உனது எண்ணங்கள் நீ சமைக்கும் உணவைப் பாதிக்கின்றன
மனதையும், அறிவையும் தூய்மைப்படுத்த, சத்தியம் சரியானபடி பிரதிபலிக்க, உணவில் நாம் மிகவும் (முதல் எச்சரிக்கை) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதர்களுக்கு உள்ளபடியே இது மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். மைசூர் மாநிலத்தில் உள்ள மலூரில், பக்தி சிரத்தை மிக்க பிராமண அறிஞர் ஒருவர் இருந்தார். அவரது மனைவியும் அவருக்குச் சமமான பக்தி உடையவர். எப்போதும் தியானம், ஜபம், பூஜை என்று இருந்த அவர்கள், சீலத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஒரு நாள் நித்யானந்தா எனும் சந்யாசி ஒருவர் அவரது இல்லத்துக்குப் பிச்சைக் கேட்டு வந்தார். அது குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். சரியான விருந்தோம்பல் முறைப்படி அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, அந்த சந்யாசியைத் தன்னுடன் விருந்துண்ண மறுநாள் வரும்படி அவர் அழைத்தார்.
வாசலில் பச்சைத் தோரணங்களைத் தொங்கவிட்டு வரவேற்பு ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் மனைவி விலக்காகி விட்டபடியால், அந்த சிறப்பு விருந்தினருக்கும் , மற்றவர்களுக்கும் அவள் உணவு தயாரிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. அடுத்த வீட்டு அம்மையார் அந்த உணவைச் சமைக்க வந்தார். அவரை சமையலறைக்குள் அனுப்பினர்.
எல்லாம் நல்லபடியாக நடந்தது. அனைவரும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அந்த சந்யாசிக்கு அவரது உணவுத் தட்டருகே பரிமாறுபவர் வைத்த வெள்ளிக் கோப்பையை எப்படியாவதுத் திருடிவிட வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை எழுந்து விட்டது. அதை எடுக்கக் கூடாதென்று அவர் எவ்வளவு தூரம் நினைத்தும், அந்தத் தீய எண்ணமானது அந்தக் கோப்பையை அவரது ஆடைக்குள் மறைத்துக் கொண்டு தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்து செல்லும்படிச் செய்து விட்டது. அவரது மனசாட்சியின் உறுத்தலினால், அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. மந்திரங்களை ஓதியவுடன் எழுந்தருளும் குருவிற்கும், ரிஷிகளுக்கும் அவமானம் ஏற்படுத்தி விட்டதை அவர் உணர்ந்தார். பிராமணர் வீட்டுக்கு ஓடி, அவரது காலில் விழுந்து, கன்னங்களில் கண்ணீர் வழிய மன்னிப்புக் கேட்டு அந்தக் கோப்பையை ஒப்படைத்தப் பின்தான் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.
ஒரு சந்யாசி எப்படி இவ்விதம் ஓர் இழிநிலைக்குத் தாழ்ந்து போனார் என்று ஒவ்வொருவரும் வியந்தனர். அப்போது யாரோ ஒருவர், சமைத்தவரின் உணர்வு, உணவு உண்டவர்க்கு ஒரு வேளை மாறியிருக்கக் கூடும் என்ற தனது கருத்தைக் கூறினார். அதன்பின் அடுத்த வீட்டு அம்மாவின் கதையை விசாரித்தபோது அவள் ஒரு பெரிய திருடி என்பது தெரிய வந்தது. அந்தத் திருட்டு இயல்பு அவள் சமைத்த உணவிலும் சூக்ஷுமமாகத் தொற்றிக் கொண்டது. அதனால்தான் சாதகர்கள், ஆன்மீக சாதனையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழும்படி போதிக்கப்படுகிறார்கள்.
பட விளக்கம் :
செல்வி.சத்யபிரியா தர்ஷினி,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)