சாயிவாக்கு சத்யவாக்கு

(பகவானின் கவிதைகளில் இருந்து அவர்சங்கல்பப்படி கவிதைப்பூக்கள்)

பகவான்பாபா பக்தர்கள்மீது கொண்ட பேரன்போடு பற்பல இடங்களில் பல்வேறு காலங்களில் செய்த அற்புதச் சொற்பொழிவுகளின்போது, அங்கங்கே நட்சத்திர ஜொலிப்பாய்க் கவிதைகள் பாடுவதுண்டு.பக்தர்களின் மனங்களைக் கவர்ந்து இழுத்துக்கொண்டுவிடும்.

மாயம்புரிகின்ற மகோன்னதக் கவிதைகள் அவை.பகவானின் சொற்பொழிவே அன்புணர்வு பொங்கிவரும் மடைதிறந்த வெள்ளம்தான்.இடையிடையே சுவாரசியமூட்டும் சின்னக் கதைகள்,அனுபவ அனுக்கிரகங்கள், மேன்மைமிகுந்த மேற்கோள்கள் என்று அழகாகப் பேசிவரும்போதே தன் தங்கக்குரலில் கவிதை பாடத்தொடங்குவார் கானப்பிரியரான நம்ஸ்வாமி.

அங்கங்கே சற்றும் எவரையும் திரும்பவிடாமல் கேட்போரை தன்வசப்படுத்தி வசியப்படுத்திவிடும் லாவகம் அந்தக் கவிதைகளுக்குண்டு. தெய்வஇயல்பு,மானிடஇயல்பு, உலகஇயல்பு, வாழ்க்கை இயல்பு என்று எல்லாம் நம் பகவானால் பாடப்பட்டிருக்கின்றன.

பகவான்பாடிய கவிதைகள், “சாயிவாக்கு சத்யவாக்கு” என்ற ஒப்பற்ற தெய்விக நூலாகத் தொகுக்கப்பெற்று, மணிமகுடம் சூடிய சாயி இலக்கியமாக கனகம்பீரங்கொண்டு திகழ்கிறது!

“ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் தமிழ் நாடு”வெளியீடான இந்தத் தெய்விகக்கவிதைகளை தெலுங்கிலிருந்து தமிழ்ப்படுத்தி, சுந்தரத்தெலுங்கும் அமுதத்தமிழும் கலந்த தொகுப்பாக்கி,என்.எஸ்.ஜி. அவர்கள் வெளியிட்டு, தெய்விக ஆசீர்வாதத்தை அடைந்திருக்கிறார்.

அந்தத் தொகுதியில் இருந்து சாயிசங்கல்பத்தோடு சில கவிதைகள் இங்கே…

தன் அவதாரத்தை அறிவித்த உடனே முதன்முதலாக பகவான் சத்யசாயிபாபா மானிட ஒற்றுமைபற்றிப்பாடும் பாடல் இது.

 • “கலஸி மெலஸி பெருகுதாம்
 • கலஸி மெலஸி திருகுதாம்
 • கலஸி மெலஸிதெலுஸுகுன்ன
 • தெலிவினி போஷிஞ்சுதாம்
 • கலஸி மெலஸி கலதலேக
 • செலிமிதோ ஜீவிஞ்சுதாம்”

கவிதை:1

 • கலந்து இணைந்து ஒன்றாக வாழ்வோம்
 • கலந்து இணைந்து ஒன்றாய் உலாவுவோம்
 • கலந்து இணைந்து பெற்ற அறிவை வாஞ்சையுடன் வளர்ப்போம்
 • கலந்து இணைந்துபேதமின்றி இயல்பாய் நாம் வாழலாம்.

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதே கவிதையின் அடிநாதம்.

நம்மிடம் பேசுகின்ற தொனியில் அமைந்த எளிமையான கவிதை, வலிமையான வாழ்க்கைத் தத்துவத்திற்குக் கொடிபிடிக்கிறது! என்ன ஓர் அழகான வாழ்க்கை வாய்பாட்டை ஸ்வாமி பாடியிருக்கிறார்! அந்தத் தெலுங்குக் கவிதையை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்.சட்டென்றுமனதில் உட்கார்ந்துகொள்ளும் வாய்பாடாகவே அது அமைந்திருக்கிறது!

