பர்த்திநகர் பஞ்சகம்
- சொல்லோடுறை பொருளே,எனில் சொல்லற்கரி யவனே!
- சுளையோடுறை சுவையே,எனில் சுவைத்தற்கெளி யவனே!
- அல்லோடுறை இருளே,எனில் ஆதித்தனின் ஒளியே!
- ஆமென்பவர்க் காமென்பவ, அன்பேவடி வானாய்!
- நல்லோர்நலி வல்லோர்மலி காலந்தனில் வந்தாய்
- நாளும்மறை நாலும்புகழ் நாதா,பருத் தீசா,
- பொல்லாக்கலி தீராய்,எழிற் பொற்பாதங்கள் தாராய்
- புற்றேவளர் பர்த்தீநகர் புனிதாயென துயிரே! (1)
- குறிப்பு:
- ஆமென்பவர்க்கு ஆமென்பவ: சுவாமி ஒருமுறை கூறினார், “If you say yes, I say ‘yes, yes, yes’ to you”.
- முன்னர் ஸ்ரீ சத்ய சாயி என்பதைக் குறிப்பிடும் வகையில் SSS என்று பிரசாந்தி நிலையத்தின் சுவர்களில்
- எழுதியிருக்கும். அதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
- காலைமுதல் மாலைவரை காணும்பொருள் மீதே
- காமம்பெரி தாகத்தலை காலும்புரி யாமல்
- வேலைமிக வேலையென வீணேபுறம் போனோம்
- விரிஞாயிறு திசையாவையும் விரித்தோன்புகழ் மறந்தோம்
- ஓலைவரு நாளொன்றினில் ஒன்றாகிலும் வருமோ?
- ஒருதாயவள் உதரத்தினில் உதித்தேமறு தாயின்
- சேலைநிழல் வளர்ந்தாய்செகம் எல்லாம்புகழ் கொண்டாய்
- செம்மைகிளர் பர்த்தீநகர் சிவனேயென துயிரே! (2)
- குறிப்பு:
- ஓலை வருநாள்: எமன் வந்து ஓலையை நீட்டும் மரண நாள்.
- ஒரு தாயவள்…. வளர்ந்தாய்: ஈசுவரம்மாவின் கருவில் உதித்துக் கர்ணம் சுப்பம்மாவின் அன்பில் வளர்ந்தாய்
- சித்ராவதி செழுநீர்நதிக் கரையில்வளர் திருவே
- தேவர்களும் காணற்கரு தெய்வத்திரு உருவே
- பித்தர்களும் பேயர்களும் தத்தம்குணம் விட்டு
- பேரன்பினில் மூழ்கும்படிச் செய்வாயுன தருளால்
- சித்தந்தெளி வாகும்,கொடுஞ் சிந்தைகனி வாகும்
- *தீராப்பிணி தீரும்,புவி சேரும்நின தடியில்
- அத்தா,என தன்னாயென அடியேனழைக் கின்றேன்!
- அன்பர்நிறை பர்த்தீநகர் அழகா!என துயிரே!* (3)
- முன்னம்கயி லாயந்தனில் முனிவர்க்கரு ளியதோர்
- மொழிகாத்திட சிவசக்தியர் வடிவத்தொடு வந்தாய்
- பின்னை,யிட பாகந்தனில் பீடித்தது வாதம்
- பிணிநீங்கினை சிவனார்வலக் கரத்தால்துளி பெய்து!
- தன்னைப்புகழ்ந் தேத்தித்தனக் கென்றேசதம் வாழும்
- தரைமீதினில் பிறருக்கென வாழும்படி சொன்னாய்;
- முன்னைப்பொருள் பின்னைப்பொருள் மூலப்பொருள் நீயே!
- மோனம்நிறை பர்த்தீநகர் முதல்வாயென துயிரே! (4)
- குறிப்பு:
- முன்னம்….வந்தாய்: கயிலையில் பரத்வாஜ முனிவருக்குக் கொடுத்த வாக்கின்படி சிவசக்தி சொரூபனாக அவதரித்தாய்.
- அளவற்றதோர் அமைதிக்கிட மாகும்பிர சாந்தி
- அதனையிருப் பிடமாக்கிய அருளுக்கொரு வேந்தே!
- களவற்றதோர் மனமும்பொய் கழறாதொரு நாவும்
- கடவுட்கொரு கருவுக்கறை போலேயொரு நெஞ்சும்
- தெளிவுற்றதோர் மதியும்தர திருவேபுவி வந்தாய்!
- செம்மைநிற ஆடைதனில் சிறுவாள்நகை பூத்தாய்!
- ஒளிபெற்றிடு முயர்நான்மறை உச்சிப்பொருள் நீயே!
- உம்பர்நிறை பர்த்தீநகர் உறைவாயென துயிரே! (5)
- குறிப்பு:
- பொய் கழறாதொரு நாவு: பொய் கூறாத நாவு
- கருவுக்கறை (கருவுக்கு + அறை): கருவறை, கர்ப்பக்கிருகம்