பக்திக்கு மரணமில்லை
- சுவாமி உன் பக்தர்களுக்கு
- மரணமே இல்லை
- உன் பாதத்தில் மலராகவோ…
- உன் கையில் கைக்குட்டையாகவோ…
- மழைக்கு மரணம் இருக்கிறதா?
- அதற்கு மறுபிறவி இருக்கிறதே தவிர
- மரணம் இல்லையே
- உன் கால்களில் விழுகிற போது
- அருவியாகிறேன்
- அது விழுவது என நினைக்கிறார்கள்
- உன் கால்களில் விழுவது என்பது
- எழுவது அல்லவா
- ஆன்ம விழிப்பல்லவா உன்
- பாதங்களில் விழும் போது ஏற்படுகிறது
- உன் பக்தரை தேர்ந்தெடுத்த உடன்
- மார்க்கண்டேயராய் அவர்களை
- மாற்றி விடுகிறாய்
- சித்ர குப்தனின் புத்தகத்தில்
- உன் பக்தர்களின் பெயர்களே இல்லை
- யம லோக வாசனை கூட
- எந்த உன் பக்தர் நாசியும் நுகர்ந்ததில்லை
- யம லோக வாசலைக் கூட
- எந்த உன் பக்தர் கால்களும் நுழைந்ததில்லை
- உன் பாதங்களில் விழுந்த பிறகு
- பூமியும்
- வைகுண்டமும் ஒன்றுதான்
- வித்தியாசமேதும் இல்லை
- உன் கரங்களில் வந்துவிட்ட பிறகு
- பாரங்கள் என்பவை
- ஈரங்களாய்க் காய்ந்துவிடுகிறது
- உன் பெயரை உச்சரிக்கும் போது
- உயிரை உச்சரிக்கும் ஆன்மாவாய்
- சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது
- சிவந்து போன உள்ளம்
- ஏதாவது ஒரு பிறவியில்
- ஏதேனும் ஒரு புண்ணியம்
- தெரியாமல் செய்திருந்தாலும்
- தெரிந்தே அவர்களை பக்தராய்
- ஏற்றுக் கொள்கிறாய்
- உலகத்தை எல்லாம்
- உன் பக்தராய் மாற்ற மாட்டாயா சுவாமி?
- சிறைச்சாலைகளுக்கும்…
- நீதிமன்றங்களுக்கும்…
- காவல் நிலையங்களுக்கும்…
- விடுமுறை கொடுத்துவிடலாமே
- உள்ளத்தை உன்னிடம்
- கொடுத்துவிட்ட பிறகு
- கவலைகளுக்கு எப்படி அதனை
- தாரை வார்க்க முடியும்?
- ஆன்மாவை உன்னிடம்
- அள்ளிக் கொடுத்த பிறகு
- பந்தபாசம் எப்படி அதனை
- தத்து எடுக்க முடியும்?
- உடம்பையும் உனக்கே கொடுத்துவிட்டேன்
- நீதான் அதையும் தொட வேண்டுமே தவிர
- மருத்துவர் அல்ல…
- உயிர் உன்னையேச் சுற்றி வருகிறது
- அதை கவனிக்கும்
- மரணத்திற்கே தலை சுற்றுகிறது
- விளக்கில் சுடர் அணைந்தால்
- அதன் ஆவி பறக்கிறதே!
- நீ மட்டும் தான் சுவாமி
- பக்திச் சுடரை அணைய விடாமல்
- இன்னொரு விளக்கிற்கு ஏற்றிவிடுகிறாய்
- உன் பக்தராய்
- என்னை வைத்திருக்கிறாய்
- என்பதால் அந்த
- மரணத்திற்கே பயமே தவிர
- மரண பயமில்லை எனக்கு
- உடல் சட்டைக் களைந்து
- இன்னொரு சட்டை அணிந்தாலும்
- உன் அடுத்த அவதாரத்திற்கே
- அலங்காரம் ஆகுமே தவிர
- அங்காடியில் எப்படி அது
- வியாபாரமாகும்?
- பக்தர்கள் நாங்களோ உன்
- பொம்மைகள்
- சுவாமி நீ ஒரு குழந்தை
- எப்படி எங்களை
- இன்னொருவர் கைகளில்
- கொடுக்க முடியும் உன்னால்?
- அது எவனானாலும்
- அது எமனானாலும்
- எவரிடமும் எங்களை நீ
- விட்டுக் கொடுக்காமல்
- உன்னிடமே நீ வைத்துக் கொள்கிறாய்
- உன் புகைப்படத்தில்
- நீ சிரிக்கும் ஒவ்வொரு கணமும்
- மரணம் மரிக்கும்
- உள்ளத்தில் நீ நடமாடும்
- கணக்கற்ற நொடி நடக்கும்
- எங்களின் நாடியோ
- உன் பெயர் சொல்லியேத் துடிக்கும்
- எமனின் பாசக் கயிற்றில்
- என்றுமே அகப்படுவதில்லை
- சுவாமி நீ வந்து கொண்டிருக்கும்…
- சுவாமி நீ தந்து கொண்டிருக்கும்…
- சுவாசக் கயிறு
- கவிஞர் வைரபாரதி