திருக்குறளைத் திரும்பத் திரும்பப்படித்துக் கொண்டிருக்கிறோம்.வேதங்களை நித்ய நித்யமும் ஓதிக்கொண்டிருக்கிறோம்.நம்ஸ்வாமி சிலபோதுகளில் சிலகவிதைகளை மீண்டும் மீண்டும் சிலபோது பாடியதுண்டு.

பகவானின் அத்யந்தபக்தரான கஸ்தூரி அத்தகுசமயங்களில் ஸ்வாமிடம் கேட்பாராம். ஸ்வாமி சில ஊர்களில் பேசியதையே திரும்பப் பேசியிருக்கிறீர்கள். சனாதன சாரதிக்கு எழுதும் போது ஒரேமாதிரி எழுத வேண்டியிருக்கிறது என்று…

ஸ்வாமி சொல்வாராம் இதோபார் இங்கும் அதையே தான் பேசப்போகிறேன். சனாதனசாரதிக்கு நீ வேறு விஷயம் பார்த்துக்கொள். நான் சொல்வது பக்தர்களின் நெஞ்சில் உணர்வில் பதிந்து அவர்கள் செயல்படவேண்டும் என்றால் சில அறிவுரைகளை திரும்பத்திரும்பத்தான் சொல்ல வேண்டும் என்று அதற்கு நியாயம் கற்பிக்கிறார். 1996ஆம்ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில்,”அன்றாட வாழ்க்கையில் ஆன்மிகம்” என்ற தலைப்பில் அருளிய தொடர்ச்சொற்பொழிவுகளின் போது,ஸ்வாமி இப்படி ஒரு பதிலைப் பாடுகிறார்.முதலில் மொழிபெயர்ப்பைப் பார்த்து விட்டு பிறகு மூலமொழி கேட்போம்.

“ஸ்வாமி சொன்னதையே சொல்கிறாரென்று நினைக்காதீர்கள்.சொன்னதை நீங்கள் பின்பற்றும்வரையில் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டும்.நீங்கள் சாப்பிட்ட வயிற்றுக்கே சாப்பிடுவது இல்லையா? கழுவிய முகத்தையே கழுவவில்லையா? ஆனால் நான் எது சொன்னாலும் அது அன்றாடம் புதியதாக இருக்கும்.உண்மையில் என்னுடைய சொரூபமே அன்றாடம் புதியது”

சர்வ நியாயம் பாடுகிறது கவிதை. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பே உள்ளத்திற்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. இப்போது மூலக்கவிதை கேளுங்கள்.

 • “ஸ்வாமி செப்பினதே செபுதுன்னாரனி
 • பாவிஞ்ச கண்டி செப்பினதிமீரு ஆசரணலோ
 • பெட்டேந்தவரகு மள்ளீ மள்ளீ செப்பாலி.
 • மீருதின்ன கடுபுகே தினடம் லேதா?
 • கடிகின மொகான்னே கடகடம் லேதா?
 • அயினா நா நேதி செப்பினப்படிக்கீ
 • அதி நித்ய நூதனங்கா உண்டுந்தி.
 • அஸலு நாஸ்வரூபமே நித்ய நூதனம்”

ஸ்வாமியின் தெய்வ சுபாவத்தைச்சொல்லியபடியே துள்ளலாட்டம் போடுகிறது கவிதை!அவர் சொல்வது சரிதானே..நமக்குத்தான் ஞாபகமறதி அதிகம் உண்டே. மீண்டும் மீண்டும் சொன்னால் தானே காரியம் நடக்கும். இங்கேபார் இப்படித்தான் இருப்பேன்.இப்படித்தான் சொல்வேன்.இப்படித்தான் உன்னை வழி நடத்துவேன் என்று ஸ்வாமி சொல்லும் போது என்னசெய்யமுடியும்?

நாம் பேசாமல் கேட்டாக வேண்டும்.அவர்பக்தர்க்கு அழகு அதுவே!

 • என்றும் சாயிசேவையில்
 • கவிஞர்.பொன்மணி

ஜெய் சாய்ராம்!

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0