அனில் குமார்: சுவாமி! கடவுளின் கருணையைப் பெற என்ன செய்யவேண்டும்?

பகவான்: பக்தியைத் தவிர வேறு வழியில்லை. உன் செல்வம், படிப்பு, அதிகாரம், தோற்றப்பொலிவு இவையெல்லாம் கடவுளை மகிழ்விக்காது. உன் பக்தியைமட்டுமே கடவுள் பார்க்கிறார்.

ராமாயணத்தில் குஹனைத் தெரியுமல்லவா? ராமரை மகிழ்விக்க அவன் என்ன படித்திருந்தான்? அவன் படிப்பறிவற்றவன். தீவிர ராம பக்தையான சபரியைப்பற்றியும் கேட்டிருப்பீர்கள். ராமரின் நெருக்கத்தைப் பெற அவள் எத்தனை செல்வம் வைத்திருந்தாள்? எதுவுமில்லை. அப்போது அவள் கந்தை உடுத்திக்கொண்டிருந்தாள், மிக மிக ஏழை. ராமரின் தெய்வீகக் கரத்தால் இறுதிக்கடன்கள் செய்யப்பெறும் பாக்கியத்தை ஏன் ஜடாயு அடைந்தான்?

பறவையான ஜடாயுவுக்குக் கிடைத்த பாக்கியம் ராமரின் தந்தையான தசரதனுக்குக்கூடக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவர் இறக்கும் சமயத்தில் ராமர் அயோத்தியிலிருந்து வெகு தொலைவில், காட்டில் இருந்தார். ஒரு வானரமான ஹனுமனைப்பற்றி யோசியுங்கள். அசையாத நம்பிக்கை மற்றும் பரிபூரண சரணாகதியினால் ஹனுமன் தனக்குக் கொடுக்கப்பட்ட பெரும்பணியில் வெற்றி பெற்றதுடன், ராம பக்தர்களால் பூஜிக்கவும் படுகிறார். இந்த வழிபாடு ராமவதார காலத்திலிருந்தே நடந்துவருகிறது.

பாண்டவர்களின் ராணியான திரௌபதியை மஹாபாரதம் மிகப்பெரும் கிருஷ்ண பக்தையாகச் சித்திரிக்கிறது. வெற்றியோ தோல்வியோ, துக்கமோ சந்தோஷமோ, கலக்கமோ அமைதியோ எப்போதும், ஹஸ்தினாபுர அரண்மனையின் சிம்மாசனத்திலோ கானகத்திலோ எல்லா இடங்களிலும் அவள் பக்தியோடிருந்தாள்.

கிருஷ்ணன்மீது அளவற்ற அன்பு பூண்டிருந்த பாண்டவர்களின் பக்தியும் மிகப்பிரசித்தி வாய்ந்தது. மனதின் சமநிலைக்கும் பூரண சரணாகதிக்கும் அவர்களே உதாரணம். எவ்வளவு என்றால், தர்மராஜன் தனது சிரம், அர்ஜுனன் தனது இதயம், பீமன் தனது தோள்கள், நகுல சஹதேவர்கள் தனது பாதங்கள் எனக் கிருஷ்ணர் சொல்லுமளவுக்கு அவர்களுடைய பக்தி இருந்தது. இதுவே உண்மையான பக்தி. இதுதான் பக்தன் அடையவேண்டிய அந்தஸ்து.

பாகவதத்தில் கிராமவாசிகளான, அப்பாவியான, படிப்பற்ற கோபியரைப் பார்க்கிறோம். அவர்கள் மதுரபக்தியும் கடவுள்மீது தீவிரப் பற்றுதலும் கொண்டிருந்தார்கள். இவற்றுக்கு ஆதாரமாக இருந்தவை அன்பும் சரணாகதியுமே. அவர்களுடைய பக்தி புனிதமானது, தூயது, அமுதமயமானது, மிகவுயர்ந்தது. புதரிலும் முள்ளிலும் இலையிலும் கிளையிலும் பூவிலும் அவர்கள் கிருஷ்ணனைப் பார்த்தார்கள். அவர்களுடையது ‘ததாத்ம்யபாவம்’, பூரண சரணாகதி, அல்லவா? அது ‘அத்வைதபாவம்’ அல்லவா? அவர்களால் அரைக்கணமும் கிருஷ்ணனின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. அவர்களுடைய பக்தியின் நிலை அத்தகையது.

தென்னிந்தியாவின் ரிஷி, பாடகர், சாஹித்ய கர்த்தாவான தியாகராஜரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவர் “நிதி சால சுகமா? ராமுனி சன்னிதி சேவ சுகமா?” (செல்வம் உனக்கு மகிழ்ச்சி தருகிறதா, இல்லை கடவுளின் தரிசனம் தருகிறதா) என்று கேட்டார். ராமதாசர், சூரதாசர், கபீர், துளசிதாசர், ஜயதேவர், துக்காராம், மீரா போன்றவர்கள் பக்தியே உருவானவர்கள். இன்றளவும் அவர்களை நினைக்கிறோம். அவர்களைப்பற்றிப் படிக்கும்போது நீங்கள் கடவுளின் அருளைப் பெறுவதோடு, அவரது அருளுக்கு வாரிசாகவும் ஆகிறீர்கள்.

மணமானவுடன் உங்கள் சொத்துக்கு உங்கள் மனைவி வாரிசாகிவிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். கல்யாண சமயத்தில் கட்டப்படும் மங்கள் சூத்திரத்தின் புனித முடிச்சினால் இவ்வாறு ஆகிறது. அதுபோலவே, பக்தி என்பது பக்திசூத்திரம்; பக்தி முடிச்சின் காரணமாக பக்தன் கடவுளின் அருளைப் பெறும் தகுதிகொண்ட வாரிசாகிறான். எல்லாவற்றுக்குமே பக்திதான் மிகமுக்கியம். பெரும்பாலானவர்களுக்கு அதுவே தெய்வீகத்தை நெருங்குவதற்கான புனிதப் பாதை.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0