காத்திருக்கிறேன்…….
Sairam! This is available only in Tamil*
- காத்திருக்கிறேன் காலம் காலமாய் யுக யுகங்களாய் அப்பப்பா!
- நீ காலாதீதன் தான், காலம் உனக்குப் பணி புரியலாம்!
- நான் எத்தனை பிறவிகள் எடுத்து இளைத்திருக்கறேன் தெரியுமா?
- ஆண்டவனாய் அவதாரங்கள் எடுத்துக்கொண்டே நீ இருப்பாய்
- அடிமையாய் உன் தோழமைக்கும் தொடுகைக்கும் ஏங்கி நிற்பேன் நான்,
- உன் கடைக்கண் பார்வை எப்படியோ பட்டுவிடும்;
- பிறகு என்ன ஆன்மாவால் உன்னைத் தொடர்ந்துகொண்டே இருப்பேன்.
- சிரிடியில் நீ வந்த காலத்தில் உன்னோடுதானே நானும் இருந்தேன்
- நீ வைத்த தோட்டத்தில் துளிர்க்கும் செடியாக
- உன் கால் பட்ட மண்ணாக, உன் கரம் தொட்ட மலராக,
- நீ சட்டியில் கொட்டும் உணவை உண்ணவரும் பறவையாக,
- பைரவனாக விடாது தொடர்ந்த கதைநீ அறியாத ஒன்றா!
- தாய் வயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டே நகரும் குரங்குக்குட்டி போன்றது
- என் விடாப்பிடி சிக்கெனப் பிடிக்க மணிவாசகன் மட்டும்தான் கற்றானா!
- ‘மர்க்கட பக்தி’ எனக்கும் பரிச்சயமானதொன்றுதான் ;
- எடுத்தென்னை அரவணைத்துக் கொள்ளும் நாள் ஒன்று வரும் அதுவும் எனக்குத் தெரியும்.
- அடுத்தடுத்து வரும் ஆயிரம் ஆயிரம் பிறவிகளில் புடம் போட்டுப் புடம்
போட்டு பொலிகின்ற பொன்னாக என்னை நீ மாற்றியபின் ‘பங்காரு’ என்றென்னைப் பரிவுடன் அழைப்பதற்குத் தடையென்ன இருக்கமுடியும் உனக்கு?
- பக்தபராதீன்ன் நீ, இன்னமும் பாராமுகம் காட்டுவாயா என்ன!
- தாயாய் நீ இருக்க, சேயாய் உன் மடி தவழ்ந்து
- உன் கருணை முகம் நோக்கி இதழ் முத்தம் வாங்க எனக்கும் ஒரு நாள் வரும்!
- அது எந்த யுகத்தில் ஆனால் என்ன!
- என் தேவனாம் உன்னை அடைய என் தேடலும் தொடரும் ஸ்வாமி
- காத்திருப்பேன் காலம் காலமாய்!