பர்த்தீஸ்வரன் பதிகம்

Sairam! This is available only in Tamil*

  • வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை
  • வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை
  • மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்
  • மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே
  • நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்
  • நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை
  • சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்
  • சத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே! (1)
  • இணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு
  • இல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு
  • நிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று
  • நெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை
  • வணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு
  • வாழுகிறோம்! வந்தாய்நீ எம்மைக் காக்க!
  • மணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே
  • மலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே! (2)
  • அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
  • அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
  • அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
  • அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
  • வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
  • வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
  • அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
  • அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே! (3)
  • அங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்
  • அழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்
  • பொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே
  • போக்கிடுவாய் போகாத நோய்கள் கூட!
  • வெங்கதிரின் ஒளியோனே! விரிந்த அண்டம்
  • விதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே!
  • சங்கரனே சக்கரனே படைப்பின் தேவே!
  • சாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்! (4)
  • ஆண்கட்குள் ஆணானாய், அரிதாம் பக்தி
  • அதுகொண்ட பெண்களிடைப் பெண்மை பூண்டாய்
  • தேன்மழலைச் சிறுவரிடைச் சிறுவன் ஆனாய்
  • சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்
  • வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
  • விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
  • பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
  • போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே! (5)
  • ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
  • ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
  • காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
  • அல்லனெனத் தோன்றுவதும் யானே என்பாய்!
  • நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
  • நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
  • சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
  • சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே! (6)
  • நானீயே நீநானே இப்பே ருண்மை
  • நாமறியாக் காரணத்தால் கருணை கொண்டு
  • வானேகும் வைகுந்தம் தன்னை நீங்கி
  • வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
  • தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
  • தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
  • கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்தி
  • கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே! (7)
  • பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
  • பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
  • கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
  • குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
  • மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
  • மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
  • தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
  • தேவர்க்கும் அரிதான சாயி போற்றி! (8)
  • கொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா
  • கும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்!
  • அண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,
  • அன்னைபல ராவதெதும் புதுமை யன்றே!
  • வண்டமரும் தாமரையாய்ப் பாதம் கண்கள்
  • வணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்
  • கொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி!
  • கொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ! (9)
  • எம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே!
  • எல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே!
  • இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே!
  • ஏழிசையில் நாதமென நின்றாய் நீயே!
  • செம்மைக்குள் சேர்க்கின்ற செய்யோன் நீயே!
  • சிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே!
  • அம்மையென அப்பனென ஆனோன் நீயே!
  • ஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்! (10)
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0