ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை

Sairam! This is available only in Tamil*

  • உலகளந்தாய் தாலேலோ!
  • வைகுண்டம் விட்டிறங்கி
  • வையகம் காக்கவந்த
  • வாசுதேவனே எங்கள்
  • சாயிதேவனே தாலேலோ!
  • தாரணியைக் காப்பதற்குத்
  • தானாய் இறங்கி வந்த
  • தாமோதரனே!பர்த்திப்
  • பெருமானே தாலேலோ!
  • வெங்காவ தூதரின்
  • வேண்டுதலுக்கிரங்கி வந்த
  • வேங்கட நாதனே!
  • ரத்னாகரக் குலவிளக்கே!
  • சத்யசாயி தாலேலோ!
  • சத்யபாமா வந்துமுன்னாலே
  • காத்திருக்க
  • சத்ய நாராயண பூஜை முடியக்
  • காத்திருக்க
  • தாமோதர தீர்த்தம் தாய்பருகிக்
  • காத்திருக்க
  • தானாய் உதித்து வந்த
  • தாமரையே தாலேலோ!
  • தேவகியின்
  • எட்டாம் கருவுதித்த
  • கண்ணனைப் போல்
  • ஈசுவரம்மாவின்
  • எட்டாம் கருவுதித்த
  • சாயிகிருஷ்ணா தாலேலோ!
  • அந்த ஆயர்பள்ளிதான் உந்தன்
  • கொல்லப்பள்ளியென்று
  • குவலயம் வணங்கிடுமே
  • கோபாலா தாலேலோ!
  • அவதாரமூர்த்தி நீ
  • அவதரிக்கும் போதினிலே
  • தானாய் இயங்கினவாம்
  • தம்புராவும் மத்தளமும்
  • ஆனந்தம் பாடினவாம்
  • தேவதைகள் ககனமெலாம்!
  • மானிடரின் நற்பேறும்
  • மாதவரின் வேண்டுதலும்
  • ஆதாரமானதய்யா உன்
  • அவதார நிகழ்ச்சிக்கு!
  • அக்க்ஷய வருஷம் தந்த
  • நவமணியே!
  • தெய்வப் பொக்கிஷமே!
  • எங்கள்
  • பொற்பதமே தாலேலோ!
  • ஈஸ்வரம்மா பெற்றெடுத்த
  • ஈஸ்வரனே தாலேலோ!
  • சிவசக்தியாய் வந்த
  • சிவபரனே தாலேலோ!
  • கார்த்திகைப் பூர்ணிமையாம்
  • மூன்றாம் திருநாளாம்
  • ஆருத்ரா நட்சத்திரத்தில்
  • சோமவாரம் பிறந்த
  • சொக்கேசா தாலேலோ!
  • சத்யம் பிறந்ததுவும்
  • நித்யம் பிறந்ததுவும்
  • செகம் காத்து நிற்க
  • செகந்நாதன் பிறந்ததுவும்
  • நவம்பர் மாதத்து
  • இருபத்து மூன்றில்தான்!
  • கர்மவினை போக்கவந்த
  • கனகேசா தாலேலோ!
  • காற்று மணத்து வர
  • ஆலய த்வஜஸ்தம்பம்
  • வரவேற்புப் பாட்டிசைக்க
  • அதிகாலை ஐந்தளவில்
  • அவதரித்த ஆண்டவனே
  • அற்புதனே தாலேலோ!
  • கண்கள் நீலமணி!
  • கன்னத்தில் நீலமணி!
  • திருமார்பில் பொலியும்
  • கௌஸ்துபமாய் நீலமணி!
  • ஈஸ்வரம்மாவிற்குள் புகுந்த
  • நீலமணிவண்ணா!எங்கள்
  • நெடுமாலே தாலேலோ!
  • ஈன்று புகழ் கொண்ட
  • தேவகியோ ஈஸ்வரம்மா
  • தாய்மையிலே மூழ்கடித்த
  • யசோதையோ சுப்பம்மா
  • சந்தோஷம் தரவந்த
  • சாயிகிருஷ்ணா தாலேலோ!
  • வண்ணக் குழந்தையாய் நீ
  • தொட்டிலில் சிரிக்கையிலே
  • வாத்ஸல்யம் பொழிந்திருக்க
  • வாரியணைத்திருக்க
  • பர்த்தி மாதரெல்லாம்
  • படையெடுத்து வந்தனராம்.
  • தன் மகவாய் உன்னைத்
  • தாலாட்டிப் போயினராம்!
  • கொண்டம்ம ராஜுவின்
  • குலக்கொடியே தாலேலோ!
  • அண்டமெல்லாம் ஆளவந்த
  • ஆண்டவனே தாலேலோ!
  • பனைஓலைப் படுக்கையிலே
  • பாலகன் நீ படுத்திருக்க
  • பாம்பணையாய்க் கிடந்து
  • உன்னைத்
  • தாலாட்டிப் போனதுவாம்!
  • பாம்பணைமேல் பள்ளிகொண்ட
  • ரங்கனே நீயென்று
  • ஆதிசேஷன் வந்து
  • அறிவித்துப் போனானோ!
  • பாதாதி கேசம் உனைப்
  • பாராட்டிப் போனானோ?!
  • அழகாய்ப் பிறந்துவந்த
  • ஆண்டவனே தாலேலோ!
  • மங்கலங்கள் பொலியவந்த
  • மாதவனே தாலேலோ!
  • தேவதைகள் நடனமிட
  • தேவர்வந்து பாட்டிசைக்க
  • ககனலோக வாத்தியங்கள்
  • களிகொண்டு தாமிசைக்க
  • தெய்வம் உனைச்சீராட்ட
  • தெய்வங்கள் வந்தனவாம்!
  • அத்தனை தேவர்களும்
  • அடிவணங்கி நின்றாராம்!
  • சப்தரிஷியெல்லாம்
  • சுடர்விளக்காய் உனைச்
  • சுற்றிவந்து ஜொலித்தாராம்!
  • சிவசக்தி உந்தன்
  • தேகத்தில் நிறைந்ததுவாம்!
  • சங்கு சக்கரங்கள்
  • பொன்னடியில்
  • பொலிந்தனவாம்!
  • எங்கும் நிறைந்திருக்கும்
  • இறைவனே தாலேலோ!
  • பங்காரு என்றழைக்கும்
  • பரந்தாமா தாலேலோ!
  • அன்னபூரணி வந்துனக்கு
  • அன்பாய்ச் சோறூட்ட
  • ஆகாயகங்கை வந்து
  • ஆசையாய் நீர்புகட்ட
  • அத்தனை சக்திகளும்
  • அன்போடு தாலாட்ட
  • ஆனந்தம் தரவந்த
  • ஆண்டவனே தாலேலோ!
  • கோனே எங்கள்
  • குலவிளக்கே தாலேலோ!
  • நெய்வாசத் தயிரன்னம்
    நிதமும் உனக்கூட்ட
    தாத்தா ஒருவர் உந்தன்
    பசிபோக்க வருவாராம்
  • அந்தத் தாத்தாதான்
  • யாரோ நீ யாரோ
  • இருவரும் வெவ்வேறோ
  • ஒன்றேதான் என்றறிந்தோம்
  • உத்தமனே தாலேலோ!
  • தேடி வரமளிக்கும்
  • தேவ நாதன் உனைப்பற்றி
  • நாடிகள் பலப்பலவும்
  • நல்வாக்கு சொன்னதுவாம்!
  • சாசுவததேவன் சத்யசாயி
  • ஆரோக்கியம் கல்வி
  • ஆன்மீகம் கலைவளர்க்கும்
  • ஆனந்த மூர்த்தியிவன்
  • முன்னிருப்பு ஷீரடி
  • பின்னிருப்பு பர்த்தியென்று
  • சுகமாய்ச் சொல்லிடுமாம்
  • சுகநாடி இங்கே!
  • நித்யானந்த மூர்த்தி
  • சத்தியசாயி எனப்
  • புத நாடி புகன்றிடுமாம்!
  • சங்கல்ப சித்தன்
  • கடவுள் அவதாரம்
  • சத்யம் தர்மம் சாந்தி பிரேமை
  • தரும்
  • பிரசாந்திவாசி எனச்
  • சுடர்வாக்கு சொன்னதுவாம்
  • சுக்கிர நாடி!
  • நாராயணன் பேர்கொண்ட
  • சிவசக்தி ரூபனுக்கு
  • வியாழன் புனித தினம்
  • சித்ராவதிதீரன் இவன்
  • சமநிலைரூபன் என்று
  • பிரம்ம நாடி பேசிடுமாம்!
  • ஆந்திரத்தில் கடவுள்
  • தானே அவதரித்தான்
  • உறங்காத யோகி
  • சத்திய நாராயணன் என்று
  • பழனி நாடி பகர்ந்திடுமாம்!
  • பர்த்தியில் பிறந்த சத்யம்
  • ஐந்தடி மூன்றங்குல உயரம்
  • சக்தி காந்தமாய்
  • ஜெகமெல்லாம் இழுப்பான்
  • ஆன்ம விளக்கேற்றும்
  • ஆண்டவன்.
  • இவன்
  • தெய்வ மணிக்குரல்
  • திசையெல்லாம் ஒலிக்கும்
  • என்று பரவுமாம்
  • பராசக்தி பத்மபுராணம்!
  • நவம்பர் 23ல்
  • நம் இறைவன் ஜனித்தனன்
  • என்னுமாம்
  • ஜைமினி பாரதம்!
  • சத்யம் ரூபம் முகம்
  • தீட்சண்யம்
  • நிலம் அதிசயம் பற்றி
  • நபிமொழியில்
  • இருபத்தேழு குறிப்புகளாம்நம்
  • இறைவனைப் பற்றி…
  • பிரபஞ்ச தீர்க்கதரிசி
  • எல்லார்க்கும் இறைவன்
  • உலகாளும் சத்யமென்று
  • வேதம் விளம்பிடுமாம்!
  • தேடி வரமளிக்கும் நம்
  • தேவநாதனைப் பற்றி
  • நாடிகள் பல இங்கே
  • நல்வாக்கு சொன்னதுவாம்!
  • அயோத்திக்கு ராமன்
  • துவாரகைக்கு கிருஷ்ணன்
  • ஷீரடிக்கு ஶ்ரீசாயி
  • பர்த்தியில் சத்யசாயி!
  • பரந்தாமனாய் வந்த
  • பர்த்தீசா தாலேலோ!
  • பதினாறுகலை பொலியும்
  • அவதாரா தாலேலோ!
  • துன்புறுவோர்க் கெல்லாம்
  • தூமணி விளக்காவாய்
  • அன்புபொழிவார்க்கு
  • ஆயிரந்தாயாவாய்
  • அருமருந்தே எங்கள்
  • அற்புதனே தாலேலோ!
  • தர்மம் காத்துநிற்க
  • யுகம்யுகமாய் அவதரிக்கும்
  • ஜெகந்நாதா தாலேலோ!
  • கனகாம்பரதாரி எங்கள்
  • கார்வண்ணா தாலேலோ!
  • உறங்காத யோகிக்கு
  • தாலாட்டு ஏன் என்பாய்
  • இது
  • தாயன்பால் முளைத்துவந்த
  • தங்கமணித் தாலாட்டு!
  • நீபிறந்த நாள்போற்றும்
  • நித்திலப் பூந்தாலாட்டு!
  • பொற்பாத கமலங்கள்
  • தொழுகின்ற பேர்க்கெல்லாம்
  • பொன்னருளைப் பொழிகின்ற
  • பூபாலா தாலேலோ!
  • அண்டபேரண்டமெலாம்
  • ஆனந்தம் பொங்கிவர
  • அன்புருவாய் ஜனித்துவந்த
  • ஆண்டவனே தாலேலோ!
  • தாரணியைக் காக்கவந்த
  • தாசரதீ தாலேலோ!
  • உறங்குவோரையெல்லாம்
  • எழுப்புதற்குப் பிறந்துவந்த
  • உறங்காத கண்மணியே!
  • உத்தமனே தாலேலோ!
  • உலகளந்தாய் தாலேலோ!
  • என்றும் சாயிசேவையில்
  • பொன்மணி
  • ஜெய் சாயிராம்!
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0