இரு விரதம்
சாது ஒருவர் இருந்தார்; யோக சாதனையின் முதல் இரண்டு படிகளாக 1. உயிரினம் எதையும் துன்புறுத்த மாட்டேன், 2. பொய் பேச மாட்டேன் ஆகிய இரண்டு விரதங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். மேற்படி இரு விரதங்களையும் காப்பாற்றும் வகையில் இறைவனை எழுந்தருளச் செய்துவிட்டு, அடர்ந்தக் காட்டில் ஒரு மரத்தின் கீழ் அவர் தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது வேட்டைக்காரனிடமிருந்துத் தப்பி வந்த அழகிய மான் ஒன்று, அவரது ஆசிரமக் குடிலுக்குள் மறைந்தது. சில நொடிகள் கழித்து வேட்டைக்காரர்கள் வந்தனர். வந்தவர்கள் மானைப் பற்றி விசாரித்தனர்.

பாவம் அந்த சாதுவிற்கு இப்போது இக்கட்டான நிலை. குடிலுக்குள் மறைந்ததைப் பார்த்ததாகச் சொன்னால், அவர்கள் அதைப் பிடித்துக் கொன்றுவிடுவார்கள். அது அவரது முதல் விரதத்திற்கு மாறுபட்டது. அவர் அதைப்பற்றித் தெரியாது என்று கூறினால் அது இரண்டாவது விரதத்திற்கு மாறுபட்டது.

எனவே அவர், இரு விரதங்களையும் காப்பாற்றும் வகையில் புத்திசாலித்தனமாக, “கண் பார்க்குமேயொழியப் பேசாது; பேசும் நாக்கால் பார்க்க முடியாது, பேசும்படி நான் கண்ணைக் கட்டாயப் படுத்த முடியாது. அதைப்போலவே பார்க்கும்படி நாக்கையும் கட்டாபப்படுத்த முடியாது.” என்று பதிலளித்தார். வேட்டையாடுவோர் அமைதியாகத் திரும்பினர். மானும் காப்பாற்றப்பட்டது, சாதுவும் தவறு இழைக்கவில்லை.
Help Desk Number: