பேராசிரியர் அனில் குமார்: ஸ்வாமி! பாரதம் மதமும் ஆன்மீகமும் நிரம்பிய தேசம். எல்லா அவதாரங்களும் இங்கு தோன்றின. அதற்குக் காரணம் என்ன?
பகவான்: பாரதம் ஒரு யோகபூமி, பாரதம் புண்யபூமி, பாரதம் கர்மபூமி, பாரதம் தியாகபூமி. இங்கே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், ஆன்ம சாதகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனின் அணுக்கத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். இதனால் கடவுள் அவதாரம் இங்கே எடுக்க வேண்டியதாகிறது. அவர்களுடைய தீவிர வேண்டுதலுக்கும் பிரார்த்தனைக்கும் இணங்க, தனது பெரும் கருணையால், பூமியில் அவதரித்து நம்மிடையே கடவுள் உலவுகிறார். பக்தர்கள் அப்போது ஆனந்தத்தை அனுபவித்து, அவரைப் பின்தொடர்கின்றனர்.
ஓர் உதாரணம்: எப்போதும் கடவுள் ஏன் பாரதத்திலேயே அவதரிக்கிறார் என்று கேட்டீர்கள். ஒரு ரயிலில் முதலில் ஒரு எஞ்சினும் அதன் பின்னே பல பெட்டிகளும் இருக்கும். எஞ்சினில் உண்டாகும் ஆற்றல் பெட்டிகளை எல்லாம் இழுக்கிறது. அதன் டிரைவர் எதில் இருப்பார்? அவர் எஞ்சினில் உட்கார்ந்துகொண்டு ரயிலை மேற்பார்வை செய்வார், அல்லவா? அதுபோலவே, உலகமென்னும் ரயிலுக்கு, பாரதம் ஓர் எஞ்சினைப்போல, தன்னுடன் இணைந்த மற்ற தேசங்களையும் இழுக்கிறது.
கடவுள்தான் ஓட்டுநர். அவருக்கான இடம் எஞ்சின். எப்படி எஞ்சினில் வெப்பமும் ஆற்றலும் உண்டாகின்றனவோ அதுபோலவே, யாக யக்ஞங்களால் வெப்பமும் ஆற்றலும் பாரதத்தில் அவ்வப்போது உண்டாகின்றன.
ராமாயண காவியத்தில், அர்ஜுனனும் பீமனும் யுதிஷ்டிரரின் பின்னே செல்வதைப் பார்க்கிறோம். அமெரிக்காதான் அர்ஜுனன், ரஷ்யா பீமன். எப்படி அர்ஜுனனும் பீமனும் யுதிரிஷ்டிரரின் ஆணையைப் பின்பற்றுகிறார்களோ, அப்படி ரஷ்யாவும் அமெரிக்காவும் பாரதத்தைப் பின்பற்ற வேண்டும்.
‘பாரத’ என்ற பெயரில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. பா என்ற முதல் எழுத்து பாவம் அல்லது உணர்வைக் குறிப்பது; ர என்னும் இரண்டாம் எழுத்து ராகத்தைக் குறிக்கும்; த என்னும் மூன்றாம் எழுத்து தாளத்தைக் குறிக்கும். இப்படியாக, பாரத நாட்டில் கடவுளின் மஹிமை சரியான பாவ, ராக தாளத்துடன் இசைக்கப்படுகிறது. இந்த நாட்டுக்கு ‘ஹிந்துதேசம்’ என்ற பெயரும் உண்டு; அதன் பொருள் அஹிம்சையைக் கடைப்பிடிக்கும் நாடு என்பதாகும். ‘ஹிம்’ என்றால் ஹிம்சை, ‘து’ என்றால் ‘தூர’ அல்லது ஒதுக்குவது. இந்தக் காரணங்களால் கடவுள் பாரத தேசத்தில் அவதரிக்கத் தீர்மானித்தார்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரிய அனில் குமார் காமராஜு
Help Desk Number: