைகள் அறுபடும்
- களைகள் அறுபடும்
- வெட்டவெளி உருவாகும்
- யோகநிலை சித்திக்கும்.
- என்னிடம் கொண்ட
- பிரேமைதவிர
- பிறிதொன்றிலா நெஞ்சில்
- நிர்மலம் பிறக்கும்
- நிர்க்குணம் சிறக்கும்.
- உள்ளும் வெளியிலும்
- குவிந்து கிடக்கும்
- மாசினை எரிக்க
- நாமமந்திரமே நல்வழிஉனக்கு
- நாமமந்திரம்
- சொல்லச்சொல்ல
- சித்தசுத்தியும்
- சீக்கிரம் நடக்கும்.
- நாமமந்திரம்
- சொல்லச்சொல்ல
- புலன்கள் வசப்படும்
- எண்ணம் வசப்படும்
- மனம் வசப்படும்
- தியானம் வசப்படும்.
- மீண்டும் மீண்டும் ராம் ராம்
- மீண்டும் மீண்டும் நமசிவாய
- மீண்டும் மீண்டும் சாயிராம்
- உன்னைக் கவர்ந்த
- நாமமந்திரம் எதுவோ
- அதை நீ
- உச்சரிக்க உச்சரிக்க
- பக்தி உள்ளூறும்
- பூர்வவாசமெல்லாம்
- பூரணமாய் வெளியேறும்.
- நீ அறையிலமர்ந்து
- தியானிப்பது
- மற்றவர்க்கு மட்டுமல்ல
- உனக்கும் தெரியலாகாது.
- உன்னைமற என்னைநினை
- உன்எதிரே ஜோதி ஒளிர்கிறது!
- நீ ஜோதியோடிருக்கிறாய்
- ஜோதியும் நீயும் ஒன்றே!
- இந்த சத்யஜோதி
- உன்னுள்
- கேசாதிபாதம் ஒளிர்ந்து
- மனவெளியெங்கும் வளர்ந்து
- ஆன்மவெளியில்
- அதுவரை அதுவரை
- தியானம் என்பது
- கடினமுயற்சிதான்
- தொடர்ந்து பழகு.
- அடிமுடிதெரியா ஜோதி
- உனக்குள்
- வளரும் ஒளிரும்.
- எப்போதும் உனக்குள்
- தனித்திரு.
- இறை நாமத்தில் தோய்ந்து
- இனித்திரு.
- தியானத்தில் மூழ்கிக்
- கனிந்திரு.
- எல்லாங் கடந்த எனை
- நினைத்திரு.
- ஆதி அந்தமிலா
- ஜோதியில் மூழ்கு
- அதன் பிறகங்குநீ உணர்வது
- ஒன்றே.
- ஜோதி ஒளிவளர்
- ஜோதி!
- என்றும் சாயிசேவையில்
- கவிஞர்.பொன்மணி
- -ஶ்ரீசத்யசாயி கவிதைகள்