மண்ணாசை
ஒருவனுக்குத் தென்பகுதியில் நூறு ஏக்கர் நிலம் இருந்தது; ஆனால் அவனோ, ஆயிரம் ஏக்கர் வேண்டுமென்று வெறிபிடித்து அலைந்தான். எனவே விவசாயம் செய்யக்கூடிய தரிசு நிலங்கள் பெரும் அளவில் கிடைக்குமா, என்று எல்லா திசைகளுக்கும் சென்றான். இறுதியில் இமயமலை அரசனிடம் வந்தான்.
மன்னர் அவன் விரும்பிய அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அவனிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்; ஆனால் அதற்கொரு நிபந்தனை விதித்தார். நடக்கும்போது இடையில் நிற்கக்கூடாதென்றும், சூரியன் மறைவதற்கு முன்பு புறப்பட்ட இடத்திற்குத் திரும்பிவிட வேண்டுமென்றும், அவன் நடந்த வட்டத்திற்குள் உள்ள நிலமனைத்தும் அவனுக்கே சொந்தமாகும் என்பதுமே அந்த நிபந்தனை; மன்னர் மிகவும் தாராளமாக அளிக்க விரும்பினார். அந்தப் பேராசைக்காரன் சூரிய உதயத்திற்காகக் கவலையுடன் காத்திருந்தான். சூரியன் மறைவதற்குள் பெரிய வட்டமாகச் சுற்றிவிடவேண்டுமென்று அவன் வேகமாக நடந்தான், இல்லை ஓடினான்.
புறப்பட்ட இடத்தை அவன் நெருங்கியபோது மிகவும் சோர்ந்துவிட்டான்; அவனுடைய இருதயம் நின்று விட்டது. ஏராளமான ஏக்கர் நிலங்களை உடைமை ஆக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வெறி பிடித்து ஓடிய அவன், தன் சக்திக்கு மீறி உழைத்துவிட்டான். அந்த இடத்தை அடைய மூன்று கெஜங்கள் இருக்கும் போதே கீழே விழுந்து இறந்துவிட்டான். பேராசைப் பேரிழப்பாகி விட்டது.