தெய்வ தண்டனை
- சாயி உன் சொல்லையே
- பிரபஞ்சம் குறித்துக் கொள்கிறது
- அதை நிறைவேற்றவே
- வானமும்
- வானவில்லாய்
- வளைந்து செல்கிறது
- நட்சத்திரங்கள் உன்
- கண்கள் எனப் புகழத் தோன்றுகிறது
- ஆனால் சுவாமி
- விதைகளும் உன் கண்களே
- கண்ணுக்குத் தெரிந்தவைகளைத் தான்
- மனிதன் பார்க்கிறான்
- கண்ணுக்குத் தெரியாதவைகளோ
- மனிதனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறது
- சுவாமி நீ புரிய முடியாத
- ஆற்றல் என்பது ஏதுமில்லை
- சுவாமி உன்னைப் புரிய முடியாமல்
- சரணாகதி அடையும் போதே
- மனித ஆற்றலும் போற்றலாய்
- அவனிடமே திரும்பி வருகிறது
- பூக்களை ஏன் மனிதன்
- புரிந்து கொள்ள வேண்டும்?
- பூக்களை ரசித்தால் போதும்
- செடியில் பூக்கும் போதே
- உனக்கான பூஜையை அது
- செய்து விடுகிறது
- மனிதன் மட்டுமே
- பிறந்த பிறகும்
- பூக்கள் பூக்கும் வரை
- பூஜையைத் தள்ளி வைக்கிறான்
- எத்தனைக் கண்கள் உனக்கு!
- எல்லா நேரமும்
- எல்லோரையும்
- கவனித்துக் கொண்டே இருக்கிறாயே
- சுவாமி உனக்கு
- அலுப்பதே இல்லையா!
- எத்தனை பக்தர்கள் உனக்கு!
- எல்லோரையும் உன்
- கரம் தூக்கி
- காப்பாற்றிக் கொண்டே இருக்கிறாயே
- சுவாமி உன்
- கைகள் வலிக்கவே வலிக்காதா!
- மர விசிறிகளை
- மனிதன் வெட்டித் தீர்த்த பின்
- மின்விசிறியை நிறுத்தினால்
- காற்று கூட நின்றுவிடுகிறதே
- சுவாமி நீ மட்டும்
- உன் மின்சாரத்தை
- எங்கிருந்து தயாரிக்கிறாய்?
- காசு இல்லாதவர்களை
- மாசு எனப் பார்க்கிறதே
- மனம்
- நீ மட்டும் எப்படி
- கருணையோடு பார்க்கிறாய்!
- சுவாமி எப்படி
- நல்லவர்களுக்கும்
- நய வஞ்சகர்களுக்கும்
- ஒரேவிதமான சுவாசத்தை ஓடவிடுகிறாய்?
- உன் அகராதியில்
- குற்றங்கள் என்ற பக்கங்களே இல்லையே
- இருந்திருந்தால்
- என் பெயரை அல்லவா முதலில்
- எழுதி இருப்பாய்
- எப்படி சுவாமி நீ
- இப்படி இரக்கங் காட்டுகிறாய்!
- நீ கடவுள் இல்லை என்றால்
- வேறு யார் கடவுளாக இருக்க முடியும்!
- மனிதர்கள் இவர்கள்
- வழிபடும் கடவுளருக்கும்
- நீதானே சுவாமி
- கடவுளாக இருக்கிறாய்!
- எல்லா தவறுகளுக்கும்
- இவர்கள் தண்டனை வைத்திருக்கிறார்கள்
- அதில்
- குறைந்த பட்ச தண்டனை வெறுப்பு
- அதிக பட்ச தண்டனை நிந்தனை
- சுவாமி உன் நீதிமன்றத்தில்
- நீதி தேவதை சிறகோடு நிற்கிறாள்
- கையில் தராசில்லை
- இதயத்தையே ஏந்திக் கொண்டிருக்கிறாள்
- எல்லாக் குற்றங்களுக்கும்
- சுவாமி நீ தரும் ஒரே தண்டனை
- பேரன்பே
- அந்த தண்டனையே
- என்னையும்
- மனிதனாக மாற்றிக் கொண்டிருக்கிறது!
- கவிஞர் வைரபாரதி