பிறரது பக்தியை மதிப்பிடாதே
இவர்கள் பக்தர்கள், அவர்கள் நாத்திகர்கள் என்று முத்திரை குத்தும் பழக்கம் எல்லா இடத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. ஒருவனுடைய அடிமனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படித் தெரிய முடியும்.
ஒரு சமயம் ராணி ஒருத்தி மிகப்பெரிய ராம பக்தையாக இருந்தாள்; தனது கணவன் பக்தியே இல்லாமல், ஒருமுறை கூட ‘ராமா’ என்று உச்சரிக்காதிருப்பது குறித்து அவள் மிகவும் கவலைப்பட்டாள். அவருக்கு பக்தி இருப்பதாக அல்லது ராமநாமத்தை மதிப்பதாகச் செய்தி கிட்டியவுடன் எல்லா ஆலயங்களிலும் பூஜை செய்வதாகவும் விரதமிருந்தாள். அதன்பின் அரசன் தன்னை மறந்து தூங்கும் போது ராமநாமத்தை உருக்கத்துடனும் பயபக்தியுடனும் மூன்ற முறை உச்சரித்ததைக் கேட்டாள்;
கணவனிடம் ராமபக்தி இருப்பது அறிந்து மகிழ்ச்சியுற்றாள். ராஜ்யம் முழுவதும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து மகிழ்ச்சியுடன் விழாக் கொண்டாடும்படி ஆணையிட்டாள். ராஜாவிற்கு விழாக் கொண்டாடுவதன் காரணம் தெரியாது; அது குறித்து மற்றவர்களிடம் கேட்ட போது அது ராணியின் உத்தரவு என்றும், அதைத் தாங்கள் நிறைவேற்றுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதைப் போலவே மனைவியின் ஆன்மீக ஈடுபாடு கணவனுக்குத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தொலை தூரத்திலிருந்து ஆலயம் ஒன்றுக்கு அடர்ந்த வனத்துக்கிடையே பயணம் செய்த தம்பதிகளின் கதையை இப்போது பார்ப்போம். இலைகளுக்கிடையே சூரிய ஒளிபட்டு விலைமதிப்பற்ற கல் ஒன்று பிரகாசமாக மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் கணவன்.
அவசரமாகத் தனது பாதத்தின் மூலம் அந்தக் கல்லின் மீது சிறிது மண்ணைப் போட்டு மூடினான்; தன் மனைவி கல்லினால் கவரப்பட்டு அதை எடுத்து விடுவாள்; அதன் (பகட்டுக்கு) பளபளப்புக்கு அடிமையாகி விடுவாள் என்பது அவன் எண்ணம். கணவனின் செயலை மனைவி கவனித்து விட்டாள்; மண்ணுக்கும் மணிக்கும் இடையே உள்ள வேறுபாடு இன்னும் இந்த மனிதரின் மனதில் இருக்கலாமா? என்று அவரைக் கடிந்துக் கூறினாள்; அவளைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.
முதல் கதைப்படி தனது ராமபக்தி மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பது அரசனின் விருப்பம்; எனவே தூக்கத்தில் தன்னையறியாமல் அந்தப் புனிதமந்திரம் வாய்விட்டு உச்சரிக்கப்பட்டது குறித்து அவன் மிகவும் கவலைப்பட்டான். இதைப் போன்று தங்கள் குருவைப் பற்றி அல்லது தமது இஷ்டதேவதையின் நாம ரூபத்தைப் பற்றி வெளியே காட்டிக்கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் வெளியே சொல்லலாம் அல்லது சொல்லாதிருக்கலாம். ஆனால் மந்திரங்களை நீங்கள் உங்கள் மனதில் பதித்துக்கொள்ளவேண்டும். ராமநாமம் அல்லது எந்த நாமமாக இருப்பினும் மூச்சுவிடுவதைப் போன்று அது இடைவிடாமல் உச்சரிக்கப்பட வேண்டும். இதற்கு சாதனை செய்வது முக்கியமானது. காலை முதல் இரவு முடிய ஏன் நள்ளிரவு வரை நூற்றுக் கணக்கான வேலைகள் தனக்கு இருப்பதால் இறைநாமத்தை உச்சரிக்க ஒருபோதும் நேரம் கிட்டுவதில்லை என்று ஒருவர் சிறந்த சிந்தனை வாதியான ஜான்சனிடம் கூறினார். அதற்கு ஜான்சன்:- “மூன்று மடங்கு நீரும், மற்ற இடமெல்லாம் ஏராளமான மலைகளும், பாலைவனங்களும், வனங்களும் பனிப்பகுதிகளும், ஆற்றுப் படுகைகளும், சரளைகளும், பயனற்ற பிற பகுதிகளும் இந்த உலகைச் சூழ்ந்திருக்கும் போது லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வாழ்வதற்கு இருப்பிடத்தை எப்படி ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைப் போலவே இறைவழி பாட்டுக்கும் எப்படியும் சிறிது நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும்” என்று பதில் அளித்தார்.
பட விளக்கம் :
செல்வன் .சாய் ஈஸ்வரன் ,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவன்