தெய்வபக்திக்கு முன்பு தாய் பக்தி
பெற்றோர்கள், அவர்களிலும் குறிப்பாகத் தாயைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்பது முக்கியமான நீதி நெறி. ஒரு முறை வீசிய கடும்புயலால் வீடுகள் தரைமட்டமாகி உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி மக்கள் தவித்தனர். அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தாயும் அவளுடைய இரு சேய்களுமாவர். மூத்தவன் ஒழுக்க சீலனாகத் திகழ்ந்தான். குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அவன் ஏற்றக் கொண்டான். அவன் தன் தாயிடம் அன்பு செலுத்தினான். மற்ற எதையும் விட தாயின் அன்பும், ஆசியும் கிட்டுவதே சிறந்தது என செயற்பட முனைந்தான். பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட தாய், பிச்சை எடுத்துத் தன் சேய்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.
சிறிது காலத்திற்குள் ஒரு சில அடிகள் கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமடைந்து விட்டாள்.
அதனால் மூத்த மகன் மட்டும் தனியாகக் குடும்ப உணவுக்காகப் பிச்சை எடுக்கப் போக வேண்டி இருந்தது. தாயின் தாள்களைப் பணிந்து, அவள் செய்த வேலையைத தான் செய்து, அவர்கள் அனைவருக்கும் உணவுக் கொணர்வதாகக் கூறினான். சக்திக்கு மீறி வேலை செய்து தாய் தன் உடம்பை கெடுத்து விடக்கூடாது என்று அவன் விரும்பினான்.
கையளவு சோறு மூன்று ஜீவன்களுக்கு எப்படி போதும்? அதனால் மூத்தவனின் உடம்பும் இளைத்து விட்டது. பேசுவதற்கோ சக்தி இல்லை; நடப்பதற்கு தெம்பில்லை; இந்நிலையில் ஒரு ஜமீன்தார் வீட்டை அடைந்து சோறு ஒரு கவளம் அளிக்கும் படி வேண்டினான். இல்லத்தரசி அவனை உணவு அறைக்கு அழைத்து சென்று ஒரு சிறு தட்டில் சிறிது உணவு பரிமாறினாள். தள்ளாடி நடந்த அவன் தடுமாறி தடாலென விழுந்து விட்டான். ஜமீந்தார் அந்த அறைக்குள் ஓடி வந்தார்.
இறக்கும் முன்பு அந்தச் சிறுவனின் இதழ்கள் எதையோ முணுமுணுத்தன. அந்த இறுதி முணுமுணுப்பை கேட்கும் விருப்புடன் ஜமீன்தார் தன் செவியை அவன் இதழ் அருகே வைத்தார் “வேண்டாம் எனக்கு வேண்டாம்; இந்த உணவை அம்மாவிற்கு முதலில் கொடுங்கள் அதன் பின்புதான் எனக்கு கொடுக்க வேண்டும்” என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தான். எந்தக் கடனையும் திருப்பித் தந்துவிட முடியும்; ஆனால் தாய்க்குரிய கடனை மட்டும் ஒருபோதும் திருப்பித் தரவே முடியாது. தங்களை இறைவனுடைய அடியார்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் தாயை மதிப்பவர்கள் எனும் சிறப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட விளக்கம் :
செல்வன் .பாலவெற்றிவேல் ,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவன்