அனில் குமார்: சுவாமி! தியாகராஜர் மிகநன்கு அறியப்பட்ட ராமபக்தர். இன்றைக்கும் பாடப்படும் பல கிருதிகளை இயற்றியவர். அவரது சிறப்பு என்ன?
பகவான்: உலகெங்கிலும் பக்திப்பாடல்களை இயற்றிய பக்தர்கள் பலர் உள்ளனர். பகவானும் அவர்களை ஆசிர்வதித்தார். இந்தப் பாடல்கள் உனக்குப் பேரானந்தமும் அமைதியும் தருகின்றன. ஆனால், தியாகராஜரின் கிருதிகளுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அவரது ஒவ்வொரு பாடலும் அவர் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றோடு தொடர்பு கொண்டது.
உதாரணமாக, தஞ்சாவூர் மஹாராஜா அவருக்கு நகைகள், மளிகைப் பொருட்கள், விலையுயர்ந்த அன்பளிப்புகள் எல்லாம் அனுப்பியபோது, தியாகராஜர் மென்மையாக, மரியாதையோடு அவற்றை மறுத்தார்; அவர் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளும் ஒரு கிருதியாக அதை எழுதினார், “நிதி சால சுகமா ராமுனி சன்னிதி சேவ சுகமா?” என்று. அதாவது, ‘பணம் உன்னைச் சந்தோஷப்படுத்துகிறதா இல்லை பகவானின் சன்னிதியா?’ என்பது பொருள்.
அவருடைய சகோதரர் ஒருமுறை தியாகராஜர் பூஜித்த விக்கிரகங்களை காவேரி நதியில் தூக்கி எறிந்துவிட்டார். இந்த இழப்பைக் குறித்துத் தியாகராஜர் பரிதாபமாக அழுதார். ஒருநாள் காவேரியில் நீராடிக் கொண்டிருக்கையில் ராமரின் கருணையால் அந்த விக்கிரகங்கள் திரும்பக் கிடைத்தன. அவற்றைத் தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அவர், “ராரா மா இன்டி தக ரகுவீரா சுகுமாரா” (ஸ்ரீராமா என் வீட்டுக்கு வா) என்று பாடினார்.
அரசவையில் நடந்த ஒரு கச்சேரியில் அவர் அங்கிருந்த மகான்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, “எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு” (ஏராளமான மகான்கள் இங்கு உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் என் வந்தனம்) என்று பாடினார். இதுபோல, தியாகராஜர் இயற்றிய ஒவ்வொரு கிருதியும் வாழ்வின் உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவை. அவருடைய பாடல்கள் பக்தி மற்றும் சரணாகதியை நடைமுறையில் விளக்குகின்றன.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு