அனில் குமார்: சுவாமி! எங்களுடைய பாக்கியம் அளவற்றது, எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கருணையே. இதை நாங்கள் எப்படித் தக்கவைத்துக்கொள்வது?

பகவான்: பார்! லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேரால் இங்கே இருக்க முடிகிறது? இவ்வளவு அணுக்கம் எல்லோருக்கும் சாத்தியமா? கடந்த ஜன்மங்கள் பலவற்றில் செய்த புண்ணியம் உங்களுக்கு இந்த பாக்கியத்தைக் கொடுத்துள்ளது. நமது கல்விநிலையங்களில் உள்ள சில ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேருக்கு இங்கு (கொடைக்கானலுக்கு) வரும் பாக்கியம் உள்ளது? சிலர் மட்டுமே என்னுடன் வந்திருக்கிறார்கள். இதை நீங்கள் கவனமாகத் தக்கவைத்துப் பாதுகாக்க வேண்டும்.

ஒரு சிறிய உதாரணம். இதோ ஒரு நூல்கண்டு. இது சுற்றியும் சுழற்றியும் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மிக நேரமெடுக்கும் வேலை! சற்றே அவசரப்பட்டு, பாதி செய்யும்போது கீழே தவறவிட்டால் எல்லா நூலும் தரையில் விழுந்து சிதறிவிடும். உங்கள் பாக்கியமும் கவனமாகச் சுற்றப்பட்ட இந்த நூல்கண்டு போலவே, பல ஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களால் ஆனது. ஏதோவொரு கவனக்குறைவால் இந்த பாக்கியத்தைக் கை தவறவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. உங்கள் உழைப்பு அத்தனையும் வீணாகிவிடும். நூல்கண்டின் நடுவிலிருக்கும் அட்டையைப் போன்றது நம்பிக்கை, அதன்மீதுதான் உங்கள் புண்ணியங்கள் சுற்றி வைக்கப்படுகின்றன. எனவே உங்கள் அதிர்ஷ்டத்தை அசட்டை செய்துவிடாதீர்கள், அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள், மிகச் சாதாரணமானதாகவும் பார்க்காதீர்கள். ஆன்மசாதகர்களுக்கு அலட்சியமும் கவனமின்மையும் ஊறு விளைவிப்பவை.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0