காலமாகிவிட்ட கழுதை

ஆன்மசாதனையில் அல்லது சம்சாரத்தில் ஈடுபடும்போது தீரவிசாரித்து அது உங்களுக்கு நன்மையைத்தான் நல்கும் என்ற மனநிறைவு ஏற்பட்ட பின்புதான் நீங்கள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கவேண்டும். இல்லையேல் அது நகரமே அழுத கதையாகிவிடும். ஒருநாள் அரசிக்கு நெருக்கமானப் பணிப்பெண் அரண்மனைக்கு மிகுந்த துக்கத்துடன் அழுதுகொண்டே வந்ததைப் பார்த்த அரசியும் கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார்.

அரசி அழுவதைப் பார்த்து அந்தப்புரத்திலுள்ள அனைவரும் அழுதனர்; அதன்பின் அந்த அழுகை ஆண் ஏவலாளர்களிடமும் பரவியது. ஆறுதல்படுத்தமுடியாத அளவிற்கு அரசி அழுவதைப்பார்த்த அரசனும் அவள்மீது அனுதாப்பட்டு வெகுவாக அழுதான்.

இப்படியாக அழுகை எல்லா இடத்திலும் தொற்றிக் கொண்டதால், நகர்முழுவதுமே இடைவிடாமல் உரத்தகுரலில் அழுதுகொண்டிருந்தது. கடைசியில் புத்திசாலியான ஒருவன் ஒவ்வொருவரிடமும் அதற்குரிய காரணத்தை விசாரித்துக் கொண்டுவந்து இறுதியில் ராணியையும் விசாரித்தான். அவளுடைய வேலைக்காரி பட்டத் துயரமே அதற்குக் காரணம் என்று ராணி கூறினாள்.

முடிவாக வண்ணான் இனத்தைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை விசாரித்தபோது, இத்தனை களேபரத்துக்கும் காரணம், தான் செல்லமாக வளர்த்த கழுதை திடீரென இறந்துவிட்டதாகக் கூறினாள். இந்தச் செய்தி பரவியவுடன் அழுகை நின்று எங்கும் சிரிப்பும் வெட்கமும் நிலவியது. எனவே காரணத்தைக் கண்டுபிடியுங்கள்; நன்மைத் தீமைகளை ஆய்வு செய்யுங்கள்; அவசரப்பட்டு முடிவு எடுப்பதோ வதந்திகளை நம்பி செயலாற்றுவதோ கூடாது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0