பக்தர் தரிசிக்க
- நீலமயில்மீது கோலவிழி பார்த்து வேலைக் கையில்
- கொண்டு, சேவலைக் கொடியில் கொண்டு,
- மாலன்மருகன் அவன் மயக்கும் சிரிப்புதனில்,
- பக்தர் வியக்கும் வகையில், வீதி உலா வருகிறான்
- வள்ளி தெய்வயானையுடன் பங்குனி உத்திரத்திலின்று
- திருமணக்காட்சி தனை ஒருமையுடன் பக்தர்கள்
- தரிசிக்கவே வண்ண மயில் மீதுவருகிறான்
- தந்தை சிவன் பார்த்திருக்க அன்னை உமை மகிழ்ந்திருக்க
- அண்ணன் விநாயகன் களித்திருக்கக் கலியுகக்
- கண்கண்ட தெய்வமாய்க் குன்றுகள்தோறும்
- நின்று அருள்பாலிக்க இருளகற்றியிருவினை
- நீக்கி இன்பம் தரவே வருகிறான்
- காவடிகள் புடைசூழக் குறிஞ்சிப் பண்பாடிப் பாத யாத்திரையில்
- பக்தர்கள் படை சூழக் கேள்விதனில் விடையாய்
- மடைதிறந்த வெள்ளமாய், அருட்பிரவாகத்துடன்
- கருணை செய்ய வருகிறான்
- ஆறுபடை வீடுகளின் ஆரவாரம் மேலோங்கப்
- பரிவாரங்களுடன் பக்தர் மனம் கமழப்
- பாங்குடனே தேர்வீதி வலம் வருகிறான்
- காவடிகளுக்குப் பஞ்சமில்லை உன் கருணை
- அன்புக்கும் பஞ்சமில்லை, நெஞ்சமெலாம் எல்லாம்
- நிறைந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி வாசனே
- சாயிசுப்பிரமணிய சுவாமியுந் தன்அருட்கொடை யில்
- பங்கம் இல்லை பாந்தம் மட்டுமே உண்டு
- சர்க்கரைப் பொங்கலிட்டு சந்தனத்தில் காப்பிட்டு
- பன்னீர் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து
- அழகு வாசனை மலர்களால் அர்ச்சித்து
- அலங்கரித்து ன்னை அனுதினமும் துதி பாடி
- பஜனைகள் பாடி நகர சங்கீர்த்தனம்
- செய்து சத்சங்கத்தில் சேவைகளாற்றி,
- உன்னருட்பிரபாவம் பற்றிப் பேசி, கண்டு,
- ரசித்து, லயித்துன் னன்புப் பிரசாதமும்
- ருசித்து, சந்ததிகளுடன் பந்தமாய்
- சாஷ்டாங்கமாய் உன்னைத் தொழுதிடுவோம்
- உன் பங்கயத் தாமரை மலர்க் கழல்களில்
- முகம் புதைத்துத் தொழுதிடுவோம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்