இரட்டிப்பு விலை
பழுதாகிவிட்ட கடிகாரம் ஒன்றை, ஒருவன் சரி செய்ய எடுத்துச்சென்றான்.
கடிகாரம் மிகப்பழையது என்றும், பழுது பார்த்தால் கடிகாரத்தின் விலையை விட அதிகமாகப்பணம் செலவாகும் என்றும் கடைக்காரன் சொன்னான். “எவ்வளவு செலவானாலும் பழுது பார்க்கவே நான் விரும்புகிறேன்”, என்றான் கடிகாரத்துக்குரியவன். உதவாக்கரையான இந்தப்பழைய கடிகாரத்தைப்பழுது பார்க்கும்படி வந்தவன் வலியுறுத்துவதைப் பார்த்தால் ஒரு வேளை அது அதிர்ஷ்டமிக்க கடிகாரமாக இருக்குமோ? என எண்ணினான். பழைய உதிரிபாகங்களை அகற்றிவிட்டுப் புதிய பாகங்களை வைத்து சரிசெய்து கடிகாரத்தை அதற்குரியவனிடம் கொடுத்தான்;
கொடுத்த பின்பு கடைக்காரனுக்கு இரண்டு அறைகள் கொடுத்தான் வந்தவன்.
அருகிலிருத்தவர்கள் அறைந்தவனைப் போலீஸில் ஒப்படைத்தனர். “கடைக்காரனை ஏன் அடித்தாய்?” எனக்கேட்டனர் போலீஸார். “இதைப்பழுது பார்க்க, வாங்கும்போது கொடுத்ததைப்போல் இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும், என்று கடைக்காரன் கேட்டான். அவன் கேட்டபடிதான் கொடுத்தேன். நான் இதைப் பணம் கொடுத்து வாங்காமல் ஒருவனை அறைந்து வாங்கினேன். அந்தக் கணக்குப்படிதான் பழுதுபார்த்தவனை இரண்டு தடவை அறைந்தேன்” என்றான்.
“அங்கே நீ கடைக்காரனுக்கு இரு மடங்கு கொடுத்தாய். இங்கே நாங்கள் உனக்கு இரு மடங்கு தருகிறோம்” என்று போலீஸ் அவனை அறைந்தனர்.