பக்தியும் சக்தியும்
தமிழ்நாட்டிலுள்ள தங்கலூர் என்ற கிராமத்தில் அடியார் ஒருவர் இருந்தார். அவர் அப்பர் சுவாமிகளின் ஆன்மீக மேம்பாடுகளைக் கேள்விப்பட்டு அவருடைய தாசராக மாறிவிட்டார். எனவே அப்பர் பெயரால் அறச்சாலைகள் பல கட்டினார்; அவர் பெயரையே குழந்தைகளுக்கும் சூட்டினார்; அப்பருடைய ஆன்மீக மகிமையின் அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டுமென்பது அவரது விருப்பம். வீடுகள் நிலங்களைத் தானம் செய்து அவற்றுக்கும் அப்பரின் நாமத்தைச் சூட்டினார்.

இத்தனையும் செய்த அவர் அப்பரை இதுவரை பார்த்ததே இல்லை. இங்கே பக்தி, ஆன்ம அனுபவத்தை முந்துகிறது. பொதுவாக மற்றவர்கள் அனுபவித்த பின்பே பக்தியில் நம்பிக்கை வைப்பர். ஆனால், முதல்வழிதான் மிகவும் மயிர்க்கூச்சளிப்பது; நிலைத்து நிற்பது.

ஒருசமயம் வழிதவறவிட்ட அப்பர் தற்செயலாகத் தங்கலூரை வந்தடைந்தார். பார்க்குமிடமெங்கும் அப்பர் ஓய்வு இல்லம், அப்பர் தர்மசாலை என்று இருப்பதைக் கவனித்தார். தான் வரும் முன்பே தன் பெயர் எப்படி வந்தது என்று வியந்தார். அதற்குப்பிறகு தங்கலூர் தாசர் தன் குருநாதரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று பிரமாதமாக ஒரு விருந்து தயாரித்தார். மூத்தமகன் சில வாழை இலைகளை நறுக்கிவரச்சென்றபோது பாம்பொன்று அவனைக் கடித்து அந்த இடத்திலேயே அவன் இறந்துவிட்டான்.

இருப்பினும் தாசர் மனம் சிறிதும் கலங்காமல் அவனை இலைகளால் மூடிவிட்டு, தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த குருவை விருந்துக்கு உபசரித்தார். ஆனால் தன்னைச் சுற்றிலும் குழந்தைகள் உட்காரவேண்டுமென்று விரும்பிய குருதேவர் தந்தையிடம், “போய் எல்லோரையும் இங்கு வரும்படி அழையுங்கள்” என்றார். கட்டளையை ஏற்ற தாசர் அதன்படி செயல்பட்டார். அப்படிக் கூப்பிட்டபோது இறந்துபோன மகனும் எழுந்துவிட்டான். அவனும் மற்றவர்களுடன் விருந்துண்ண அமர்ந்தான். நடந்த அனைத்தையும் புரிந்துகொண்ட அப்பர் “உங்களுடைய பக்தி எனது சக்தியை விட ஆற்றல்மிக்கது” என்றார்.
 Help Desk Number:
  Help Desk Number:
  
