Partheesan Padharavindha Padhigam

Sairam! This is available only in Tamil*

மதுரபாரதி

-1-

  • வேதார விந்தன் விடையன் மேவிப் பிணைந்த வடிவே
  • ஆதார மூலப் பொருளே அளவற்ற ஞானத் திருவே
  • ஓதா துணர்ந்த ஒளியே உயர்பர்த்தி வந்த உயர்வே
  • பாதார விந்தம் பணிவோம் பர்த்தீச ஞான குருவே!

பொருள்

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுளரும் ஒன்றாகிய வடிவம் கொண்டோனே, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரமானவனே, எல்லையற்ற ஞானச்செல்வனே, கல்வி கற்பதற்கே அவசியமின்றி அனைத்துமறிந்த ஒளிபொருந்திய அறிவை உடையோனே, புட்டபர்த்தியில் அவதரித்த மேலான பொருளே, உனது பாத கமலங்களைப் பணிகிறோம், எமது ஞானகுருவாகிய பர்த்தீசனே!

குறிப்பு

வேதாரவிந்தன் விடையன் – வேதா (பிரம்மா), அரவிந்தன் (திருமால்), விடையன் (ரிஷபம் ஏறிய சிவபெருமான்)

-2-

  • மலிதீது மாந்த ரிடையே மகதேவன் இல்லை யெனவே
  • ஒலிமீறி ஓங்கி எழவும் உளனிங் கெனாதுன் அருளால்
  • கலிகால மதனில் கடிதே காப்பாற்ற வந்த இறையே!
  • பொலிபாதம் போற்று கின்றோம், பர்த்தீச ஞான குருவே!

பொருள்

மனிதர்களிடையே தீக்குணங்கள் அதிகரித்து, பேரிறைவன் என்பவனே ஒருவனில்லை என்பதான இரைச்சல் அதிகரித்துப்போன இந்தக் கலிகாலத்தில், “இதோ நான் இருக்கிறேன்” என்று பெருங்கருணையோடு விரைந்து அவதரித்து எம்மைக் காப்பாற்றுவதற்கென வந்த பர்த்தீசனான ஞானகுருவே, உனது ஒளிமிகுந்த பாதங்களைப் போற்றித் தொழுகிறோம்.

-3-

  • எளியார் உளார் இலாதார் என்றேதும் பேதம் இலனாய்
  • அளியால் அனைவ ருக்கும் அருள்செய்யும் அன்பு வடிவே
  • விளியாத முன்னம் வந்து வீற்றாயே எங்கள் மனதில்
  • பளிங்கான பாதம் பணிவோம் பர்த்தீச ஞான குருவே!

பொருள்

இவன் எளியவன், இவன் செல்வந்தன், இவன் ஏழை என்பதாக எந்த வேறுபாடும் காண்பிக்காமல், பெருங்கருணையால் எல்லோருக்கும் ஒன்றுபோல அருள்செய்யும் அன்பின் வடிவானவனே! நாங்கள் உன்னை அழைப்பதற்கும் காத்திராமல் எங்கள் நெஞ்சில் வந்து நிறைந்துவிட்டாய். பர்த்தீசனான ஞானகுருவே, பளிங்குபோன்ற உன் பாதங்களைப் பணிகிறோம்.

-4-

  • அறியாமை இருளில் மூழ்கி, அழிகின்ற பொருளை நாடி,
  • சிறிதான இன்பம் எல்லாம் பெரிதென்று கொண்டு தேடி,
  • முறையல்ல செய்து வாடும் மூடத்தனத்தை மாற்றும்
  • நிறைபாதம் போற்று கின்றோம், பர்த்தீச ஞான குருவே!

பொருள்

எந்தெந்த சொத்துக்கள் நிரந்தரமல்லவோ அவற்றைத் தேடிச் சேர்க்கவும், அற்பமான இன்பங்களைப் பேரின்பம் எனக் கருதி அவற்றைத் தேடிப் பின்னே ஓடவும் செய்கின்ற மூடத்தனமான முயற்சிகள் எல்லாம் எமது அறியாமை என்னும் இருள் தன்மையால் உண்டாவன. நிறைவான உமது பாதங்களே அத்தகைய அறியாமையை மாற்ற வல்லவை என்று போற்றுகிறோம், பர்த்தீசனான எம் ஞானகுருவே!

-5-

  • கேதாரம் பத்ரி காசி கயிலாயம் திருவை குந்தம்
  • போதாதெனக் கருதி தானோ பூமண்டலத்தில் நீயும்
  • மாதீஸ்வ ராம்பா மடியில் மகனாக வந்து பிறந்தாய்
  • பாதார விந்தம் பணிவோம், பர்த்தீச ஞான குருவே!

பொருள்

கேதாரநாத், பத்ரி, காசி, கைலாயம், திருவைகுண்டம் என்று இந்தப் புனிதத் திருப்பதிகள் போதாது, (பூமியில் மற்றுமோர் ஒப்பற்ற திருப்பதியை உண்டாக்குவோம் என்று கருதி) நீ மாதர்க்கரசி ஈஸ்வராம்பாவின் மடியிலே வந்து மகனாகப் பிறந்திட்டாயோ! (அத்தகைய மற்றுமோர் தலமான) பர்த்தியில் ஈசனாக வந்து பிறந்த எமது ஞானகுருவே, உமது பாதங்களைப் பணிகின்றோம்.

-6-

  • மனிதர்போல் உடலெ டுத்து
  • மனிதர்போல் உடையு டுத்து
  • மனிதர்போல் வார்த்தை சொல்லி
  • மனிதர்போல் வாழு கின்றாய்!
  • புனிதர்கள் நின்னை யறிவார்
  • பொறையிலார் அறிவ துண்டோ!
  • இனியநற் பாதம் பணிவோம்,
  • பர்த்தீச ஞான குருவே!

பொருள்

சாதாரண மானுடவுடலைத் தாங்கி வந்து, எங்களைப் போலவே ஆடையணிந்து, எங்களோடு உரையாடி, (மேலோட்டமாகப் பார்த்தால்) எம்போலவே வாழ்கிறாய்! புண்ணியம் செய்தோர் (புவிக்கு இறங்கிவந்த மெய்ப்பொருளே நீ என்கிற) நின் மெய்த்தன்மையை அறிவர். அதனை அறியுமளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் இவ்வுண்மையை அறியவும் கூடுமோ! இனிமையே வடிவெடுத்த நின் பாதங்களைப் பணிகிறோம், பர்த்தியில் வந்து பிறந்த எமது ஞானகுருவே!

-7-

  • ஓதா மறைகள் நவிலும்
  • ஒளிரா தொளிர்ந்த ஒளியே
  • சேதார மென்ப தில்லா
  • செம்மைத்த முழுமை யுருவே
  • காதார நாமம் பாட
  • களிப்பூறும் களியின் கருவே
  • பாதார விந்தம் பணிவோம்
  • பர்த்தீச ஞான குருவே!

பொருள்

எழுதிக் கற்கப்படாதவையான மறைகள், கண்ணாற் காணும் ஒளிக்கு அப்பாற்பட்ட நினது ஒளியைப் பேசுகின்றன. உனக்குச் சிதைவில்லை. நின்னுருவே செம்மையிலும் செம்மையான முழுமை. உனது நாமத்தைப் பாடிக் காதாரக் கேட்பின் உள்ளத்தில் ஊறும் களிப்பின் பிறப்பிடமானவனே, பர்த்தீசனான எமது ஞானகுருவே, உனது பாத கமலங்களைப் பணிந்தோம்.

-8-

  • வேதங்கள் கூறு வோனும்,
  • விண்ணோர்கள் ஏத்து வோனும்
  • நாதங்கள் கூறு வோனும்,
  • நல்லோர்கள் கூறுவோனும்,
  • ஏதங்கள் மாற்று வோனும்,
  • எம்மோனும் நீயே பாபா!
  • பாதார விந்தம் பணிவோம்,
  • பர்த்தீச ஞான குருவே!

பொருள்

மிக உயர்ந்தனவாகிய நான்மறைகள் நின்னையே குறித்து நிற்கின்றன; வானவர்கள் உன்னப் போற்றுகின்றனர்; இசைப்பாடல்கள் உன் புகழையே இசைக்கின்றன; நல்லோர் உன் புகழைப் பேசுவதில் மகிழ்கின்றனர்; எங்கள் குற்றங்களைக் களைந்து எம்மை நீ மாற்றியமைத்துவிடுகிறாய்; உன்னையே நம்பும் எமக்கெல்லாம் ஒரே துணை நீதான் பாபா! பர்த்தியில் அவதரித்த ஞானகுருவாகிய உன் பாதத் தாமரைகளை நாங்கள் பணிகிறோம்.

-9-

  • வெயில்வீசு வதனம் காண்பார்
  • விரிகேச மகுடம் காண்பார்
  • அயில்வீசும் விழியின் அழகில்
  • அருள்வீச அன்பர் காண்பார்
  • துயில்மாயச் சொல்லும் உரையில்
  • சுகபோத நிலையைக் காண்பார்
  • ஒயிலான பாதம் பணிவோம்
  • பர்த்தீச ஞான குருவே!

பொருள்

சூரிய ஒளியைச் சிந்துகின்ற நின் முகத்தினைக் காண்போர், அப்படியே நினது விரிந்து பரந்த சிகை ஒரு மகுடம்போலக் கவிந்திருப்பதையும் காண்பார்; வேல்போலக் கூர்த்த நின் விழிகளின் அழகில் பொங்கித் ததும்பும் கருணையையும் உனது அன்பர்கள் காண்பார்கள்; அஞ்ஞானமென்னும் உறக்கத்தை விட்டு எழுப்புவதாகிய நினது அருளுரையில், முழுஞானத்தின் சுகத்தையும் அவர்கள் காண்பார்கள். பர்த்தியில் அவதரித்த ஞானகுருவே, ஒயிலாக நடைபயிலும் நினது பாதத்தை நாங்கள் பணிகிறோம்.

-10-

  • பத்தியால் மதுரன் சொன்ன
  • பாதா ரவிந்த பதிகம்
  • நித்தமும் ஓதி னோர்க்கு
  • நிலமீது நீடு வாழ்வு,
  • உத்தமச் செல்வம் மற்றும்/li>
  • ஒப்பரு முத்திய ருள்வன்
  • சத்திய சாயி தேவன்
  • சத்தியம், அஞ்ச வேண்டா!

பொருள்

பக்திபூண்ட மதுரபாரதியைக் கருவியாகக் கொண்டு அருளப்பட்ட இந்தப் பாதாரவிந்த பதிகத்தைத் தினந்தோறும் ஓதினோருக்கு, ஸ்ரீ சத்திய சாயி பகவான் நீண்ட ஆயுள், (குற்றமற்ற வழிகளில் வந்த) சிறந்த செல்வம், இவற்றுக்கும் மேலே ஒப்பில்லாத மோட்சத்தையும் அருளுவான். இது சத்தியம். அன்பர் அஞ்சவேண்டுவதில்லை!

குறிப்பு

பதிகம் என்பது 10 பாடல்களால் ஆனது. பத்தாவது பாடல் பலன்சொல்லும் பதிகமாக (பலச்ருதி) அமையவேண்டுமென்பது. மரபு. இத்துடன் ‘பாதாரவிந்த பதிகம்’ நிறைவு பெறுகிறது.

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0