குரு அருள் நல்கும் நிரந்தர மகிமை
பரம ஆச்சாரியரான சங்கரருக்கு துரோதகா, ஹஸ்தமாலகா, சுரேஸ்வரா, பத்மபாதா ஆகிய நான்கு முக்கிய சீடர்கள் இருந்தனர்.
அவர்களுள் பத்மபாதர் குருவின் சேவையில் மூழ்கியதால், பாடங்களில் அவரால் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் அவர் படிப்பில் பின் தங்கியிருப்பதை மற்ற மாணவர்கள் கேலி செய்வது வழக்கம்; இருப்பினும் அவரது குரு பக்தி தளரவில்லை. ஒரு நாள் அவர் குருவின் உடைகளைத் துவைத்து, அவற்றை ஆற்றின் மத்தியில் உள்ள பாறை ஒன்றின் மீது உலர்த்தினார். அவர் துணிகளை மடித்துக் கொண்டிருந்தபோது வெள்ளம் வேகமாகப் பொங்கிப் பாய்ந்தது. பாறையின் உச்சியில் கால் வைப்பதற்குச் சிறிது இடம்தான் இருந்தது.துவைத்த துணிகள் குருவிற்குச் சீக்கிரம் தேவைப்படும். ஆனால் நேரமோ கடந்து கொண்டிருந்தது. எனவே பத்மபாதர் பொங்கி எழும் வெள்ளத்தின் மீது நடந்து விடுவது என முடிவு செய்தார். குருவின் ஆசீர்வாதம் தன்னைக் காப்பாற்றும் என்று அவருக்குத் தெரியும். அப்படியே அது காப்பாற்றவும் செய்தது.
அவர் பாதம் வைத்த இடமெல்லாம் பத்மம் மலர்ந்து, அவரது பாதத்தைத் தாங்கியது. அதனால்தான் அவருக்கு பத்மபாதர் என்னும் பெயர் கிட்டியது. குருவின் அருள் அவருக்கு அனைத்து விதமான அறிவையும் அருளியதோடு, தொன்றுதொட்டு வரும் ஞானமும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்படிச் செய்தது.
பட விளக்கம் :
செல்வி.சாயினி,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)