தியானம்

  • “எப்படி கட்டுக்கடங்காத யானையை ஒரு மெல்லிய கயிற்றினால் கட்டுப்படுத்த முடியாதோ,அதுபோல மற்ற வழிகளால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது.மனதை ஆத்மாவில் மூழ்கச்செய்ய, தியானம் மிக அவசியம்”
  • -பகவான் சத்யசாயிபாபா
  • தியான வாஹினி,ப.79.
  • பகவான் சத்யசாயிபாபாவின், தியானம் பற்றிய உபதேசத்தை அடி நாதமாகக் கொண்டு அவர் சங்கல்பத்தால் அமைந்ததே… “ஸ்ரீ சத்யசாயி கவிதைகளில்” வரும் “தியானம்”என்ற இந்தக் கவிதை…
  • தியானம்
  • ஒன்றுமில்லாத மனதில்தான் ஒளிகுவிந்து நிற்கிறது!
  • ஏதுமற்ற மனதில்தான் சீதக்கதிர்மதி உதிக்கிறது!
  • தியானம் என்ற நித்யதவம் சத்யமாயிருந்தால்
  • சச்சிதானந்தம் அங்கே சாசுவதமாய் ஒளிர்கிறது!
  • ஆனால் ஸ்வாமி!
  • சித்தசுத்திக்கான தியான நிலை கைகூடுவது கடினமாயிருக்கிறது!
  • முழுமுதல் உன்னை நெஞ்சில் இருத்தி விழிகள் மூக்கு நுனிபார்க்க
  • வெகு நேரமாய் அமர்ந்திருக்கிறேன்.
  • சதா உன்னில் கரைந்து கிடக்கும் மனம் தியானத்திற்கென்று அமர்ந்தால்
  • பிடிவாதமாய் அமர்த்துகையில் பிடிகொடுக்காமல் துள்ளும் சிறுமியைப்போல் ஓடுகிறது.
  • விருந்திலையில்பரிமாறப்பட்ட பதார்த்தங்களை வேடிக்கை பார்ப்பது போலும்..
  • ஜன்னலோரத்தில் அமர்ந்து பாதசாரிகளை பராக்குப் பார்ப்பதுபோலும்..
  • அதன்பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறது மனம்!
  • பஞ்சகல்யாணிக் குதிரைகளாய் பஞ்சபுலன்களும் திசைக்குத்
  • திசை அலைகின்றன.
  • ஜன்னலோரக் காற்று மெலிதாய் வெளிச்சம் சுகந்தமாய்ச்
  • சூழல் தெய்வவாசம் தோய்ந்த சிற்றறை
  • எல்லாம் இருந்தும் அறுத்துக் கொண்டோடும் ஜல்லிக்கட்டுக் காளையாய்
  • முரண்டு பிடிக்கிறது மனம்.
  • சற்குரு எனக்கு சத்யசாயி நீ அல்லவோ?
  • தியான யோகம் சொன்ன கிருஷ்ணமுராரி நீயல்லவோ?
  • இதற்கொரு வழிசொல்வாய் ஸ்வாமி
  • ஸ்வாமியின் திருமுகத்தில் புன்னகை ததும்புகிறது!
  • அன்போடு சொல்கிறார்.
  • நீ தியானத்திலா அமர்ந்திருக்கிறாய்?
  • உன் மனம் மார்க்கெட்டைச் சுற்றிவருகிறது!
  • உன் மூக்கின்மேலமரும் ஈயின்மேல் போகிறது உன் கவனம்.
  • அதை விரட்டப்போராடுகிறாய் ஈயின்மேல் தியானம் செய்கிறாயா?
  • இறைவன்மேல் தியானம் செய்கிறாயா?
  • சலனமற்ற மனம் அசைவற்ற பார்வையில் மனங்குவியும்
  • மகேசன் ஒளிர்வான்!
