தோலை முதலில் சாப்பிடுவோர்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வாழைப்பழங்களை யார் சீக்கிரம் சாப்பிடுவது என்ற போட்டி ஒரேக் கல்லூரியில் பயிலும் இரு மாணவரிடையே எழுந்தது. நல்ல நடுவர் ஒருவர் முன்னிலையில் இருவரும் வாழைப்பழக் கூடையுடன் நின்றனர்.
முதலில் தோலைச் சாப்பிட்டுவிட்டால் அதன்பின் பழத்தைச் சாப்பிடுவது சிரமமாக இருக்காது என்று ஒருவன் தீர்மானித்தான். ஆனால் மற்றவனோ பழத்தைச் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டால் அடுத்துத் தோலைச் சாப்பிட நிறைய நேரம் கிட்டுமென முடிவு செய்தான்.
ஆனால், தோலை முதலில் சாப்பிட்டவனுக்குப் பழத்தைச் சாப்பிட வயிற்றில் இடமில்லாமல் போய்விட்டது. பழத்தை முதலில் சாப்பிட்ட மற்றவனுக்குத் தோலைச் சாப்பிட இடமில்லாமல் போய்விட்டது.
இருவரும் போட்டியில் தோற்றுவிட்டனர்; இருப்பினும் அவர்கள் பெற்ற அனுபவம் வேறு வேறானது.
ஒருத்தன் கசப்புச் சுவையை மட்டும் அனுபவித்தான். ஆனால் மற்றவன் அனுபவித்ததோ இனிப்புச்சுவை. பெரும்பாலான மக்கள் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தப் பின்பே இறைவனையும் அவரது நட்பையும் அனுபவிக்கவேண்டும் என முடிவு செய்கின்றனர். தோலைச் சாப்பிட்டுப் பசி அடங்கியபின் பழத்தைச் சாப்பிட விரும்புபவர்கள் இப்படிப்பட்டவர்கள். முதல் இடம் இறைவனுக்கே அளிக்கப்படவேண்டும். அதனால் நீங்கள் அடையும் சாந்தியும், மகிழ்ச்சியும் எல்லையற்றதாக இருக்கும்.