ஞான தீபம் ஏற்றுதல்

ஒரு முறை சாதகர் ஒருவர் தெய்வீகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவலுடன் இருந்தார். அவருடைய ஞானக்கண் திறக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். குரு ஒருவர் தங்கியிருந்த குகை ஒன்றுக்குள் அவர் நுழைந்தார். 

குகைக்குள் நுழையும்போது சிறு விளக்கு ஒன்றைப் பார்த்தார். அவர் சற்று தூரம் சென்றதும் அந்தச் சிறு விளக்கும் அணைந்து விட்டது.

 இருட்டில் யாரும் பயந்து விடுவது வழக்கம்; அந்த பயத்தில் இறைவனைத் தீவிரமாகச் சிந்திக்கிறோம். அதன்படி அவர், ‘நமசிவாய’ என்னும் நாமத்தை உரக்க உச்சரித்தார். அதைக் கேட்ட அந்த மஹான் அவரை, ‘’நீ யார்’’ என்று கேட்டார். அதற்கு அவர் அவருடைய அருள் நாடியே தாம் வந்திருப்பதாக பதிலளித்தார். காற்றையே உணவாகக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்த அந்தப் பெரிய மஹான், வந்தவரின் எண்ணத்தை அறியும் ஆற்றல் பெற்றவர். முதலில் அணைந்து போன விளக்கை ஏற்றும்படியும், அதன்பின் அவருடைய வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் அவர் பதில் அளித்தார். வந்தவர் தீக்குச்சி ஒன்றை எடுத்து விளக்கை ஏற்ற முயன்றார். ஆனால், வெற்றி பெறவில்லை. குச்சிகள் அனைத்தையும் பயன்படுத்தியும் விளக்கை ஏற்ற முடியவில்லை என்று அவர் குருவிடம் கூறினார். விளக்கில் எண்ணைய் இருக்கிறதா என்று குரு அவரைப் பார்க்கச் சொன்னார். அதில் எண்ணைய் இல்லை என்றும் தண்ணீர்தான் இருக்கிறது என்றும் அவர் குருவிடம் கூறினார். அதன்பின் நீரைக் கொட்டிவிட்டு எண்ணைய் ஊற்றி விளக்கை ஏற்ற முயலும்படி குரு கூறினார். அப்படி செய்தும் அவரால் விளக்கை ஏற்ற முடியவில்லை. ‘’ஒருவேளை திரி ஈரமாக இருந்திருக்கலாம் , திரியை உலர்த்தி விளக்கை ஏற்றுவாயாக’’ என்று குரு கூறினார். அப்படிச் செய்தபின் விளக்கு எரிந்தது.

 அதன் பிறகு வந்தவருக்கு வந்த நோக்கத்தைக் கூறும் துணிவு வந்தது. அதை அருளும்படி அவர் குருவிடம் வேண்டினார். ‘’ அதற்குரிய விடையைத்தான் நான் இத்தனை நேரமும் அளித்துக் கொண்டிருந்தேன்’’ என குரு கூறியதைக் கேட்டு, வந்தவர் வியந்தார். வந்தவர் தன்னை அறிவில் குறைந்தவர் என்றும் அதனால் குருவின் போதனையின் உட்பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், எனவே அதைத் தெளிவாக விளக்கும்படியும் குருவிடம் மன்றாடினார்.

அதற்கு அவர், ‘’உனது இதய தீபத்தில் ஜீவாத்மா என்னும் திரி இருக்கிறது. அந்தத் திரி இத்தனை நாளும் உனது புலன் இன்பம் என்னும் நீரில் மூழ்கி இருக்கிறது. அதனால், விவேகம் என்னும் விளக்கை உன்னால் ஏற்ற முடியவில்லை. ஆசை என்னும் நீரை, உனது இதய தீபத்தை விட்டு வெளியே கொட்டு. அதை இறைவனின் நாமங்களால் நிரப்பு. ஜீவாத்மா என்னும் திரியை வைராக்கியம் என்னும் சூரிய ஒளியில் உலர வை. ஆசை எனும் வடிவில், திரியில் இருந்த நீரனைத்தையும் பிழிந்தெடுத்துவிடு. இதயத்தில் பக்தி அல்லது இறை நாமம் எனும் எண்ணையை நிரப்பு. அதற்குப் பிறகுதான் விவேகம் என்னும் விளக்கை ஏற்ற முடியும்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0