  • பற்றற்ற நிலையில்தான் தியானம் பற்றும்
  • உன்னை மற உடலைமற பற்றைத் துற
  • மனதின் கடிவாளம் உன்னிடம் இருக்கட்டும்
  • ஏதுமற்ற மனதில்தான் ஜோதியாய் ஒளிர்வேன்நான்.
  • நிமிர்ந்து அமர் சிந்தனை நிமிரும் உன் முதுகெலும்புக்கூட்டில்
  • 9ஆவது 12ஆவது எலும்புகளுக்கிடையே உள்ளது சுஷும்னா நாடி.
  • பிராணனுக்குப் பிரதான ஸ்தானம்!
  • நிமிர்ந்து அமர்ந்தால்தான் காற்று நேர்ப்படும்
  • கவனம் நேர்ப்படும் தியானம் நேர்ப்படும்
  • தீபம் நேர்ப்படும்.
  • ஸ்வாமியின் திருமுகம் நோக்கிக்கேட்கிறேன்.
  • ஸ்வாமி
  • ஸ்வாமி நீ
  • ஆயிரம் சொன்னாலும்
  • அடங்காமல் ஓடும் மனமடக்க
  • முடியவில்லையே ஸ்வாமி.
  • வெளியில் போகும்
  • வாகனங்களின் சப்தம்
  • பாதசாரிகளின் பேச்சு
  • கேட்கும்பாட்டு எல்லாம்
  • கலவையாய்க் காதுகளில்
  • குலவையிட்டுக் குவிகிறது.
  • அங்கங்கேயிருந்து கிளம்பும்
  • நளபாகவாசனைஅத்தனையும்
  • நாசியில் குவிகிறது.
  • மூடியிருக்கும் கண்களுக்குள்
  • முந்நூறு காட்சி
  • முப்போதும் குவிகிறது.
  • பதிந்த சம்பவம்
  • புதிய சம்பவம்
  • பூர்வசம்பவம் என்று
  • சம்பவங்களோ மனதில்
  • சதா குவிகிறது.
  • நவரசத்திணறலாய்
  • உணர்ச்சி குவிகிறது.
  • இதில்
  • மனங்குவிதல் நிகழ்வது
  • எப்படித்தான் ஸ்வாமி?
  • எத்தனை நேரம்
  • அமர்ந்தாலும்
  • ஆதிசிவனே மனதில்
  • ஜோதி ஒளிர்வதில்லை.
  • பக்குவமில்லைபவித்ரமில்லை
  • பற்றுகள் வளர்ந்து
  • புற்றுகட்டி மூடுவதால்
  • பரமசிவன் தெரிவதில்லை.
  • ஸ்வாமி பலமாய்ச்சிரிக்கிறார்
  • பரிவோடு மொழிகிறார்.
  • சரி சரி கேட்பாய்
  • சரியாகும் இனி
  • சாத்விக உணவில்
  • கவனம் செலுத்து
  • மனதின் சஞ்சாரத்தை
  • அதன்வழி நிறுத்து.
  • காலிவயிறு அல்லது
  • கால்வயிற்றுணவு
  • சத்சங்க நேசிப்பு
  • தேர்ந்த வாசிப்பு
  • கண்டது படித்துக்
  • கலைந்து போகாதே
  • நீலகண்டத்தை
  • நெஞ்சில் நிறுத்து.
  • பிடித்திருப்பதையெல்லாம்
  • விட்டுவிடு
  • கையில் கிடைத்த சாயியைக்
  • கெட்டியாய்ப்பிடி.
  • பூமிக்குமேல் சற்றே
  • மெத்தென்ற ஆசனம்
  • சாமிக்கு முன்னால்
  • சமநிலை கொள்வாய்.
  • கடமுட ஆசனம்
  • கடினமாயிருக்கும்
  • வெகுசுக ஆசனம்
  • சுகபோகமாய்விடும்.
  • முற்றும்துறந்த
  • முனிவரும்கூட
  • யோகநிலை சித்திக்கப்
  • போராடுவதுண்டு.
