சுவாமியுடன் உரையாடல்கள்

சுவாமியுடன் உரையாடல்கள்

கேள்வியும் பதிலும்

பகவான்: பாரதம் ஒரு யோகபூமி, பாரதம் புண்யபூமி, பாரதம் கர்மபூமி, பாரதம் தியாகபூமி. இங்கே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், ஆன்ம சாதகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனின் அணுக்கத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். இதனால் கடவுள் அவதாரம் இங்கே எடுக்க வேண்டியதாகிறது. அவர்களுடைய தீவிர வேண்டுதலுக்கும் பிரார்த்தனைக்கும் இணங்க, தனது பெரும் கருணையால், பூமியில் அவதரித்து நம்மிடையே கடவுள் உலவுகிறார். பக்தர்கள் அப்போது ஆனந்தத்தை அனுபவித்து, அவரைப் பின்தொடர்கின்றனர்.

ஓர் உதாரணம்: எப்போதும் கடவுள் ஏன் பாரதத்திலேயே அவதரிக்கிறார் என்று கேட்டீர்கள். ஒரு ரயிலில் முதலில் ஒரு எஞ்சினும் அதன் பின்னே பல பெட்டிகளும் இருக்கும். எஞ்சினில் உண்டாகும் ஆற்றல் பெட்டிகளை எல்லாம் இழுக்கிறது. அதன் டிரைவர் எதில் இருப்பார்? அவர் எஞ்சினில் உட்கார்ந்துகொண்டு ரயிலை மேற்பார்வை செய்வார், அல்லவா? அதுபோலவே, உலகமென்னும் ரயிலுக்கு, பாரதம் ஓர் எஞ்சினைப்போல, தன்னுடன் இணைந்த மற்ற தேசங்களையும் இழுக்கிறது.

கடவுள்தான் ஓட்டுநர். அவருக்கான இடம் எஞ்சின். எப்படி எஞ்சினில் வெப்பமும் ஆற்றலும் உண்டாகின்றனவோ அதுபோலவே, யாக யக்ஞங்களால் வெப்பமும் ஆற்றலும் பாரதத்தில் அவ்வப்போது உண்டாகின்றன.

ராமாயண காவியத்தில், அர்ஜுனனும் பீமனும் யுதிஷ்டிரரின் பின்னே செல்வதைப் பார்க்கிறோம். அமெரிக்காதான் அர்ஜுனன், ரஷ்யா பீமன். எப்படி அர்ஜுனனும் பீமனும் யுதிரிஷ்டிரரின் ஆணையைப் பின்பற்றுகிறார்களோ, அப்படி ரஷ்யாவும் அமெரிக்காவும் பாரதத்தைப் பின்பற்ற வேண்டும்.

‘பாரத’ என்ற பெயரில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. பா என்ற முதல் எழுத்து பாவம் அல்லது உணர்வைக் குறிப்பது; ர என்னும் இரண்டாம் எழுத்து ராகத்தைக் குறிக்கும்; த என்னும் மூன்றாம் எழுத்து தாளத்தைக் குறிக்கும். இப்படியாக, பாரத நாட்டில் கடவுளின் மஹிமை சரியான பாவ, ராக தாளத்துடன் இசைக்கப்படுகிறது. இந்த நாட்டுக்கு ‘ஹிந்துதேசம்’ என்ற பெயரும் உண்டு; அதன் பொருள் அஹிம்சையைக் கடைப்பிடிக்கும் நாடு என்பதாகும். ‘ஹிம்’ என்றால் ஹிம்சை, ‘து’ என்றால் ‘தூர’ அல்லது ஒதுக்குவது. இந்தக் காரணங்களால் கடவுள் பாரத தேசத்தில் அவதரிக்கத் தீர்மானித்தார்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரிய அனில் குமார் காமராஜு

பகவான்: ஹிந்துக்கள் அப்படிக் கூடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மற்றவர்களைப் போல அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திக்கவேண்டியதில்லை. ஏன்? ஹிந்துவின் வீட்டில் பூஜையறை என்று ஒன்று வழிபாட்டுக்காகவே இருக்கிறது. அவன் அங்கே தினமும் பிரார்த்திக்கிறான். எனவே அவன் கூட்டுப் பிரார்த்தனைக்காக அல்லது குறிப்பிட்ட நாளில் பிரார்த்தனைக்கு என்று மற்ற மதத்தினர் போல ஒன்றுசேர வேண்டியதில்லை.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: இதுவொரு முட்டாள்தனமான கேள்வி. நீங்கள் உங்களுடைய அறியாமையையும், மனப்பிறழ்வான ‘நாகரீகச்’ சிந்தனைப் போக்கையும் காண்பிக்கிறீர்கள். சொல்வதற்கும் அனுபவத்துக்கும் தொடர்பே இல்லை.

நீங்கள் கடவுள் எங்குமிருக்கிறார் என்கிறீர்கள். அது வெறும் உரத்த வாய்ப் பேச்சுதான். கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிற வலிமையான நம்பிக்கை உங்களிடம் உள்ளதா? அந்த சர்வ வியாபகமான தெய்வீக அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? வெறும் கிளிப்பிள்ளை போலப் பேசுகிறீர்கள்.

இதோ ஒரு சிறிய உதாரணம். பசுவின் உடலெங்கும் ரத்தம் இருக்கிறது. ஆனால், அதன் மடியிலிருந்துதான் பாலைக் கறக்கமுடியும்! காதைப் பிழிந்தோ, வாலை முறுக்கியோ பாலைப் பெறமுடியாது, அல்லவா? அதுபோலவே, எங்கும் நிரம்பிய கடவுளைக் கோவிலிலும் புண்யஸ்தலத்திலும் உருவகித்து அனுபவிக்க முடியும்.  

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: நிச்சயமாக அதில் பொருள் உள்ளது. தவம் செய்ய ஏன் காட்டுக்குப் போனார்கள்? இதோ ஓர் உதாரணம். ஒரு நகரத்தில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் கடைகள் இருக்கும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் உன்னைக் கவரும். இசை, தின்பண்டங்கள், துணிமணிகள் எல்லாம் உன்னைக் கவர்ந்திழுக்கும். உன் கண்முன்னால் இருப்பதால் அந்தப் பொருட்கள் உன்னை ஈர்க்கின்றன. ஆனால் ஒரு காட்டில் உன் கவனத்தை ஈர்க்கவோ, திசை திருப்பவோ எதுவும் இல்லை.

தியானம் செய்வதற்கான சாந்தமும் அமைதியும் பெறுவதற்குத் தனிமை உதவுகிறது. அது ஆன்மீக வாழ்க்கைக்கு இசைவான சூழலைத் தருகிறது. எனவேதான் ரிஷிகளும் முனிவர்களும் காடுகளுக்குப் போய்த் தவம் செய்தார்கள். சொல்லப் போனால் “forest” என்பது ஆன்மீகரீதியாக “for rest”.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: மனிதர்களிடையே ஒற்றுமை வேற்றுமை என்னும்போது நீங்கள் தெளிவாக ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்குக் காரணம் என்ன? இன்றைக்கு இரண்டு நபர்களுக்கிடையே புரிதலே இல்லை. புரிதல் இல்லாததால்தான் எல்லாவகை சண்டைகள், விரோதம், வேறுபாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

எனவே, ஒருவருக்கொருவர் இசைந்து போவதில்லை. புரிதல் இருந்தால்தான் இசைவு (adjustment) இருக்கும். ஆனால் இன்றைக்கு நீங்கள் எதிரெதிர்த் திசைகளில் நகர்கிறீர்கள். முதலில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். அது தவறு. முதலில் புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அட்ஜஸ்ட்மெண்ட் எளிதாகிவிடும்.

ஒரு சிறிய உதாரணம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால், அலுவலகத்திலிருந்து நீங்கள் தாமதமாக வீடு திரும்பினாலும் அவர் பொருட்படுத்துவதில்லை. அவர் உங்கள்மீது பரிதாபமும் பரிவும் கொள்கிறார். அக்கறையோடும் அன்போடும் உங்களுக்கு காப்பி கொடுக்கிறார். ஒருவேளை சிறிதளவு தவறான புரிதல் இருந்தால், ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும், வீட்டில் ஓர் உள்நாட்டுப் போரே நடக்கும்.

ஏன்? புரிதலின்மையின் காரணமாக அவரால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவதில்லை. “இவ்வளவு நேரமா எங்கே போயிருந்தீங்க? யார்கூட இருந்தீங்க?” என்றெல்லாம் கேள்வி கேட்பார். ஆகவே, சரியாக இசைந்து வாழ, புரிதல் மிகவும் அவசியம். இதைப் புரிந்துகொண்டால், சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன.

புற்றை சுப்ரமணியராக வழிபடுகிறார்கள், பறவையை விஷ்ணுவின் வாஹனமாக மதிக்கிறார்கள், ஸ்ரீ கிருஷ்ணர் தூக்கிய கோவர்த்தன மலை ஆன்மீகரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது, அஸ்வத்த விருக்ஷம் (அரசமரம்) கூட வழிபடப்படுகிறது. நமது சாஸ்திரங்களின்படி எல்லாமே தெய்வீகம்தான். இது மூடநம்பிக்கையல்ல.

இது ஒருபோதும் குருட்டு நம்பிக்கையும் கிடையாது. சனாதன தர்மம் நம்மை எல்லா இடத்திலும் தெய்வீகத்தை உணர்ந்து அனுபவிக்கச் சொல்கிறது. இதுதான் ஆன்மீக வழி. இதுதான் மிகவுயர்ந்த, புனிதமான அனுபவம்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன.

புற்றை சுப்ரமணியராக வழிபடுகிறார்கள், பறவையை விஷ்ணுவின் வாஹனமாக மதிக்கிறார்கள், ஸ்ரீ கிருஷ்ணர் தூக்கிய கோவர்த்தன மலை ஆன்மீகரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது, அஸ்வத்த விருக்ஷம் (அரசமரம்) கூட வழிபடப்படுகிறது. நமது சாஸ்திரங்களின்படி எல்லாமே தெய்வீகம்தான். இது மூடநம்பிக்கையல்ல.

இது ஒருபோதும் குருட்டு நம்பிக்கையும் கிடையாது. சனாதன தர்மம் நம்மை எல்லா இடத்திலும் தெய்வீகத்தை உணர்ந்து அனுபவிக்கச் சொல்கிறது. இதுதான் ஆன்மீக வழி. இதுதான் மிகவுயர்ந்த, புனிதமான அனுபவம்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’ பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: இந்த தேசத்தை நீ காக்க வேண்டியதில்லை. சத்தியம், தர்மம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரண்டு தத்துவங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காக்கும். இந்தப் பிரபஞ்சத்தை அதன் விரிவு மற்றும் வியாபகத்துடன் சேர்த்து நேசிக்கவேண்டும்.

எல்லோரையும் நேசி, எல்லோர்க்கும் சேவை செய். ஜாதி, மதம், தேசம் என்கிற குறுகிய எல்லைகளைத் தாண்டி நீ மேலெழ வேண்டும். மானுடத்தின் சகோதரத்துவம் மற்றும் தெய்வத்தின் தந்தைமையில் நீ நம்பிக்கை வைக்கவேண்டும். ஒருபோதும் காலத்தை வீணாக்கக் கூடாது. நீ பிறந்து, வளர்ந்து, சம்பாதித்து, பெயர் வாங்கிய சமுதாயத்துக்கு நீ நன்றி செலுத்த வேண்டும். தேசபக்தி கொண்டிரு. சமுதாயத்தில் ஒற்றுமை, இணக்கம், அமைதி, பாதுகாப்பு இவற்றை நீ கடைப்பிடிப்பதோடு, வளர்க்கவும் வேண்டும்.

மனிதப் பண்புகளை வளர்த்துக்கொண்டு உன்னுள் இருக்கும் தெய்வீகத்தை உணரவேண்டும். நேர்மையில்லாத வணிகம், மனிதத்துவமில்லாத அறிவியல், நன்னடத்தை இல்லாத கல்வி ஆகியவை பயனற்றவை என்பது மட்டுமல்லாமல் ஆபத்தானவையும்கூட. நீ ஒரு செம்மையான லட்சிய மனிதனாக இருக்கவேண்டும். நீ கடவுளிடமிருந்து வந்தவன். நீ ஒரு தெய்வீகப் பொறி. எனவே உனது குணங்களும் தெய்வீகமானவையாக இருக்க வேண்டுமே அல்லாது அரக்கத்தனமாக இருக்கக்கூடாது. “நான் மனிதன்” என்கிறாய். இது பாதியளவு உண்மையே. உன்னிடம் மிருககுணம் மனிதகுணம் இரண்டும் இருக்குமானால், உன் மனம் இரட்டையாக இருக்கிறதெனப் பொருள்படும். இரட்டை மனம் கொண்டவன் அரைக்குருடன்.

நீ ஆசைக்கு வரம்பு கட்டினால் மகிழ்ச்சியைப் பெறுவாய். எவனொருவன் அதிக ஆசைகளைக் கொண்டிருக்கிறானோ அவனே வறியவன். மனநிறைவு கொண்டவனே மிகப்பெரும் செல்வந்தன். பணத்தைவிடக் குணம் அதிக முக்கியமானது.

வாழ்க்கையின் நோக்கம் மற்றும் லட்சியத்தை நீ அறியவேண்டும். உண்ணவும், பருகவும், உறங்கவும் மட்டுமே அல்ல வாழ்க்கை. விலங்குகளும்கூட அதைச் செய்கின்றன. அப்படியானால் உன்னுடைய சிறப்புத்தன்மை என்ன? உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை அறிந்து, அனுபவித்து, உணர்வதற்கென இந்த வாழ்க்கையை இறைவன் உனக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளான். ஒழுக்கமும் நேர்மையும் மிகவும் முக்கியம். ஒழுக்கமே தேசத்தின் நடத்தைப் பண்பாக இருக்கவேண்டும். ஒரு தெலுங்குப் பாடல் கூறுகிறது:

ஒழுக்கமில்லாவிட்டால் நீ குரங்கினும் கீழானவன்

எந்த நாடு உண்மையில் மிகவுயர்ந்த ஒழுக்கத்தையும்

தனித்துவத்தையும் காக்கிறதோ

அந்த நாடே நாடெனப்படத் தகுதி கொண்டது.

பின்வரும் மூன்று முக்கிய விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: முதலாவது: உலக நடப்பை நம்பாதே; சில சமயம் அது உன்னை மயக்கத்தில் ஆழ்த்தி, மனம் தடுமாற வைப்பதோடு, ஏமாற்றியும் விடும். இரண்டாவது: உன்னுடன், உனக்குள், உனக்கு மேலே, கீழே எப்போதும் இருக்கும் கடவுளை மறக்காதே. இல்லை, நீயேதான் கடவுள். மூன்றாவது: மரணத்துக்கு அஞ்சாதே, அது நிச்சயம் வந்தே தீரும். உண்மையில் மரணமே வாழ்க்கையின் மேலாடை. எண்ணம், சொல், செயல் இவற்றில் ஒருமைப்பாடு கொள்வதன்மூலம் வாழ்க்கையின் புனிதப் பாதையைக் கடைப்பிடி.

இன்னொன்றையும் நீ கவனிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மனதைத் திற, வாயை மூடு. இன்றைக்கு மனிதர்கள் நினைப்பதொன்று சொல்வதொன்றாக இருக்கிறது. அவர்கள் உள்ளங்களில் பொறாமை, கர்வம் இன்னும் என்னென்னவோ நிரம்பி இருக்கின்றன. நீ உன் உள்ளத்தைத் திறந்து, அதை மாசுபடுத்தும் அனைத்தையும் நீக்கவேண்டும், வாயை மூடிவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உன் வாழ்க்கையைச் சேவைக்கு அர்ப்பணித்துவிடு. உனது இறுதி இலக்காகவும் நோக்கமாகவும் கடவுளே இருக்கட்டும். “சமுதாயத்தில் கரங்கள், காட்டில் மனம்” என்று நான் சொல்வதன் பொருள் இதுவே.

நீ உனது அரிய அறிவையும் மதிப்புமிக்க அனுபவத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். நீ சாயியின் அருட்செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலில் உன்னில் நம்பிக்கை கொள், பிறகு கடவுளை நம்பலாம். இன்றைய பிரச்சனைகளின் உண்மையான காரணம் எதுவென்றால், உன்னிடமே உனக்கு நம்பிக்கை இல்லாததுதான். உனக்குத் தன்னம்பிக்கை இல்லை.

கிராம சேவையே ராமசேவை என்று கருது. ஊர்ப்புறச் சேவை கடவுளின் சேவை. சுகாதாரம், உடல்நலம், தூய்மை குறித்துக் கிராமத்தினருக்கு விளக்கிச் சொல். மருத்துவ முகாம்கள் நடத்து. எல்லோருக்கும் தண்ணீர், குறிப்பாகக் குடிநீர், வழங்க ஏற்பாடு செய். புகைபிடித்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றின் தீமைகளை விளக்கிச் சொல். இந்தக் கெட்ட பழக்கங்களை விட்டுத்தள்ள அவர்களுக்கு உதவு.

உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடன் பணி செய்தால், தக்க காலத்தில் அவர்கள் தனியாகவே பணிகளை செய்துகொள்ளவும் தற்சார்பு கொள்ளவும் சக்தி பெறுவார்கள். மானவ சேவையே மாதவ சேவை. தியானம், தவம், வழிபாடு, ஜபம் ஆகியவற்றைவிடச் சேவை மிகப்பெரிய உயர்ந்த ஆன்மீக சாதனையாகும். வறியோர்க்கு, தேவை உள்ளவர்க்குச் சேவை செய்.

தன்னலமாக இராதே. பொறாமை, கர்வம், பற்று இவற்றுக்கு இடம் கொடாதே. பக்தி, சத்தியம், கட்டுப்பாடு, பரந்த மனப்பான்மை முதலிய பண்புகளை வளர்த்துக்கொள். ஆடம்பரம், கர்வம், அகங்காரம் ஆகியவற்றை அனுமதிக்காதே. தீய குணங்கள் புலிகளைப் போன்றவை, ஆனால் நற்குணங்கள் பசுக்களைப் போன்றவை. புலிகள் எங்கேனும் பசுக்களை வாழவிடுமா? விடாது. ஆகவே உன் இதயத்தில் தீய குணங்களை வைத்திருக்காதே. உயர் மனிதப் பண்புகளை மேலும் மேலும் உன்னில் வளர்த்துக்கொள். உனது லட்சியங்களுக்கேற்ப வாழ்க்கை நடத்து.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது. அரசர் கிருஷ்ணதேவராயருக்கு வழிகாட்டியும் குருவுமாக இருந்தவர் வித்யாரண்யர் என்பதும், சக்ரவர்த்தி சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் குரு என்பதும் உங்களுக்குத் தெரியும்.

ராமரும் லக்ஷ்மணரும் மகரிஷி விஸ்வாமித்திரரைப் பின்பற்றிச் சென்று, அவரிடம் வில்வித்தை கற்றனர்; காட்டில் வேள்வியைக் குலைத்த கரன், தூஷணன் என்னும் அரக்கர்கர்களைக் கொன்றனர். இவ்வாறாக, விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களின் வீரத்தையும் திறமையையும் உலகறியச் செய்தார். அவர் ராமருக்கு மிகப்புனிதமான காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். சீதையுடன் ராமரின் தெய்வீகத் திருமணம் நடக்க அவரே காரணம்; அது பிரகிருதியுடன் (பொருள்) புருஷனின் (ஆற்றல், பரம்பொருள்) ஒன்றிணைந்ததாகும். அவரே விஸ்வத்துக்கு (பிரபஞ்சத்துக்கு) மித்திரர் (நண்பர்) என்பதால் அப்பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.

மனிதகுலத்துக்கு காயத்ரி மந்திரத்தைக் கொடுத்தவர் விஸ்வாமித்திரரே. ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்த காரணத்தால் தன்னை வசிஷ்டர் ‘பிரம்மரிஷி’ என்று அழைக்கவேண்டுமென விஸ்வாமித்திரர் விரும்பினார். அவர் எப்போதும் வசிஷ்டருடன் போட்டியும் பொறாமையும் பூண்டிருந்தார். அவரைக் கொல்லவும் தீர்மானித்தார். ஒரு பௌர்ணமி இரவில், வசிஷ்டரின் தலைமீது போடுவதற்காகத் தன் கையில் ஒரு பெரிய பாறையை வைத்துக்கொண்டு காத்திருந்தார்.

அந்தச் சமயத்தில், வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியிடம், “நிலவு எத்தனை பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது பார்; அதற்கு இணை விஸ்வாமித்திரர் தவத்தின் சக்தியே” என்று கூறுவதைக் கேட்டார்.

அவர் மனம் மாறியது. வசிஷ்டரின் கால்களில் போய் விழுந்தார். அகங்காரம் அழிந்த விஸ்வாமித்திரரை வசிஷ்டர் “பிரம்மரிஷி” என்று அழைத்தார்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார், அவளது குழந்தைகளான லவ, குசர்களை வளர்த்தார்; அவர்களுக்கு வில்வித்தையும் கலைகள் அனைத்தையும் புகட்டினார். அவ்வாறாக அவர் ராமாயணத்தில் ஒரு முக்கியப் பங்கை வகித்தார்.

ராமாயணத்தை எழுதிய பின்னர், அந்த மகா காவியத்தை எப்படிப் பரப்பலாம் என ஆழ்ந்து யோசித்தார். அந்தக் கட்டத்தில், லவனும் குசனும் முன்வந்து, வால்மீகி மற்றும் பிற ரிஷிகளின் முன்னிலையில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டனர்: “நாங்களே ராமாயணத்தைப் பாடி, அந்த அமுதத்தை உலகத்தவர்க்கு எடுத்துச் செல்கிறோம்” என்பதே அந்தச் சபதம்.

இவ்வாறு, ராமபிரானின் காலத்தில் வாழ்ந்து, தெய்வீகமான ராமாயணத்தைப் புனைந்ததுடன் அதனை ராமரின் சன்னிதியில் இசைக்கவும் பெறுவதான தன்னிகரில்லாப் பெருமையை வால்மீகி அடைந்தார். உலக ரட்சகரும், தனது கவிதையின் நாயகனுமான ராமபிரானின் லட்சியங்கள் மற்றும் தெய்வீகத்தை உலகம் முழுவதும் அறியச் செய்தவர் வால்மீகியே. இவ்வாறு திரேதா யுகத்திலிருந்தே மானுடத்திலிருந்த தெய்வீகம் ஒளிவீசத் தொடங்கியது.

மனிதனின் தர்மத்தை மனித குலத்துக்கு உணர்த்துவதே ராமாவதாரத்தின் நோக்கம். இன்றைக்கு அதேதான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கவனித்திருக்கலாம், இன்றைய அவதாரத்திலும், சமகாலத்தவர்களே வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார்கள், தெய்வீகத்தை ஏற்கிறார்கள், வழிபடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள், உலகெங்கிலும் கொண்டாடுகிறார்கள். இவையனைத்தும் இந்த அவதாரத்தின் காலத்திலேயே நடக்கின்றன என்பது ராமாவதாரத்துடன் ஒப்புமை உடையதாகும். அதே லட்சியம்! அதே பிரேமை! சத்யம், தர்மம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச் சொல்லும் அதே செய்தி!

