பக்திக்கு மரணமில்லை

“Sairam! This is available only in Tamil”

  • சுவாமி உன் பக்தர்களுக்கு
  • மரணமே இல்லை
  • உன் பாதத்தில் மலராகவோ…
  • உன் கையில் கைக்குட்டையாகவோ…
  • மழைக்கு மரணம் இருக்கிறதா?
  • அதற்கு மறுபிறவி இருக்கிறதே தவிர
  • மரணம் இல்லையே
  • உன் கால்களில் விழுகிற போது
  • அருவியாகிறேன்
  • அது விழுவது என நினைக்கிறார்கள்
  • உன் கால்களில் விழுவது என்பது
  • எழுவது அல்லவா
  • ஆன்ம விழிப்பல்லவா உன்
  • பாதங்களில் விழும் போது ஏற்படுகிறது
  • உன் பக்தரை தேர்ந்தெடுத்த உடன்
  • மார்க்கண்டேயராய் அவர்களை
  • மாற்றி விடுகிறாய்
  • சித்ர குப்தனின் புத்தகத்தில்
  • உன் பக்தர்களின் பெயர்களே இல்லை
  • யம லோக வாசனை கூட
  • எந்த உன் பக்தர் நாசியும் நுகர்ந்ததில்லை
  • யம லோக வாசலைக் கூட
  • எந்த உன் பக்தர் கால்களும் நுழைந்ததில்லை
  • உன் பாதங்களில் விழுந்த பிறகு
  • பூமியும்
  • வைகுண்டமும் ஒன்றுதான்
  • வித்தியாசமேதும் இல்லை
  • உன் கரங்களில் வந்துவிட்ட பிறகு
  • பாரங்கள் என்பவை
  • ஈரங்களாய்க் காய்ந்துவிடுகிறது
  • உன் பெயரை உச்சரிக்கும் போது
  • உயிரை உச்சரிக்கும் ஆன்மாவாய்
  • சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது
  • சிவந்து போன உள்ளம்
  • ஏதாவது ஒரு பிறவியில்
  • ஏதேனும் ஒரு புண்ணியம்
  • தெரியாமல் செய்திருந்தாலும்
  • தெரிந்தே அவர்களை பக்தராய்
  • ஏற்றுக் கொள்கிறாய்
  • உலகத்தை எல்லாம்
  • உன் பக்தராய் மாற்ற மாட்டாயா சுவாமி?
  • சிறைச்சாலைகளுக்கும்…
  • நீதிமன்றங்களுக்கும்…
  • காவல் நிலையங்களுக்கும்…
  • விடுமுறை கொடுத்துவிடலாமே
  • உள்ளத்தை உன்னிடம்
  • கொடுத்துவிட்ட பிறகு
  • கவலைகளுக்கு எப்படி அதனை
  • தாரை வார்க்க முடியும்?
  • ஆன்மாவை உன்னிடம்
  • அள்ளிக் கொடுத்த பிறகு
  • பந்தபாசம் எப்படி அதனை
  • தத்து எடுக்க முடியும்?
  • உடம்பையும் உனக்கே கொடுத்துவிட்டேன்
  • நீதான் அதையும் தொட வேண்டுமே தவிர
  • மருத்துவர் அல்ல…
  • உயிர் உன்னையேச் சுற்றி வருகிறது
  • அதை கவனிக்கும்
  • மரணத்திற்கே தலை சுற்றுகிறது
  • விளக்கில் சுடர் அணைந்தால்
  • அதன் ஆவி பறக்கிறதே!
  • நீ மட்டும் தான் சுவாமி
  • பக்திச் சுடரை அணைய விடாமல்
  • இன்னொரு விளக்கிற்கு ஏற்றிவிடுகிறாய்
  • உன் பக்தராய்
  • என்னை வைத்திருக்கிறாய்
  • என்பதால் அந்த
  • மரணத்திற்கே பயமே தவிர
  • மரண பயமில்லை எனக்கு
  • உடல் சட்டைக் களைந்து
  • இன்னொரு சட்டை அணிந்தாலும்
  • உன் அடுத்த அவதாரத்திற்கே
  • அலங்காரம் ஆகுமே தவிர
  • அங்காடியில் எப்படி அது
  • வியாபாரமாகும்?
  • பக்தர்கள் நாங்களோ உன்
  • பொம்மைகள்
  • சுவாமி நீ ஒரு குழந்தை
  • எப்படி எங்களை
  • இன்னொருவர் கைகளில்
  • கொடுக்க முடியும் உன்னால்?
  • அது எவனானாலும்
  • அது எமனானாலும்
  • எவரிடமும் எங்களை நீ
  • விட்டுக் கொடுக்காமல்
  • உன்னிடமே நீ வைத்துக் கொள்கிறாய்
  • உன் புகைப்படத்தில்
  • நீ சிரிக்கும் ஒவ்வொரு கணமும்
  • மரணம் மரிக்கும்
  • உள்ளத்தில் நீ நடமாடும்
  • கணக்கற்ற நொடி நடக்கும்
  • எங்களின் நாடியோ
  • உன் பெயர் சொல்லியேத் துடிக்கும்
  • எமனின் பாசக் கயிற்றில்
  • என்றுமே அகப்படுவதில்லை
  • சுவாமி நீ வந்து கொண்டிருக்கும்…
  • சுவாமி நீ தந்து கொண்டிருக்கும்…
  • சுவாசக் கயிறு
  • கவிஞர் வைரபாரதி
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0