  • தன்மனமடங்கும் வழியை
  • வசிஷ்டரிடம்
  • ஶ்ரீராமனே கூடக்
  • கேட்டதுண்டு.
  • வாசனையால் வரும் குழப்பம்
  • வல்லோர்க்குமுண்டு.
  • சூர்ப்பனகை நடந்த
  • காட்டின் வழி நடந்தபோது
  • இலட்சுமணனுக்கே கூட
  • அயோத்திக்கேபோய்விடலாம்
  • என்ற எதிர்ச்சிந்தனை
  • வந்ததாம்.
  • நானும் நீயும் ஒன்றென்ற
  • தாதாத்மியபாவம்
  • பொங்கினால்
  • உன்
  • தளைகள் அறுபடும்
  • களைகள் அறுபடும்
  • வெட்டவெளி உருவாகும்
  • யோகநிலை சித்திக்கும்.
  • என்னிடம் கொண்ட
  • பிரேமைதவிர
  • பிறிதொன்றிலா நெஞ்சில்
  • நிர்மலம் பிறக்கும்
  • நிர்க்குணம் சிறக்கும்.
  • உள்ளும் வெளியிலும்
  • குவிந்து கிடக்கும்
  • மாசினை எரிக்க
  • நாமமந்திரமே நல்வழிஉனக்கு
  • நாமமந்திரம்
  • சொல்லச்சொல்ல
  • சித்தசுத்தியும்
  • சீக்கிரம் நடக்கும்.
  • நாமமந்திரம்
  • சொல்லச்சொல்ல
  • புலன்கள் வசப்படும்
  • எண்ணம் வசப்படும்
  • மனம் வசப்படும்
  • தியானம் வசப்படும்.
  • மீண்டும் மீண்டும் ராம் ராம்
  • மீண்டும் மீண்டும் நமசிவாய
  • மீண்டும் மீண்டும் சாயிராம்
  • உன்னைக் கவர்ந்த
  • நாமமந்திரம் எதுவோ
  • அதை நீ
  • உச்சரிக்க உச்சரிக்க
  • பக்தி உள்ளூறும்
  • பூர்வவாசமெல்லாம்
  • பூரணமாய் வெளியேறும்.
  • நீ அறையிலமர்ந்து
  • தியானிப்பது
  • மற்றவர்க்கு மட்டுமல்ல
  • உனக்கும் தெரியலாகாது.
  • உன்னைமற என்னைநினை
  • உன்எதிரே ஜோதி ஒளிர்கிறது!
  • நீ ஜோதியோடிருக்கிறாய்
  • ஜோதியும் நீயும் ஒன்றே!
  • இந்த சத்யஜோதி
  • உன்னுள்
  • கேசாதிபாதம் ஒளிர்ந்து
  • மனவெளியெங்கும் வளர்ந்து
  • ஆன்மவெளியில்
  • அதுவரை அதுவரை
  • தியானம் என்பது
  • கடினமுயற்சிதான்
  • தொடர்ந்து பழகு.
  • அடிமுடிதெரியா ஜோதி
  • உனக்குள்
  • வளரும் ஒளிரும்.
  • எப்போதும் உனக்குள்
  • தனித்திரு.
  • இறை நாமத்தில் தோய்ந்து
  • இனித்திரு.
  • தியானத்தில் மூழ்கிக்
  • கனிந்திரு.
  • எல்லாங் கடந்த எனை
  • நினைத்திரு.
  • ஆதி அந்தமிலா
  • ஜோதியில் மூழ்கு
  • அதன் பிறகங்குநீ உணர்வது
  • ஒன்றே.
  • ஜோதி ஒளிவளர்
  • ஜோதி!
  • என்றும் சாயிசேவையில்
  • கவிஞர்.பொன்மணி
  • -ஶ்ரீசத்யசாயி கவிதைகள்
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0