இப்போதே
சிறு நகரமொன்றில் நடுத்தரக்குடும்பம் ஒன்று இருந்தது; அந்தக் குடும்பத்தலைவி இறைவழிபாட்டுக்கும், பூஜைக்கும் சிறிது நேரமாவது ஒதுக்கும்படி தினமும் தன் கணவனுடன் வாதிடுவாள். அதற்கு அந்தக் கணவன் அதெல்லாம் வயதானவர்களுக்கு உரியது: இப்போது நன்றாக சம்பாதித்துச் செலவழிக்க வேண்டிய நேரம்; எனவே பின்னால் நல்ல ஓய்வுகிட்டும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மறுத்து விடுவான். அந்த பதில் பக்திமிக்க அந்தப் பெண்ணுக்கு மனநிறைவுதரவில்லை. இருப்பினும் தக்கத் தருணம் வரும்பொழுது அந்த அறிவுரையை மீண்டும் அவர் காதில் போடலாம் எனக்கருதி அவள் பொறுமையாய் இருந்தாள்.
இதற்கிடையில் கணவனுக்குக் கடுமையான நோய் வந்து சிலவாரங்கள் படுக்கையில் விழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தினமும் மூன்று வேளை மருந்துக் கொடுக்கும்படி மருத்துவர் கூறினார். மருந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி மாத்திரையைத் தன்னிடம் வைத்துக் கொண்டாள்; ஆனால் ஒன்றைக்கூட அவனுக்குக் கொடுக்கவில்லை.
அவள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதை பொறுக்க முடியாத கணவன் ஆத்திரமுற்று மாத்திரையைக் கேட்டான்; ஆனால் அவளோ இப்போதும் மாத்திரையைக் கொடுக்காமல் அடம் பிடித்தாள். “என்னைக் கொல்ல சதிசெய்கிறாயா?” என்று அவன் கேட்டதற்கு அவள், “பொறுங்கள்! பொறுங்கள்! மாத்திரைக்கு ஏன் இத்தனை அவசரம். நோய் இன்னும் சற்று கடுமையாகட்டும். அதன்பின் மாத்திரை சாப்பிடலாம். வழிபாடும், நாமஸ்மரணமும் செய்யும்படி உங்களிடம் நான் கூறிய போது “ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? சற்று பொறுமையாய் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிறைய ஓய்வுகிட்டும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னீர்கள் அல்லவா?” என்று பதிலளித்தாள். தான் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று கணவன் இதன் மூலம் உணர்ந்து கொண்டான். எனவே அவன் செல்லும் பாதைகளைச் செப்பனிட்டான். அதன் மூலம் தனக்கிருந்த இருவிதமான நோய்களையும் குணப்படுத்திக் கொண்டான். (ஒன்று உடல் நோய்; மற்றது ஆன்மீக நோய்.)