பூக்கள் பாமாலை

  • சூரியகாந்திப்பூ வெடுத்துன் சுருட்குழலில் சூடி விட்டேன்
  • சூட்சும தரிசனத்தின் மாட்சியை யறிந்து கொண்டேன்
  • சூர்யகுல சாயி உன்னில் சொர்க்கத்தைக் கண்டு விட்டேன்
  • வீர்ய விஜய சாயி உன் முக ராசியில் முகிழ்ந்து விட்டேன்
  • தாமரைமலர் எடுத்துன் புனிதப் பதம் பூசனை செய்தால்
  • அங்கயற்கண்ணி, அலர்மேல் மங்கையாய் அன்பு செய்திடுவாய்
  • தன்வயமிழந்துன் வயம் லயித்துத் தொழுதிடுவோம் சாயி
  • தன்வந்திரி, தயாநிதியாய் தயாபரியும் நீயானாய்
  • பவளமல்லிப்பூ வெடுத்துன் பதமலரில் பரப்பி விட்டேன்
  • பார்த்தனுனக்குச் சூட்டிய பூமாலையும் புதிதானது – என்
  • உள்ளமெலாம் உற்சாக ஊற்றாகி உருகிவிட்டேன் – பக்தி
  • வெள்ளமெல்லாம் வெள்ளோட்டம் பார்த்துவிட்டேன்
  • நாகலிங்கப்பூ எடுத்து நாமணக்குமுன் னாமம் சொல்லி
  • நற்கதியடைந்துவிட்டேன் நலம் பல பெற்று விட்டேன்
  • பாத மலரடி சரணம் பாரில் நான் வாழும் மட்டும் போதும் – சாயி
  • வேத நாயகனே வேறேதுவுமே வேண்டாம் எனக்கு
  • ரோஜாப்பூத் தொடுத்து ராஜா ராமனுன் புகழ்பாடி – நீ
  • ராஜாவாய் பவனி வந்த தங்கரத தரிசனங் கண்டேன்
  • ராஜ சிம்மாசனத்தில் கொலுவுற்று சாயி நீ
  • ராஜ மாதங்கியாய் ராஜாங்கம் படைத்துவிட்டாய்
  • முல்லைப்பூ வெடுத்து முக்கலையில் பாட்டிசைத்து
  • முடிவற்ற ஆனந்தமளித்து முடிவுரையாகி விட்டாய்
  • எல்லையிலாதுன் கருணை மழையில் நான் நனைய – சாயி
  • இல்லமெல்லாம் இயைந்திருந்து இன்பத்தைத் தந்திடுவாய்
  • அல்லிப்பூ வெடுத்துன் அகமலரைத் துதித்திட்டால் – உன்
  • அகமகிழ்ந்து ஆகமத்தை சொல்லி விடும்
  • முகமலர நீ முத்தாகக் கானம் பாடி – சாயி
  • இகபர முழுதுமே இன்பத்தைத் தந்திடுவாய்
  • கொன்றைப்பூ வெடுத்துக் கொத்தாகச் சூட்டி – நீ
  • நின்ற கோலந்தனில் நிலையாக இருக்கச் செய்தால்
  • சென்ற விடமெல்லாம் செங்கரும்பாய் நீயினிப்பாய் – சாயி
  • மன்றமாம் சமிதிதோறும் சந்தமாயிசைத் திருப்பாய்
  • மல்லிகைப்பூ வெடுத்துன் மலரடிக்குச் சமர்ப்பித்தால்
  • மங்காப் புகழ் கொண்டு நானிலத்தை வலம் வரலாம்
  • மந்த மாருதந்தான், மாருதிதான் நீ, மாற்றமில்லை – சாயி
  • எந்த மதத்திலும் ஏற்றுக்கொண்ட தெய்வம் நீ
  • அடுக்குமல்லிப்பூ வெடுத்து அடுக்கியே அர்ச்சித்தால்
  • எடுக்கும் பிறவிதோறுமுனை ஏற்றமுடந் தொழுதிடலாம்
  • படிக்கும் எழுத்திலும் நடக்குமடியிலும் நீயிருந்து – சாயி
  • துடிக்கும் மனந்தோறுந் துன்பத்தைக் களைந்திடுவாய்
  • ஜாதிமல்லிப்பூ வெடுத்துன் ஜோதி வடிவம் சூடிவைத்தால்
  • சாதி சமயமற்ற நல்லிணக்கமளிக்கச் செய்திடுவாய்
  • நீதி நிலை பெற்று நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட – நீ
  • விபூதி சுந்தரனாய் அனுபூதி தந்துவிட்டாய்
  • பிச்சிப்பூ வெடுத்துன் உச்சிதனில் சமர்ப்பித்தால்
  • உச்சஸ்தாயில் உன் கானம் உயிரில் கலந்துவிடும்
  • மிச்சமுள்ள ஜென்ம முழுதுமுனை மட்டுமே துதித்திட – சாயி
  • மச்சமுள்ள முகதரிசனம் தந்துவிடு பாபா
  • செவ்வந்திப்பூ வெடுத்துன் செங்கரம்வைத்திட்டால்
  • பிரசாந்தி வாசனே நீ மனச்சாந்தி தந்திடுவாய்
