படிப்படியாய் ஸ்வாமி
- திருப்பதிப்படி
- திருத்தணிப்படியாய் நான்
- நேசிக்கும் ‘படி’ என்வீட்டு
- வாசற்படிகளின்
- இடைப்’படி’!
- இந்தப்படியில் அமர்ந்து
- பின்படிச்சுவரில் சாய்ந்து
- முன்படியில் காலூன்றி
- ஸ்வாமியை சதாநான்
- யோசிக்கும்படிஎன்பதால்நான்
- நேசிக்கும்’ படி’!
- பர்த்தி நாதனுக்காய்
- அவ்வப்போது
- கவிதை எழுதுவதும்
- கானம் பாடுவதும்
- மானசீகமாய்ப் பேட்டி
- எடுப்பதும்
- இங்கமர்ந்து கொண்டுதான்.
- அந்திப்போதில்
- அன்றாடப்பணிச்சுமை
- இறக்கி
- ஆசுவாசமாய் அமர்ந்து
- நீலவானும் பசுமரங்களும்
- பார்த்தபடி
- பர்த்திபோய்வந்த
- தோழியரோடு
- கடவுளின் சேதிகள் பேசிக்
- களிகொள்வது இங்குதான்.
- இருள்கவியும் மாலையில்
- ஒரு பொடிநடை நடந்து
- இளைப்பாறியதும்
- ஸ்வாமியின் லீலைகளை
- எண்ணிக்
- களிப்பாகியதும் இங்குதான்.
- எனக்குள்
- முட்டிமோதும்கேள்விகளுக்கு
- மாதவசாயி எனக்கு
- மௌனபதிலளிப்பது
- இங்குதான்.
- பல நிலையிலும்
- எனக்கிது
- பர்த்திப்படி!
- பக்கத்தில் வேப்பமரம்
- மதிலருகே சரக்கொன்றை
- அங்கங்கே மின்னலிடும்
- ஆகாயம் பார்த்தபடி
- சனாதனசாரதியை
- வாசித்தபடி சாயி
- பார்த்தசாரதியை
- யோசித்தபடி இங்கு
- அமரும் பொழுதெல்லாம்
- அமிர்தமயமானவை!
- போதும்வரை எனக்குள்
- போதம் வளர்க்கின்ற
- போதிப்படி!
- ஒரு தவச்சாலையின்
- நிசப்த நிர்மலத்தில்
- தியானிக்கும் பேரமைதி
- படிந்திருக்கிறது இங்கே.
- இங்கமர்ந்த பொழுதுகளில்
- ஸ்வாமிதந்த காட்சிகள்
- அநேகம்
- நீலதேகசிவனாய்கண்ணனாய்
- ஆண்டாளாய் காளியாய்
- சர்வரூப சாயியாய்
- ஸ்வாமிதந்த காட்சிகள்
- எத்தனை!
- பால்கீரைபணியாட்கள் என்று
- பக்கத்தில் சிலச்சிலர்
- எனைக்கடந்து போனாலும்
- பிரம்மமாய்க் கிடந்தபடி
- பேரின்பம் நுகர்ந்தபடி
- கிடக்கும்’படி’ யார்க்கும்
- கிடைக்காத’படி’.
- அடுப்படியும் அடுத்தபடிக்
- காரியமும் மறந்து
- ஆண்டவன் நாமத்தில்
- ஆனந்த ரூபத்தில்
- லயித்துக் கிடக்கும்
- லயப்படி இப்படி.
- தெய்வ அவதாரத்திற்குத்
- தொடர்புடைய
- தூணும் வாயிலும்
- பூணும் மாலையும்
- அடுத்த பிறவியிலும்
- அவதார மூர்த்தியோடு
- தொடர்ந்து பிறக்குமென்பார்
- அப்படி
- அயோத்திப்படி
- துவாரகைப்படியாய்
- இப்படி இருந்திருக்கக்கூடும்!
- புராதனக் கோயிலொன்று
- புதைந்திருப்பது தெரியாமல்
- பூமியின்மேல் பலர்
- நடப்பதுபோலும்
- இதன்மேலும் பலர்நடக்கலாம்
- இதன் ஆன்மா
- காயப்படுவதில்லை அதனால்..
- சித்தம் சலனமற்று
- சித்தனிடம் ஒடுங்க
- சித்தித்தரும்படி சிவப்படி
- சிவசக்திப்படி!
- என் ஆன்மா
- கதறும்போதெல்லாம்
- என்னை ஸ்வாமி
- ஆசுவாசப்படுத்தி ஆறுதல் தருவது இங்குதான்.
- மிதிப்பட்டுவிட்ட எறும்பு
- தாறுமாறாய் ஊர்வதுபோல்
- குழப்பத்தில் மனம்
- தடுமாறும்போதெல்லாம்
- இங்கமர்ந்துகொண்டால்
- மனம் யோகநிலை கொள்ளும்.
- படிப்படியாய் ஸ்வாமி
- எனக்குள் வளர்ந்து
- கோயில்கட்டிக்
- கும்பாபிஷேகம்
- செய்துகொண்டது
- இப்படியின் வாசத்தில்தான்.
- வெளியுலகம்காண
- வாய்ப்பில்லா எனக்கு
- வெளியுலகம் காட்டும்
- வெளிச்சப்படி.
- உளுத்துப்போன கூட்டில்
- முட்டிமோதும் இந்த
- உயிர்ப்பறவை
- வெகுபலவீனமாயிருக்கிறது.
- கூடுவெடித்து
- எப்போதும் அது
- பறந்துவிடலாம் அதற்குள்
- பலகாலும் புரிந்தஎன்
- படித்தவத்திற்குப் பலன்
- கிடைத்தாலும் கிடைக்கலாம்.
- இப்படியில் அமர்ந்து
- இப்படிக்கவிதை எழுதியதும்
- ஸ்வாமி
- செடியாயிருந்து
- தலையசைத்தார்
- பூவாய் மலர்ந்து
- புன்னகைத்தார்.
- ஒருவேளை நாளை என்
- பரந்தாமனின்
- பத்மபாதங்கள் இங்குபடலாம்
- அதனால்
- அப்போதைக்கிப்போதே
- சொல்லிவைத்தேன்
- படியே உனக்குப்
- பலகோடி நமஸ்காரம்!
- என்றும் சாயிசேவையில்
- கவிஞர். பொன்மணி
- – ஸ்ரீ சத்யசாயிகவிதைகள்.