Kavithai 3

“Sairam! This is available only in Tamil”

கடவுளுக்காகத் தவித்துத் தவமிருக்கக்கூடிய பக்தர் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்திருப்பதே தூயபக்தி. இப்படி இருந்தால்தான் இப்படி உடையணிந்தால்தான் பக்திவரும் என்று நினைத்துக் கொண்டுவிடாதே என்று ஒரு கவிதையில் பாடுகிறார் பகவான் பாபா.சுருக்கமாக சுருக்கென்று வந்துவிழுகிறது கவிதை. இங்கே பார்…

‘காஷாயவஸ்திரம் கட்டியதால் மட்டுமே பக்தி சீக்கிரத்தில் பொங்கி வந்துவிடாது.

மூட்டை மூட்டையாகப் பாவத்தை வைத்துக் கொண்டிருப்பவன், வாயால் ஒருமந்திரத்தை உச்சரித்த உடனே செய்தபாவங்கள் சிதறிப்போய்விடாது. கீதைபோன்ற புனிதநூலைக் கையில் வைத்துக்கொண்டு கூக்குரல்போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே நம்வீட்டில் புண்ணியம் குவிந்துவிடாது.

சொல்லும் சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும் ஒற்றுமையைக் காட்டுபவனே உண்மையான சாது. என்கிறார் பகவான் சத்யசாயிபாபா.

“காஷாய வஸ்த்ரம்பு கட்டின மாத்ரானகரதலாமலகம்பு காது பக்தி நோடிதோ மந்த்ரம்பு நுச்சரிஞ்சினலோனெ சேஸினபாபம்பு செதரிபோது கீதலு சேபட்டி கேகலுவேஸின புண்யம்பு மன இண்ட ப்ரோகுபடது செப்புமாடலகு சேஸேடி சேதலுகுன் ஸாம்யமுண்டெடிவா டே ஸாதுவகுன்”

(கவிதை.86, ப.77)

நன்றாக உணராத எதையும் வைத்து உன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாதே. நீ சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருந்தாலே நீ சீலம் உள்ளவன் என்கிறார் ஸ்வாமி. என்ன அருமையான பொக்கிஷம் இந்தக்கவிதை.

“கீதலு சேபட்டி கேகலுவேஸின”என்றவரியில் என்ன அற்புதமான சொற்பிரயோகம்?! கையில் கீதைபோன்ற நூலைவைத்துக் கொண்டு கூச்சல்போட்டால் புண்ணியம் குவிந்துவிடாது.

வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போன்ற வாகானவரி அல்லவா அது! ‘கேகலு’என்றால் சத்தம்…

கூச்சல்..’என்ன கேகேன்னு கத்தறே’என்றுதென்மாவட்டக் கிராமத்துமக்கள் பேசும் சொல்லாட்சி,இந்த,”கேகலு” என்ற சொல்லுக்குள் உட்கார்ந்திருக்கும் அழகை ரசிக்காமல் இருக்கமுடியாது!

அடுத்த கவிதையில் ஸ்வாமி கொஞ்சமாய் நம்மைக் கோபித்துக் கொள்கிறார்.

என்ன வேடிக்கை இது? செய்வதையெல்லாம் செய்துவிட்டு பழியை நீங்கள் என்மீது போடலாமா என்று கேட்கிறார்.

‘நீங்கள் விதைத்ததோ விஷவித்து.

எதிர்பார்ப்பதோ அமிர்தருசியுள்ள கனி.

அதை விரும்பி அதற்காகக் காத்திருப்பீர்கள்.ஆனால் காய்த்த கசப்பான காய்களை உண்ண முடியாமல் முகஞ்சுளித்தபடி பழியை என்மீதுபோட்டு என்னிடம் வாதாடுவீர்கள்.

இது கர்மக்கணக்கு.

என்ன விதைத்தாயோ அதைத்தானே நீ அறுவடை செய்யமுடியும்? இதைவிடுத்து ஸ்வாமிதான்இப்படிச்செய்தார் என்று பழியை என்மீது போடலாமா?

நான்பாட்டுக்கு சிவனே என்று இருக்கிறேன் (உண்மையில் ஸ்வாமி சிவன் தானே) என் மீது பழிபோடுவது என்ன நியாயம் என்கிறார் ஸ்வாமி.

  • “வேஸுகுந்துரு மீரு
  • விஷமித்து பலமுலு
  • ஆசிந்துரு அதிருச்யபலமுலு
  • காசினகடு சேது
  • காயலுதினலேக
  • தோஷமு நாபைன
  • தோஸி வாதிந்துரு”

(கவிதை.23, ப.27)

பகவான் சொல்வது பரமசத்யம் தானே. நூறு சதவிகிதம் நம் இப்பிறவி முற்பிறவியை அளந்து கடவுள் போடுகிற கர்மக்கணக்கல்லவா இது?! என்னஅழகான கவிதைவாதம்!

அடுத்துவரும் கவிதை அலாதியானது. கோகுலக் கண்ணனின் குறும்புகொப்பளிக்கப் பாடுகிறார் ஸ்வாமி. ‘என் நிச்சயமற்ற தன்மையை நேசி..நம்பு’ என்று சொல்லும் அவர் சுபாவமே இந்தக்கவிதையின் உள்ளடக்கம்.

  • “செந்த சேர நண்டஞ்சு
  • ஸந்த ஸிஞ்செதரன்ன,
  • வெண்டனே எடபாடு
  • சிந்த கூர்ச்சு,
  • ஏடி பிஞ்சுடே ஸாயிவேடுக
  • அந்துரா,
  • கடுபுப்ப நவ்விஞ்சு
  • நடும நடும,
  • பொகடு சுன்னாடனி
  • பொங்கி போயெதரேமோ,
  • தப்பு கப்புடே
  • எகதாளிசேயு,
  • அபயமிச்செனுகான
  • ஹாயினுண்டதரன்ன,
  • படு பாதலுகு
  • அந்து பெட்டகுண்டு,
  • வெனுக கேகக நீடு
  • சன நீடுமுந்துகு,
  • மனஸு மருலு
  • கொலுபு மதனபெட்டு,
  • இட்டி சின்ன ஸாயி
  • சின்மயமூர்த்தினி,
  • எட்டு லெருக
  • கலரு இலனுமீரு?”

-கவிதை. 31, ப. 34.

‘எங்காகிலும்பார்த்ததுண்டோ கண்ணன் எங்களைச் செய்கின்றவேடிக்கை ஒன்றோ என்ற பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன் சாயியாய்வந்து வம்புகள்புரியும் சந்தோஷக் கவிதை!பகவான் தன் தனிப்பட்ட தெய்வகுண விசேஷத்தைத் தானே பாடுகிறார் பாருங்கள்.

பக்தரைத் திணறடிக்கும் தன் பிரத்யேக இயல்பை ஸ்வாமி சொல்கிறார் கேளுங்கள்.

‘ஸ்வாமி இதோவருகிறேன் என்பேன். வராமல் இழுத்தடிப்பேன்.. சொல்லாமலே திடுதிப்பென்று வந்து நிற்பேன் எப்போதும் உன்பக்கத்திலேயே இருப்பேன் என்று தான்சொல்லி குதூகலம்தருவேன். திடீரெனப் பிரிந்துபோய் உங்களை அழவைப்பேன்..

ஏன் இப்படி துன்பத்தில் ஆழ்த்துகிறாய் என்று நீங்கள் விம்மி அழும்போதே..

வயிறுவெடிக்குமாறுஉங்களை சிரிக்கவைத்து விடுவேன்.

உச்சி நுகர்ந்து உங்களைக் கொண்டாடுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஊரெங்கும் உங்களை கேலி பேசத்தொடங்குவேன்.

சகலசௌகரியங்களைத்தந்து உங்களை சுகமாக வைத்திருக்கிறேன் என்று நீங்கள் ஆனந்திக்கும்போது படும் துன்பங்களுக்கு முடிவில்லாமல் வரும்படியாகச் செய்துவிடுவேன்.

என்ன புலம்பினாலும் என்னை விட்டுப் போக முடியாது உங்களால்… முன்னுக்கும் போகவிடாமல் பின்னுக்கும் போகவிடாமல் மனமயக்கமும் வசீகரமும் செய்து தயிர்கடைவதுபோல் மனதைக் கடைந்து உங்களுக்கு ஆன்மிக ஞானத்தை உணரவைக்கும் இந்தச் சின்மய மூர்த்தியை இந்த உலகில் எப்படித்தான் புரிந்துகொள்வீர்களோ போங்கள்’ என்று ஆனந்தமாக அலுத்துக் கொள்கிறார் ஸ்வாமி. நமக்குத் தலைச்சுற்றல் வருவதைத் தவிர்க்கவே முடியாது.

பகவானின் நிச்சயமற்ற தன்மையும் பிரியமுள்ள ஜீவன் அலைக்கழிக்கப் படுவதுமே இங்கு நிகழ்கிறது.

தெய்விக லீலைகளை லாவகமாகச் சுமந்துகொண்டு நடக்கும் ஒய்யாரம் உலாவுகிறது இந்தக்கவிதையில்..

இப்படி விஷமங்களும் குறும்புகளும் நிறைந்த சின்னச்சித்திரமாய் நடமாடிக் கொண்டு பகவான் புரியும் அமர்க்களமான லீலைகளை எப்படித் தான் புரிந்து கொள்வது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்தும் புரியாமலுமாய் தெய்வத்தை வழிபடுவதே ஆனந்தம்.

அடுத்தகணம் பகவான் என்ன செய்கிறாயோ செய்… எப்படி வைக்கிறாயோ வை என்ற அர்ப்பண உணர்வோடு நம்மை ஒப்படைத்துவிட்டால் நம்முன்வந்து நின்றுவிடுவார் ஸ்வாமி. “சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று அவர் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டால் இதற்குமேல் படுத்தவேண்டாம் என்று நம்மேல் பரிவுபொழியும் தாயாய்மாறிவிடுவார் பகவான். கருணையின் சித்திரம் அன்பின்வடிவமல்லவா ஸ்வாமி?

நமக்காக மனங்கனிந்து பொங்கிவரும் தன் அன்பையே இந்தக்கவிதைகளில் பொழிந்திருக்கிறார் பகவான்பாபா.

  • என்றும் சாயிசேவையில்
  • கவிஞர். பொன்மணி
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0