  • சாந்தி சாந்தி சாந்தி மட்டுமே எஞ்சி நிற்கும் – சாயி
  • சாஷ்டாங்கமா யுனைப் பணியும் சகலருக்கும்
  • தங்கரளிப்பூ வெடுத்துன் தாமரைத்தாள் பணிந்தால்
  • தங்கரதப் பவனியிலுனைத் தொழுதகமும் மழ்ந்திடுவோம்
  • தங்க நிறமேனி மின்ன நீயும் முகமலர்ந்து முகிழ்த்திடுவாய் – சாயி
  • தங்குமிடந் தந்து பிரசாந்தியில் இளைப்பாற இடமளிப்பாய்
  • முந்திரிப்பூ வெடுத்துன் முத்துப்பாதம் பணிந்தால்
  • முந்தி வந்து நீயும், முத்தமிழ் தழைக்கச் செய்வாய்
  • நந்தி வாகனனாய் நலிந்தோர்க் கருள் செய்திடுவாய் – சாயி
  • பந்தியிட்டுப் பசியாற்றும் அன்னபூரணி நீ யானாய்
  • ஜாதிக்காய்ப்பூ வெடுத்துன் நற்றவப் பாதம் நமஸ்கரித்தால்
  • மகரஜோதியில் நீ வந்து சாஸ்தாவாய்க் காட்சியளிப்பாய்
  • அகர வுகர மகரமதில் பிரணவ மந்திரமாகிவிட்டாய் – சாயி
  • சிகரமெனவுன் பக்தர்களைச் சிதறாமல் உயரச் செய்வாய்
  • கவிதைப்பூ வெடுத்துன் கைலாயப் பாதம் பணிந்துவிட்டால்
  • கவிதைகள் புனைந்திட நீ பைந்தமிழைப் பரிசளிப்பாய்
  • கவிதைகள் கோடியாறுனைக் கோடியர்ச்சனை செய்வித்தால் – சாயி
  • கவித்துவமும் மகத்துவமுந்தந்து மனங்களிக்கச் செய்திடுவாய்
  • மரகத மலரெடுத்துன் மங்கலப் பாதந் தொழுதால்
  • மாங்கல்ல தாரணமும், பலமுந்தந்து மங்களமளித் திடுவாய்
  • மஞ்சள் முக மங்கலப் பெண்டிர்க்குச் சர்வாங்கமும் தருவாய் – சாயி
  • மஞ்சள் வண்ண அங்கியிலே நீ மஞ்சமாதா வாகிடுவாய்
  • நவதானியப் பூக்களினாலுன் நற்பதம் கும்பிட்டால்
  • நவக்கிரகங்களால் நன்மை மட்டுமே நடந்திடும்
  • சிவ கைலாயனாய் தசவிஷ்ணுவாய் அபயம் செய்திடுவாய் – சாயி
  • நவதுர்கா, நவரசம், நற்கதி எல்லாமும் நீயானாய்
  • அன்றலர் பூ வெடுத்துன் அருந்தவப் பதம் தொழுதால்
  • என்றுமே ஏற்றந்தந்து ஏணியாய் ஏற்றமளிப்பாய்
  • மண் முதல் விண் வரையிலுமுன் விஸ்வரூபம்தான் – சாயி
  • மண்ணுலகில் வாழும் வரை மனம் முழுக்க உன் பக்தியே போதும்
  • கற்பகமல ரெடுத்துன் கல்ப பாதம் தொழுதால்
  • கற்பக விருட்சம் கண்ட பலனாய் நீ வந்திடுவாய்
  • அற்புத அதிசய அம்பல வாணனே அதிரூபமே – சாயி
  • உன் பொற்பாதமதில் விழுந்து வணங்கிட வரம்தருவாய்
  • சந்தன மரப்பூ வெடுத்துன் சதுர்முகப் பதம் பணிந்தால்
  • சந்தனம், அகில், சவ்வாது, புனுகு மணம் தெரியும்
  • வந்தனம் செய்து வணங்கிட வாழ்நாள் வரை வரம் தா சாயி
  • வந்து நீயும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிடுவாய்
  • அரிச்சந்தப்பூ வெடுத்துன் அரிஹர சிவப்பாதம் தொழுதால்
  • அரிச்சுவடியிலும் நீயிருந்து அருள் செய்திடுவாய்
  • அற வாழ்வு வாழுமுன் னடியார்க்கு அபயந்தந்து – சாயி
  • அகம் புறம் அண்டமெல்லாம் இமயம் போல் காத்திடுவாய்
  • வெள்ளை அலரிப்பூ வெடுத்துன் பூப்பாதம் சார்த்திவிட்டால்
  • வெள்ளை அங்கியிலுன் பிறந்த நாள் காட்சிதான் தெரியும்
  • ஈஸ்வரம்மாவின் ஈசப்புதல்வனே பெத்தபொட்டமாவின்
  • தவப்புதல்வனே – சாயி
  • கஸ்தூரி திலகமாய் கணபதி மந்திரமாய் கடைத்தேற்றிவிட்டாய்
  • கரவீர மலர்களினாலுன் கவித்துவப் பாதம் பணிந்தால்
  • ரகுவீர, ரணதீர, ராஜா ரகுராமனாய் விரைந்து வந்திடுவாய்
  • நான்கு வேதமுழங்க நாளெல்லாமுனைப் பூஜித்தால் – சாயி
  • நாளும் புதுஜென்மமெடுத்த புண்ணியம் தானே உருவாகும்
  • வெண்மல்லிப்பூ வெடுத்துன் வெண்பாத மலரில் துதித்திட்டால்
  • புண்பட்ட மனங்கூடப் புன்னகையால் பூப்பூக்கும்
  • வெண் கொற்றக் கொடையில் நீ வீணா வாஹினி – சாயி
  • தண்ணிலவாய்க் குலம் தழைக்கத் தயை தந்துவிடுவாய்
  • நந்தவனப் பூக்களினாலுன் நற்றவப் பதம் பணிந்தால்
  • நந்தி தேவனும் மகிழ்ந்து நால்வேத மிசைத்திடுவான்
  • நந்த கோகுலத்தில் நீயிருந்து நற்கதியருள்வாய் – சாயி
  • நந்த கோபாலனே நாராயண முகுந்தனாய் வந்தருள்வாய்
  • தண்தடாகக் குமுத மலர் பறித்து அன்றாடமுனைத் தொழுதால்
  • அன்றில் பறவையாய் மனம் ஆனந்தத்தி லாழ்ந்துவிடும்
  • ‘இன்று போய் நாளைவா என்று’ சொல்லமாட்டாய் நீ சாயி
  • அன்று மின்று மென்று மெங்கள் அகம் மகிழ அருள்தருவாய்
  • மருதப்பூ வெடுத்துன் மந்தாரப் பாதந் தொழுதிட்டால்
  • மருதமலை முருகனும் மாலின் மருகனும் மனதினில் தெரியும்
  • மருந்தாகுமுன் நீறு மாற்றமேதுமில்லை மயில்வாகனா – சாயி
  • விருந்தே எங்களுக்குன் தரிசனம் மட்டும் தானே
  • கைமல ரெடுத்துன் கன்னல் பாதமர்சித்து விட்டால்
  • கைமாறு கருதா உதவிகள் உலகில் உபயமாய்க்கிட்டும்
  • கைகூப்பியுனைத் தொழுது நின்று விட்டால் – சாயி
  • இரு கர அபய ஹஸ்தத்தால் இன்பந்தந் தருள்வாய்
  • விருப்பாக்ஷிப்பூ வெடுத்துன் வித்யப்பாதம் பணிந்தால்
  • விருப்பாக்ஷி ஈஸ்வரனாய் வினையகல வரம் தருவாய்
  • மனசாட்சியில் நீயிருந்து மாட்சியாய் வாழ வைப்பாய் – சாயி
  • ஒரு காட்சியும் வேண்டாமுன் அருள் சாட்சி மட்டும் போதும்
  • புன்னைவனப்பூ வெடுத்துன் புனிதப்பாதம் நமஸ்கரித்தால்
  • மன்னை ராஜ கோபாலனாய் ரகுராமனாய் நீ தெரிவாய்
  • உனைத் தொழுதுயிர் வாழ்ந்திருந்தால் போதும் – சாயி
  • கண்ணாயிருந்து இமையாய்க் காத்து ரட்சிப்பாயே
  • ருத்ராட்சப்பூ வெடுத்துன் புனிதப் பாதந் தொழுதிட்டால்
  • ருத்ராட்ச சிவனாய் நீ சத்தியமாய் வந்திருப்பாய்
  • அர்த்த ராத்திரியு மருகிருந்து காத்திடுவாய் – சாயி
  • அர்த்த நாரீஸ்வரனுன் னருளின்றி வாழ்வதில் வாழ்வியலேது?
  • கொடிமுந்திரிப்பூ வெடுத்துன் புனிதப் பாதம் பணிந்தால்
  • கொடிய மனங்கூடக் கொத்தாக மாறிவிடும்
  • நெடுந்துயிலிலும் துணையாக நீ வரவேண்டும் – சாயி
  • நெடுந்தூரப் பயணத்திலும் நிழலாய் உன் துணைவேண்டும்
  • நித்திய கல்யாணிப்பூ வெடுத்துன் சத்தியப் பதம் பணிந்தால்
  • சத்திய வாழ்வு மட்டும் வாழச் செய்திடுவாய்
  • சத்தியம் மட்டுமே பேசிடச் சொல்லிடுவாய் – சாயி
  • நித்தமும் உன் நினைவுடனே வாழ்ந்திட வரமருள்வாய்
  • நறுவிலிப்பூ வெடுத்துன்னழகுப் பாதம் துதித்திட்டால்
  • கருவிழியு மானந்தக் கண்ணீர் சொரியும்
  • நறுமணமாய் சுகந்தருமுன் நயமான தரிசனந்தான் – சாயி
  • நற்கதியாய் நல்வினை தந்து தயை செய்திடுவாய்
  • கருங்குவளைப்பூ வெடுத்துன் கன்னல் பாதம் நமஸ்கரித்தால்
  • செங்கமல மலரா யிதயத்தில் நீ கொலுவிருப்பாய்
  • இருவிழிகள் போதாது இதயமதிலுனை யானந்திக்க – சாயி
  • ஒருவழியாய் வந்துன் பாதம் பணியத் தந்திடுவாய்
  • காளாம்பூ வெடுத்துன் காந்தப் பாதமதில் வீழ்ந்திட்டால்
  • பாலும் தேனும் பாய்ந்தோடிவந்து பரிசளிக்கும்
  • கேள்வி, கல்வி, ஞானமளித்து ஞாலத்தில் வாழ்கிறாய் நீ – சாயி
  • வேள்வி, வேதம் அனைத்தும் நீதானாகினாய்
  • சத்தியப்பூ வெடுத்துன் சாந்தமுகப் பாதம் ஸ்பரிசித்தால்
  • சத்தியமாய்ச் சத்தியம் வந்து காவல் காக்கும்
  • அசத்தியம் அண்டாமல் அகிலமெலாம் வாழ்ந்திடலாம் – சாயி
  • அசாத்திய உன் துணையுங் கருணையும் காத்தே நிற்கும்
  • தர்மப்பூ வெடுத்துன் தார்மீகப் பாதம் அபிஷேகித்தால்
  • அதர்மம் ஓடி ஒளிந்து, தைர்யம் பிறந்துவிடும்
  • தர்மமே வடிவான சத்திய சாயி தெய்வமே நீ – சாயி
  • தர்ம வழி மட்டும் வாழ வழித்துணையாய் வந்திடுவாய்
  • சாந்திப்பூ வெடுத்துனைச் சாஷ்டாங்கமாய்ப் பதம் தொழுதால்
  • சாந்தி தேவியாய்ச் சலக சந்தோஷமும் நல்கிடுவாய்
  • பிரகாந்திமுக தரிசனங்கானக் கோடிக் கண்கள் போதாது – சாயி
  • சாந்தி மட்டுமே நிலையாக நிலைக்கச் செய்திடுவாய்
  • பிரேமைப்பூ வெடுத்துனைப் பிரேமையாய்த் தொழுதிட்டால்
  • தன்பிரேமப் பிரவாகம் புவியெங்கும் பாய்ந்தோடும்
  • பிரேம வெள்ளத்தில் நீ சந்திர சூர்யப் பிரபையாய் – சாயி
  • பிரேம சாயியாய் வந்துதித்து வளம்பல வந்திடுவாய்
  • மருகுப்பூ வெடுத்துன் பதம் வணங்கிவிட்டால்
  • உருகா நெஞ்சமிவ் வுலகிலுண்டோ சாயி முருகனே
  • மாலாய் மருகனாய் பக்தர்தம் மனதிலிருப்பாய் – சாயி
  • மதியாய் அதனொளியாய் மங்காதுன் னருளைத் தங்கச் செய்வாய்
  • மந்தாரைப்பூ வெடுத்துன் பாதமலர் சார்த்திவிட்டால்
  • மாந்தரும் மகிழ்வுற்று மனச்சாந்தி பெற்றிடுவர்
  • வந்தாரை வாழவைத்து மகிழும் இந்தியாபோல் – சாயி
  • வந்தாரை உபசரித்துப் பிரசாந்தியாய்ச் சாந்தி தருவாய்
  • பூசணிப்பூ வெடுத்துன் பதம் பூசனை செய்வித்தால்
  • பூச நட்சத்திரமாய் புதுப்பொலிவு தருவாய்
  • பூசனை, பஜனை செய்திடப் புனித மனம் தருவாய் – சாயி
  • ஈசன், ஈஸ்வரியாய் பக்தர்க்குக் காட்சி தருவாய்
  • ஆலம்பூ வெடுத்துன் னழகுப் பாதம் அர்ச்சித்தால்
  • ஆலகால விஷங்கூட ஆழ்கடலில் சங்கமிக்கும்
  • ஞாலம் முழுதுமுன் நாமம் சொல்லி நலமாய் வாழச் செய்வாய் – சாயி
  • ஞானம் தந்து கடைத்தேற்றிக் களித்திருப்பாய்
  • நாரத்தைப்பூ வெடுத்துன் நாதமலர்ப் பாதம் பார்த்தால்
  • சிரத்தையாய் சீக்கிரமாய் வந்து காட்சி தருவாய்
  • கருத்தெலாமுன் மாட்சி தவிர வேறேதுமில்லை – சாயி
  • குருத்தோலையில் ஏசுவாய் ஏகமாயிருப்பாய் நீ
  • சீமை அகத்திப்பூ வெடுத்துன் சீலப் பாதம் பணிந்தால்
  • ஆமையவதாரக் காட்சி ஆழ்மனதில் தெரிந்துவிடும்
  • சாம கானம் சந்தங்கள் பாடி வந்து விடும் – சாயி
  • சாஸ்வதமாய் நீ சாஸ்தாவாய் எங்களில் சங்கமிப்பாய்
  • இலந்தைப்பூ வெடுத்துன் இன்பப் பாதம் தொழுதால் – நீ
  • குழந்தையாய் மகிழ்ந்து குதூகலித்திருப்பாய்
  • எந்தையும் தாயும் எதுவும் நீ மட்டுந்தானே – சாயி
  • விந்தையில்லை யுன்பாதார விந்தம் மட்டுமே போதும்
  • இன்பப்பூ வெடுத்துன் இனிய முகம் கண்டு பாதம் பணிந்தால்
  • துன்பமென்ற ஒன்றுவந்து துயர் தருமோ ?
  • இன்னல், இருள்தீர்ந்து இரும்பூ தெய்தினோம் – சாயி
  • இன்பந் தவிர வேறு இணையுண்டோ உனைத் தவிர!
  • அஹிம்சைப்பூ வெடுத்துன்னடி போற்றிவிட்டால்
  • ஹயக்கிரீவராய் ஹனுமந்தனாய் வியப்பாகி விடுவாய் நீ
  • ஹரிஹராப் பரம்பிரம்மனே விட்டலனே கோவிந்தனே – சாயி
  • அரியும் சிவனுமாகி அகிலத்தில் வாழ்ந்திருப்பாய்
  • கல்விப்பூ வெடுத்துன் கவின் மலர்ப்பாதங் கண்டுவிட்டால்
  • ஐம்பூதத்திலுன் அருள்தனைப் பெற்றிடலாமே !
  • கேள்வி, வேள்வியும் நீ வேத கோஷமே நீயானாய் – சாயி
  • சிவசக்தியாய் லக்ஷ்மி நரசிம்மனாய் நலம்பல தந்திடுவாய்
  • நாமாவளிப்பூ வெடுத்துன் நற்பாதம் ஸ்பரிசித்தால்
  • ராமாவதாரத்தை ஆத்மாவில் உணர்ந்திடலாம்
  • பரம்பிரம்ம மிருத்யுஞ்ஜயனே பரமபிதாவே – சாயி
  • பரமாத்மனே பரமேஸ்வரனே உன் பாதாரவிந்தம் தா
  • பஜனாவளிப்பூ வெடுத்துனைப் பாடிப் பதம் கும்பிட்டால்
  • நிஜமான இன்பம் வந்து நித்தமும் சக்திதரும்
  • வஜ்ரவேலனாய், வனஜா, பங்காரு காமாட்சியாய் – சாயி
  • வக்ர துண்டனாய் வரந்தந்துலகை வாழ வைத்திடுவாய்
  • சீமை அத்திப்பூ வெடுத்துன் சீரான பாதம் துதித்துவிட்டால்
  • கூர்ம அவதாரனாய்க் கோடி சூர்யப் பிரகாசமாவாய்
  • சர்வ சக்தி, சாட்சி, காட்சி, மாட்சியானாய் – சாயி
  • ராமனே உலகில் சகல உயிர்களுக்கும் சாந்தியளிப்பாயே !
  • ராமபாணப்பூ வெடுத்துன் ராம பதம் துதித்து விட்டால்
  • ஸ்ரீ தசரத நந்தன ஸ்ரீ ராமனாய்த் தெரிந்திடுவாய்
  • காமதேனுவாய்க் கசிந்துருகிக் கருணை செய்வாய் – சாயி
  • நாம தேவனே உன் நாமஸ்மரணை யொன்றே போதும்
  • நீலோத்பலப்பூ வெடுத்துன் சற்குணப்பதம் கும்பிட்டால்
  • ஆலகால விஷமுண்ட நீலகண்டனாய்க் காட்சி தருவாய்
  • ஆலிலைக் கண்ணனும் ஆதிபகவனும் நீதான் – சாயி
  • கோலமயில் குமரனாய் குன்றிருக்கும்வரை நீயிருப்பாய்
  • நந்தியாவட்டைப் பூவெடுத்துன் நற்பாதம் அர்ச்சித்தால்
  • நந்தி தேவப் பரிவாரங்களுடன் சிவசிதம்பரனாய் வந்திடுவாய்
  • உந்திச் செல்லும் ஊர்வன உயிரிலும் உணர்ந்து காப்பாய் – சாயி
  • தொந்தி கணபதியாய்த் தொழுதிடவே வரம் தருவாய்
  • மூக்குத்திப்பூ வெடுத்துன் முகமலர் தூவிப் பதம் கண்டுவிட்டால்
  • மரங்கொத்திப் பறவைகூட மனமகிழ்ந்து சப்தமிடும்
  • சர்வ சக்தியும் சர்வாங்கமும் சாகித்யமும் நீதானே – சாயி
  • பூர்வ ஜென்மமும் புனிதமடைய முத்தான கருணை தருவாய்
  • சித்தகத்திபூ வெடுத்துன் சிரித்த முகப்பாதம் பணிவித்தால்
  • மொத்த அகத்திலும் ஆகமமாயுன் அருள்படியும்
  • சித்தனாய், சிவனாய், சீவனாய், சீலத்தை வழிநடத்தி – சாயி
  • புத்த, அல்லா, மகா வீரராய், ஏசுவாய், ராம அவதாரமானாய்
  • அரசாணிப்பூ வெடுத்துன் அன்புமுகம் அண்டிவிட்டால்
  • ஆலயந்தோறும் உன் அருள்முகந்தான் தெரியும் – சாயி
  • வேலனும் நீ வேள்வியும் நீயெங்கள் வேடந்தாங்கலும் நீ
  • காலனும் நீ காட்டிய காதவழி தொடரவே மாட்டான்
  • சர்க்கரைப்பூ வெடுத்துன் சாந்தமுகப் பாதம் பணிந்தால்
  • சர்க்கரையா யினித்துச் சாக்கிரதையாய் வாழவைப்பாய்
  • அக்கறையால் அருள் வழங்கி அருணோதய மாகிவிடுவாய்
  • எக்கறையும் பதிந்திடாது வாழ்வில் ஏணியாய் நின்று காப்பாய்
  • அனிச்சப்பூ வெடுத்துன் அருள்முகப் பாதம் பணிந்தால்
  • அனந்தகோடி ஆனந்தம் வந்து துந்துபியாய் மீட்டி விடும்
