மஹான்கள் தமது ஞான ஒளியை எப்போதும் பரப்புவர்

மன்னன் ஒருவன் தனது வலிமைமிக்கப் படைவீரர்களுடன், பனிமலைகளைக் கடந்து அடுத்த அரசனின் எல்லைக்குள் நுழைந்தான். பனியால் மூடப்பட்டக் குறுகலான அந்தப் பாதையில் பயித்தியம் அல்லது சித்தர் போன்ற தோற்றத்துடன் ஒருவர், சிகரங்களின் இடுக்கு வழியாக வீசும் பனிக்காற்றிலிருந்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தனது தலையை முழங்கால்களுக்கு இடையே மூழ்கவைத்து, ஒரு பாறைமீது அமர்ந்திருந்தார். அவருடைய உடலில் எவ்வித ஆடையும் இல்லை. அரசன் அவர்பால் அனுதாபப்பட்டான்; எனவே, தனது சால்வையையும், மேலங்கியையும் எடுத்து அந்த யோகிக்குக் கொடுத்தான்.

ஆனால் அந்த யோகியோ, “குளிர், வெப்பம் ஆகியவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போதுமானத் துணிகளை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறான்; எனக்குத் தேவையான மற்றவற்றையும் அவனே கொடுக்கிறான். எனவே, தயவு செய்து இதை யாராவது ஒரு ஏழைக்குக் கொடுத்துவிடு”, என்று கூறி, ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இதைக்கேட்ட மன்னன் வியந்தான். அந்தத் துணிமணிகள் எங்கே? என்று கேட்டான் அரசன். அதற்கு அந்த யோகி, “இறைவன் எனக்காகவே அதை நெசவு செய்திருக்கிறார். பிறப்பு முதல் இறப்பு வரை அதை நான் அணிந்து கொள்வேன். (தன் உடலைச் சுட்டிக்காட்டி) இதோ இந்தத் தோல்தான் அந்தத்துணி; எனவே இந்த அங்கியையும், சால்வையையும் யாராவதொரு வசதியற்ற யாசகருக்கோ, ஏழைக்கோக் கொடுத்துவிடு” என்று பதிலளித்தார். இவரைவிட ஏழை யார் இருக்கப்போகிறார்கள் என நினைத்த அரசன் புன்னகை புரிந்து, “அந்த ஏழையை நான் எங்கே போய்த் தேடுவேன்”? என்றார். அதற்கு அந்த யோகி, “நீ இப்பொழுது எங்கே, எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார்.

“பகைவனை வென்று அவனுடைய ராஜ்யத்தை என்னுடன் சேர்த்துக்கொள்வதற்காகச் சென்றுக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தான். இப்போது யோகி சிரித்தார். “உனது அரசு உனக்குப் போதவில்லை என நினைத்து, சில சதுரமைல் பரப்பில் அடங்கியுள்ள வேற்று மன்னனின் மண்ணைக் கவருவதற்காக உன்னையும், மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களையும், தியாகம் செய்ய நீ தயாராக இருப்பாயாகில், கண்டிப்பாக நீ என்னைவிட ஏழையே. எனவே இந்த ஆடைகளை நீயே வைத்துக்கொள். என்னைவிட அது உனக்குத்தான் அதிகம் தேவை” என்றார்.

இதனால் மிகவும் அவமானப் பட்டான் அரசன். புகழும் பொருட்செல்வமும் எத்தனைப் பயனற்றவை என்பதை உணர்ந்த மன்னன், ஆன்மீகத்தின் வலிமையைச் சுட்டிக்காட்டி, தனது ஞானக் கண்ணைத் திறந்துவிட்ட அந்த யோகிக்கு நன்றி கூறிவிட்டுத் தனது தலைநகருக்குத் திரும்பிவிட்டான். உள்ளதை வைத்து உள்ளம் நிறைவுபெறுவதே விலை மதிப்பு மிக்க உன்னதமானப் புதையல் என்பதை அவன் இப்போது உணர்ந்து கொண்டான். தமது ஒவ்வொரு சொல்லாலும், செயலாலும் மஹான்கள் ஞானஒளியைப் பரப்புகிறார்கள்.

பட விளக்கம் :
செல்வி.ஜோஸ்ரீ ஸ்மிர்த்தி ,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0