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: ஜனகர் ஒரு ராஜயோகி, பெரிய ஞானி, உடல் பிரக்ஞையே இல்லாதவர். அதனால் அவர் விதேஹர் (உடற்பற்று இல்லாதவர்) என அறியப்பட்டார். அவரது மகளான சீதை, வைதேஹி என அறியப்பட்டாள். மிகுந்த குரு பக்தியும், சிறந்த சாஸ்திர ஞானமும், பற்றின்மையும் கொண்டவர் ஜனகர். அவர் சீதையின் திருமணத்தைக் கடமையாகக் கருதிச் செய்தார். பின்னாளில் ராமர் சீதையுடனும் லட்சுமணருடனும் வனவாசம் சென்றார். அவர்கள் காட்டில் பல ஆண்டுகள் இருந்தபோதும், ஜனகர் காட்டுக்குள் கால் வைக்கவே இல்லை. அவர் அத்தனை ஞானச்செல்வமும் வைராக்கியமும் கொண்டிருந்தார்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: அத்வைத ஸ்தாபகரான ஆதிசங்கரர் சிறுவயதிலேயே சமாதியடைந்தது உண்மைதான். பிரஸ்தானத்ரயம் என்று அறியப்பட்ட உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஞான மார்க்கத்தை வலியுறுத்தி அவர் உரை எழுதினார். பல பக்தி ஸ்தோத்திரங்களை எழுதினார். தேசமெங்கிலும் சஞ்சாரம் செய்து பீடங்களை (பக்தி மற்றும் ஆன்மீகக் கல்விக்கான மையங்கள்) ஸ்தாபித்தார். சனாதன தர்மம் என்னும் புராதனமான, காலத்தைக் கடந்த, இந்திய ஆன்மீகக் கலாசாரத்தின் அடையாளம் அவர்.

மிகப்பழமையான புண்யத் தலமான காசிக்கு அவர் சென்றார். அங்கே விஸ்வநாதரிடம் அவர் தனது மூன்று தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார். முதல் தவறு, தான் சொல்வதற்கு எதிராகத் தானே நடந்துகொண்டது. ‘வாசுதேவஸ் ஸர்வமிதி’ (கடவுள் எங்குமிருக்கிறார்) என்று கூறியபோதிலும், கடவுளைப் பார்க்கக் காசிக்கு வந்த தவறு.

இரண்டாவது தவறு, கடவுள் நமது விளக்கத்துக்கோ வர்ணனைக்கோ அப்பாற்பட்டவர் (யதோ வாசோ நிவர்த்தந்தே) என்றபோதும் தெய்வீகம் குறித்து நூல்கள் எழுதியது.

மூன்றாவது தவறு, ஒரே கடவுள் பலவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட போதிலும் (ஏகோஹம் பஹுஸ்யாம்), எல்லோருக்குள்ளும் அதே கடவுள் இருந்த போதிலும் (ஆத்மவத் சர்வபூதானி), அந்த உள்ளுணர்வு எல்லோருக்குள்ளும் இருந்தபோதிலும் (ப்ரக்ஞானம் பிரம்மா), தனது சிஷ்யர்களைத் தன்னிலிருந்து வேறாகக் கருதிப் பல மடங்களை ஸ்தாபித்தது.

அவருடைய வாழ்க்கை குறித்து இன்னொரு சம்பவமும் கேள்விப்பட்டிருக்கலாம். சன்னியாசம் மேற்கொள்ள அவர் தன் அன்னையிடம் அனுமதி வேண்டினார். முதலில் அன்னை அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருநாள் சங்கரர் அருகிலிருந்த நதிக்கு நீராடச் சென்றார். திடீரென்று ஒரு முதலை அவரது காலைக் கவ்விக்கொண்டது. சங்கரர், “அம்மா, அம்மா, இந்த முதலை என்னைத் தண்ணீருக்குள் இழுக்கிறது. சன்னியாசி ஆவதற்கு நீ என்னை அனுமதிக்காவிட்டால் அது என்னை விடாது” என்று அவர் கதறினார்.

இறுதியாக அவருடைய அன்னையார் அனுமதி கொடுத்ததும் முதலை சங்கரரை விட்டுவிட்டது. இதன் உட்பொருள் என்னவென்றால், நதி என்பது உலகவாழ்க்கை (சம்சாரம்), முதலை என்பது விஷயம் (புலனின்ப நாட்டம்). சன்னியாசம் அல்லது பற்றின்மையே இவற்றிலிருந்து விடுதலை தருவது.

தனக்கென ஏற்றுக்கொண்ட பணிகளைச் செய்து முடித்தவுடனே சங்கரர் தனது உடலை உதறித் தள்ளினார். ஏனென்றால் அவரது சீடர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டு தொடர்வார்கள் என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. அவர்கள்தாம் அத்வைத சித்தாந்தத்தின் ஒளியை உலகெங்கிலும் பரப்பப் போகிறவர்கள். அவர்களும் அந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கான உயர்தகுதியும் மேன்மையும் கொண்டிருந்தனர்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: உலகெங்கிலும் பக்திப்பாடல்களை இயற்றிய பக்தர்கள் பலர் உள்ளனர். பகவானும் அவர்களை ஆசிர்வதித்தார். இந்தப் பாடல்கள் உனக்குப் பேரானந்தமும் அமைதியும் தருகின்றன. ஆனால், தியாகராஜரின் கிருதிகளுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அவரது ஒவ்வொரு பாடலும் அவர் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றோடு தொடர்பு கொண்டது.

உதாரணமாக, தஞ்சாவூர் மஹாராஜா அவருக்கு நகைகள், மளிகைப் பொருட்கள், விலையுயர்ந்த அன்பளிப்புகள் எல்லாம் அனுப்பியபோது, தியாகராஜர் மென்மையாக, மரியாதையோடு அவற்றை மறுத்தார்; அவர் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளும் ஒரு கிருதியாக அதை எழுதினார், “நிதி சால சுகமா ராமுனி சன்னிதி சேவ சுகமா?” என்று. அதாவது, ‘பணம் உன்னைச் சந்தோஷப்படுத்துகிறதா இல்லை பகவானின் சன்னிதியா?’ என்பது பொருள்.

அவருடைய சகோதரர் ஒருமுறை தியாகராஜர் பூஜித்த விக்கிரகங்களை காவேரி நதியில் தூக்கி எறிந்துவிட்டார். இந்த இழப்பைக் குறித்துத் தியாகராஜர் பரிதாபமாக அழுதார். ஒருநாள் காவேரியில் நீராடிக் கொண்டிருக்கையில் ராமரின் கருணையால் அந்த விக்கிரகங்கள் திரும்பக் கிடைத்தன. அவற்றைத் தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அவர், “ராரா மா இன்டி தக ரகுவீரா சுகுமாரா” (ஸ்ரீராமா என் வீட்டுக்கு வா) என்று பாடினார்.

அரசவையில் நடந்த ஒரு கச்சேரியில் அவர் அங்கிருந்த மகான்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, “எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு” (ஏராளமான மகான்கள் இங்கு உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் என் வந்தனம்) என்று பாடினார். இதுபோல, தியாகராஜர் இயற்றிய ஒவ்வொரு கிருதியும் வாழ்வின் உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவை. அவருடைய பாடல்கள் பக்தி மற்றும் சரணாகதியை நடைமுறையில் விளக்குகின்றன.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: கடவுளுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. நாம் அவரை குணம் குறிகள் கொண்டவராகவும், அவை இல்லாதவராகவும் அனுபவிக்க முடியும். நீங்கள் ஒன்றை முக்கியமாக அறியவேண்டும்: குணங்களிலே கடவுள் இருக்கிறார். அவை அவரிடம் இல்லை. தம்மில் தெய்வீகம் இல்லையெனில் குணங்களால் செயல்பட முடியாது. தங்கம் ஆபரணத்தில் இருக்கிறது, ஆனால் ஆபரணம் தங்கத்தில் இல்லை. பானைகள் களிமண்ணால் செய்யப்படுகின்றன, ஆனால், களிமண் பானையால் செய்யப்படுவதில்லை. வெள்ளிப்பொருள், ஒரு கிண்ணமோ தட்டோ, வெள்ளியால் செய்யப்படுகிறது. ஆனால் கிண்ணமோ தட்டோ வெள்ளிக்குள் இல்லை.

மற்றோர் உதாரணம், மின்விளக்கு எரியும், மின்விசிறி சுற்றும், ரேடியோ, டி.வி. போன்றவை மின்சாரக் கருவிகளுக்குச் செயல்பட மின்சாரம் தேவை. ஆனால் இவற்றில் எவையுமே மின்சாரத்துள் இல்லை. அதுபோலவே, கடவுள் குணங்களில் இருக்கிறார். ஆனால் குணங்கள் கடவுளில் கிடையாது. எனவே, ஒருவகையில் நாம் கடவுள் குணங்குறி உள்ளவர் என்று கூறலாம். அதே நேரம் அவர் குணங்குறி அற்றவரும் கூட. அதாவது அவர் சகுணமும், நிர்குணமும் ஆவார்.

ஒவ்வொரு மனிதனிடமும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. ஆனால் அவனது எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் இம்முன்றில் ஒன்று மற்ற இரண்டைவிடத் தூக்கலாக இருக்கிறது. இந்த மூன்று குணங்களையும் கடந்தாலொழிய நாம் உண்மையிலேயே கடவுளை உணரமுடியாது.

ஓர் உதாரணம்: நீ உன் நெஞ்சைப் பார்க்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

முதலில் உன் மேல்கோட்டு, அடுத்துச் சட்டை, பின்னர் பனியன் இவற்றை அகற்றவேண்டும், அல்லவா? அதுபோலவே, உன் நெஞ்சு என்னும் தெய்வீகத்தைப் பார்க்கவேண்டுமென்றால், முதல் தமஸ் என்கிற மேல்கோட்டை நீக்கவேண்டும், பிறகு ரஜஸ் என்கிற சட்டையை நீங்கவேண்டும், அடுத்து சத்வம் என்னும் பனியனை நீக்கவேண்டும்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளை நினைத்தால் அவரை ஒரு பெரிய மீனாகத்தான் கற்பனை செய்யும். அப்படியே, ஒரு எருமைமாடு கடவுளை நினைத்தால் அதனால் ஒரு பெரிய எருமைமாடாகத்தான் கடவுளை நினைக்க முடியும். அதுபோல, மனிதன் கடவுளை மனிதவடிவில் இருப்பதாகத்தான் – ஒரு லட்சிய மனிதனாக – எண்ணுவான்.

உருவமுள்ள கடவுளை ஆதாரமாகக் கொண்டு, உருவமற்ற கடவுளைக்கூடத் தியானிக்கமுடியும். ஓர் உருவம் இல்லாமல், உருவமற்றதை வருவிக்க முடியாது.

இதோ ஒரு சிறிய உதாரணம்: நீங்கள் எல்லோரும் கொடைக்கானலில் ஒரு ஹாலில் சுவாமி முன்னால் உட்கார்ந்து சுவாமி பேசுவதைக் கேட்கிறீர்கள். இது உருவத்தோடு கூடியதொரு அனுபவம். பின்னர் நீங்கள் வீட்டுக்குப் போகிறீர்கள். சில நாட்களுக்குப் பின்னால், இங்கே நடந்ததை மீண்டும் யோசித்துப் பார்க்கிறீர்கள். இந்தக் காட்சி முழுவதையும் மனக்கண்முன் கொண்டுவருகிறீர்கள். சுவாமி உங்கள் இடத்துக்கு உண்மையில் வருகிறாரா? இந்த அறை உங்கள் வீட்டில் உள்ளதா? இங்கிருக்கும் எல்லோருமே அங்கே இருக்கிறீர்களா? இல்லை. இந்த நேரடி அனுபவத்தை நீங்கள் மனதில் சித்திரிக்கும்போது, உங்களுக்கு இங்கிருப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது. இங்கு நீங்கள் பார்ப்பது சாகாரம் (வடிவம் உடையது), அங்கே அனுபவிப்பது நிராகாரம் (வடிவம் இல்லாதது). ஆக, உருவற்றதன் ஆதாரம் உருவத்தில் உள்ளது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

மற்றோர் உதாரணம்: இங்கே பால் இருக்கிறது. அதைக் குடிக்கவேண்டும். அதற்கு ஒரு கிண்ணம் அல்லது தம்ளர் தேவை, அல்லவா? அதுபோலவே கடவுளை (பால்) வழிபட ஒரு வடிவம் (கிண்ணம்) தேவைப்படுகிறது.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: என் கருத்துப்படி இரண்டுமே சமமானவைதாம். இரண்டில் எதுவும் மற்றதைவிட உயர்ந்ததல்ல. இப்போது நீ கோயம்புத்தூரில் இருக்கிறாய். இங்கே நிலம் எல்லா இடத்திலும் சமதளமாக இருக்கிறது; யாரும் அதைச் சமப்படுத்தவில்லை. இப்படி இந்த நிலத்தை யாரும் செய்யவில்லை. இது அடிப்படையில் கோயம்புத்தூரின் இயற்கை.

ஆனால், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளது. இங்கே எவரும் மலைகளை ஒட்டிப் பொருத்தவில்லை. அது அப்படியே உண்டானது. கோயம்பத்தூரும் கொடைக்கானலும் வேறு வேறானவை.

ஒவ்வொன்றுமே நிறைவானதுதான், அததற்கான வழியில் அப்படி உள்ளது.

அதுபோலவே, உருவம் அருவம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகளும், சத்தியத்தைத் தேடுவோருக்கும், ஆன்மீக சாதகர்களுக்கும் சமமாகவே பயன் தருபவை.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு, இலை, கிளைகள் என்று உண்டாகிக் கடைசியில் பூப் பூக்கிறது.

அந்தத் தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விதையிலிருந்து வந்த காரணத்தினால் அவற்றில் விதை மறைந்துள்ளது. இறுதியாக, பழத்தில் இருக்கும் விதைக்குள்ளே முதலில் விதைத்த விதை உள்ளது. அதுபோலவே கடவுள் பிரஞ்சம் அனைத்திலும் இருக்கிறார். உலகம் என்பது மரம், கடவுள்தான் விதை, அனைத்து ஜீவன்களும் உலகென்னும் மரத்தில் பழுத்த கனிகள்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0