  • தன்னிச்சை போக்கிப் பொதுநலம் பேணச்செய்வாய் – சாயி
  • மெல்லிசையால் உன் நாமம் மெய்மறக்கச் செய்துவிடும்
  • பனம்பூ வெடுத்துன் பரம பாதார விந்தம் பணிந்து விட்டால்
  • தினமுமொரு திருமந்திரம் திக்கெல்லா மொலித்து விடும்
  • அனுதினமு முனையாராதித் தன்புமழை பொழிந்தால் – சாயி
  • கனுக்கரும்பாய்த் தித்தித்து கருணைமழை பொழியச்செய்வாய்
  • பசலைப்பூ வெடுத்துன் பரந்தாமப் பாதம் பணிந்தால்
  • கவலையற்றுக் காசினியில் கலங்காமல் வாழவைப்பாய்
  • ஆலிலைக் கண்ணனாய் அவனிக்காட்சி தந்தாய் – சாயி
  • மாலும், மருகனும், முருக முகுந்தனும் முடிவுமானாய் நீ
  • மூங்கில்பூ வெடுத்துன் பொற்பதம் சூடிப் பணிந்தால்
  • அங்கிங் கெனாதபடி யெங்குமுன் அருள் பிரகாசிக்கும்
  • வேழ முகத்துடன் வேண்டும் வரம்தர நான்மறையாய் நீ வந்திடுவாய்
  • வேம்பரசி, வேத மாதாவாய் வேண்டும்போதெல்லாம்
  • நீ வரமருள்வாய்
  • கொய்யாப்பூ வெடுத்துக் கொற்றவையுன் முகம் பணிந்துவிட்டால்
  • கொண்டாடாத மனமில்லை நீ கொலுவில்லா மனமுமில்லை
  • உன்திருக்கர விபூதி தரித்தால் கைலாய சுகங்கிட்டும் – சாயி
  • மெய்யாலுமுன் மேன்மை பெற இவ்வுலகுக்கு வயதில்லை
  • காகிதப்பூ வெடுத்துன் காந்தமுகப் பாதம் தொழுதுவிட்டால்
  • காசினியில் கடைசிவரை கலங்காமல் வாழ்ந்திடலாம்
  • காட்டாற்று வெள்ளமாய்க் கவலைகள் வந்தாலும் – சாயி
  • நடராச சிவமாய்ச் சீவன்களை வாழவைப்பாய்
  • பீர்க்கன்பூ வெடுத்துன் பீதாம்பரமுகப் பாதமர்ச்சித்தால்
  • மூர்க்கனும் மனிதனாகி மனிதநேய மாகிவிடுவான்
  • மார்க்கமும் நீ மதியொளி சூர்யச்சுடர் நீ – சாயி
  • மார்க்கண்டேய சிவமாகிச் சீவனானாய்
  • திருநீற்றுப்பச்சிலைப்பூ வெடுத்துன் சிவமுகப் பாதம் தரிசிக்க
  • ஒரு குறையில்லை மறைபோற்றும் தெய்வமாகினாய்
  • குறையேதுமில்லையென உனைத் தொழுதோம் – சாயி
  • கறைபடா மனம் தந்து மேதினியில் வாழ வைத்திடுவாய்
  • அருளன்புப்பூ வெடுத்துன் அகம் மகிழத் தொழுதிட்டால்
  • என்பு முருகி ஏகாந்தத் தவம் சித்திக்கும்
  • அன்னம், ஆடைக்கு குறையில்லை அன்னபூரணித் தாயே
  • எண்ணம், சொல், செயல், யாதுமாகி விட்டாய் நீ
  • அசோகப்பூ வெடுத்து அகம் மலர உன் பதம் பணிந்திட்டால்
  • விசாகனாய் வந்து வினையெல்லாம் களைந்திடுவாய்
  • ஆரோகணம் அவரோகணம் ஆனந்தபைரவி நீ – சாயி
  • யாராயினும் எம்மதமும் சம்மதமாய் சாந்நித்ய மளித்திடுவாய்
  • கரிசாலைப்பூ வெடுத்துனக்கிட்டு அர்ச்சித்தால்
  • கரிசனமாய்க் கனிவுடனே தரிசனமே தந்திடுவாய்
  • நாமஸ்மரனை செய்து நாதனுனைத் தொழுதிட்டால் – சாயி
  • சர்வேஸ்வரனாய் அரங்கிலே சாயி ராமனாய் வீற்றிருப்பாய்
  • பொன்னாங்கண்ணிப்பூ வெடுத்துன் பொன்மேனிக் கணிந்தால்
  • பொறுமையும் இனிமையும் தந்திடுவாய்
  • புண்ணான மனதிற்கும் பொன்போலப் பொருள்தருவாய் – சாயி
  • மண்ணில் மறையுமட்டுமுன் நினைவு மாறா மனம் தருவாய்
  • அத்தப்பூக் கோலமிட்டு அன்புடனுனைத் துதித்தால்
  • அச்சுதனாய் ஸ்ரீமன் நாராயணனாயதில மர்ந்திருப்பாய்
  • பகவதி பார்வதி பர்வத வர்த்தினியாய்ப் பாசமளிப்பாய் – சாயி
  • பவதாரணியாய் யுக அவதாரியாய் யுகந்தோறு முதித்திருப்பாய்
  • சித்தரத்தைப்பூ வெடுத்துச் சிந்தித்துனக்கிட்டால்
  • சித்திரமாய்த் தெரிந்து சிதறாமல் காத்திருப்பாய்
  • மந்திரமாகுமுன் நீறை நெற்றிதனில ணிந்திட்டால் – சாயி
  • எந்திரமான வாழ்க்கையும் மந்தமாருதமாகிவிடும்
  • நெட்டிலிங்கப்பூ வெடுத்துன் திருமார்பில் சூடிவிட்டால்
  • பட்டிலிங்கப் பெருமானாய்ப் பேரூரில் வலம் வருவாய்
  • மரகதலிங்கமே மாமணியே மாதவம் செய்ததால்தான் – சாயி
  • மறந்துமுனை மறவாத மனம் தந்து காத்திட்டாய்
  • துளசிப்பூ வெடுத்துன் திவ்ய பாதம் தரிசித்தால்
  • மகாலக்ஷ்மி நாராயணனாய் நந்தாவிளக்காய் நீ வருவாய்
  • அஷ்டலக்ஷ்மிகளுமாய் அணிவகுத்து அருள்பாலித்திருப்பாய்
  • சத்யசாயி இஷ்ட தெய்வமா யெங்களிதயத்தில் இதமளிப்பாய்
  • வெற்றிப்பூ வெடுத்துன்னை வீற்றிருக்கச் செய்திட்டால்
  • வற்றாத கடல்போல் வாழ்வது சிறந்திருக்கும்
  • கற்றறிந்த சான்றோரும் கல்லாதோருமுனக் கொன்றுதானே – சாயி
  • சுற்றம் சூழ வந்திருந்து உனைத் தொழுது துதித்திடுவோம்
  • மயில் மாணிக்கப்பூ வெடுத்துன் மார்பதனில் சூடிவிட்டால்
  • குயிலுங்கூவி மயிலு மகவித் தோகை விரித்தாடிவிடும்
  • பயிலும் மாணாக்கரிடத்திலுன் அன்பு அகமகிழும் – சாயி
  • துயிலும் போது கூடத் துணையாகக் காத்து நிற்கும்
  • தெத்திப்பூ வெடுத்துன் திருப்பாத மலர் சூட்டிவிட்டால்
  • தத்தித் தவழ்ந்திடுஞ்சிறு குழவியாய்க் குதூகலிப்பாய்
  • புத்தியிலுனைத் தேடித் தெய்வமாய்த் தொழுதோம் – சாயி
  • சத்தியமாய் சாஷ்டாங்க மாயுனைச் சரணடைந்தோம்
  • சுரைப்பூ வெடுத்துனைச் சுந்தரமாய்த் தொழுதிட்டால்
  • கரையிலாக் கடல்போலுன் கருணை சார்ந்திருக்கும்
  • மறைபோற்றும் மாமணியே மாதவமே நீயானாய் -சாயி
  • இறையென்று இவ்வுலகில் இனியதை இசைவித்தாய்
  • லில்லிப்பூ வெடுத்துன் அல்லி மலர்ப்பாதம் பணிந்தால்
  • கொள்ளிடக் காவிரியும் குற்றாலமாய்க் குதூகலிக்கும்
  • அள்ளிப்பருகிடும் அருவியாய்க் குளிர்ந்து நீயும்
  • பள்ளி கல்லூரிக் கல்விதனை நிலைப்படுத்தி நிலைக்கச் செய்தாய்
  • அலரிப்பூ எடுத்து இன்ப சாயி உனைப் பணிந்தால்
  • அலாதியின் பந்தனை அள்ளியே தந்திடுவாய்
  • ஆதாரம் அன்புக்கு நம்பிக்கைதா னென்றுரைத்து
  • சேதாரமில்லாமல் எங்களைச் சேர்ந்தே இருந்து விடுவாய்
  • இருவாட்சிப்பூ வெடுத்து இனியவை கூறித் தொழுதால்
  • சுகவாசியாக்கி சுபிட்சத்தைத்தான் தருவாய் – உன்
  • அரசாட்சி மதுரையில் அருளாட்சி பர்த்தியில் – சாயி
  • மனக்காட்சிதனில் உயிருள்ளவரை உயிர்த்திருப்பாய்
  • ஆயிரம் கோடி மலர்களிலே ஆறுமுகனாய் நினைத்தோம்
  • பாயிரம் பல பாடிப் பாங்காகவே துதித்தோம்
  • ‘சாயிராம் சாயிராம்’ என உந்தன் சேயாகி உயிர் வாழ
  • ஸ்ரீ சத்திய சாயி பாபாவே சகலமாய் நீயிருப்பாய்
  • ஐவரளிப்பூ வெடுத்துன் அங்கமதில் தூவி வழிபட்டால்
  • ஐம்பூதமும் அருள் தந்து அறநெறியில் அன்பு செய்யும்
  • ஐம்பெருங்காப்பியமும் அள்ளித்தந்த தமிழும் – சாயி
  • ஐந்தொழில் புரிந்து நீ அருள்வதைத்தான் சொல்லும்
  • ஆம்பல்பூ வெடுத்துன் ஆத்ம முகம் பணிந்தால்
  • சாம்பலணிந்த சிவனாய் நெற்றிக் கண்ணுடன் நீ தெரிவாய்
  • சோம்பல் நீங்கி புதுச்சுகமும் கிடைத்து விடும் – சாயி
  • காம்பிலும் நீ கனியின் சுவை தந்து காப்பாய்
  • கடுகுப்பூ வெடுத்துன் காந்தப் பதம் பணிந்திட்டால்
  • கடுகளவும் கூடத் துன்பம் வந்துவிடாது
  • மடுவும் மகிழ்ந்துவிடும் உன் மாதவப் பார்வையதுபட்டால் – சாயி
  • எடுக்கும் பிறவிதோறும் எதிலும் நீயிருந்து காப்பாய்
  • காந்தள்பூ வெடுத்துன் செம்பாதம் தொழுதிட்டால்
  • கதிரவன் உதயமாகும் காலைப்பொழுது நினைவு வரும்
  • உதிரமெல்லாம் புது உற்சாகம் ஊற்றெடுக்கும் – சாயி
  • மதுரமான உன் குரல் மாயாஜாலம் காட்டிவிடும்
  • மனோரஞ்சிதப்பூ வெடுத்துன் மடிதனில் வைத்திட்டால்
  • துணைவந்து காத்து நின்று தூது வந்து களித்திருப்பாய்
  • குறவஞ்சி வள்ளி மணாளனாய்க் குன்றினிலே குடியிருப்பாய் – சாயி
  • குற்றமுள்ள நெஞ்சினையும் நற்பவியாக்கி அருள்தருவாய்
  • வானவில் பூ வெடுத்துனக்குச் சூடி அழகு பார்த்தால்
  • வசந்தமே வந்து வாயிலில் குடி புகுந்திடும்
  • வாசமில்லா மலரில் கூட உன் வசம் நிறைந்துவிடும் – சாயி
  • பூசனை செய்யப் பூமியிலுனையன்றி யார் துணை ?
  • இட்லிப்பூ வெடுத்துன் இன்முகப் படத்தில் சூடிப் பார்த்தால்
  • இணையில்லா இன்பம் வந்து இதயத்தில் குடிபுகுந்துவிடும்
  • தன, தான்யம் தந்து தான்யலக்ஷ்மியாயிருப்பாய் – சாயி
  • தயை செய்து காப்பதில் தயாபரியாகிடுவாய்
  • தென்னம்பூ வெடுத்துக் கண்ணனாய் தேவனுனக்குச் சூடினால்
  • செவ்விள நீரில் தாகம் தீர்த்து நீ காத்திடுவாய்
  • செவ்வாடை யிலுனைச் செவ்வனே தரிசித்தால் -சாயி
  • செய்யத்தவம் வேறேதுமில்லை உன் கருணைக்குப் பஞ்சமில்லை
  • ஊமத்தம்பூ வெடுத்து ஒருமுகமாயுனைப் பணிந்தால்
  • உன்மத்தம் பிடித்தவனும் தன் வசமாகி விடுவான் – சாயி
  • சாம, யாமத்தில், ஏகத்தில், துணைவந்து நீ எதிர்நிற்பாய்
  • யாக யக்ஞத்தில், யதுகுலத் திலகனாய் நின்றிருப்பாய்
  • துத்திப்பூ வெடுத்துத் தூய உன் மலரடி பணிந்தால்
  • தித்திக்கும் தேன்பாகாய்த் திகட்டாது இனித்திருப்பாய்
  • புத்திக்கும் புனர்வாழ்வளித்து புதுமைதனைச் செய்திடுவாய்
  • எத்திக்கும் தெய்வமுன்னருள் நின்று சரித்திரம் படைத்துவிடும்
  • அத்திப்பூ வெடுத்துனை அகம் மலர அர்ச்சனை செய்தால்
  • அத்தி பூத்தாற்போலானவுன் அவதாரம் அதிசயிக்கும்
  • சித்த சுத்திசெய்து அகத்திலும் சுகந்தந்து – நீ
  • பர்த்தி ஷேத்திரத்தைப் பாரெல்லாம் பார்க்கவைத்தாய்
  • தாழம்பூ வெடுத்துன் தங்கப்பாத மலங்கரித்தாலுன்
  • தங்க நிற மேனியும் தயைதந்து முறுவலிக்கும்
  • தாங்க வொண்ணாத்துயர்கூட உன் தயவா லோடிவிடும் – உன்
  • தங்கத்தேர் தரிசனத்தில் அங்கமெலாம் அகமகிழ்ந்தோம்
  • சம்பங்கிப்பூ வெடுத்துச் சந்தோஷமாயுனக்குச் சூட – நீ
  • சமபங்காயருளமுதைக் கருணையாய் ஈந்திடுவாய்
  • எம் பங்கு உனைநோக்கி ஓரடியெடுத்து வருவதே – சாயி
  • உன் பங்கு ஒன்பதடியாய் ஓடிவந்து காத்திடுமே
  • மகிழம்பூ வெடுத்து மனமகிழ்ந்துனைத் துதித்தால் – அம்
  • மார்கழியே நீயாகி மனதே மகிழ்ந்திடுவாய்
  • அகிலமுழுதுமுன் அன்பு வெள்ளந்தான் சாயி – நீ
  • துயிலும்போதும் துணைநின்று காத்தருள்வாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0