திருநீலகண்ட நாயனார்

தில்லை மாநகரில் சிவனடியார்களிடம் எல்லையில்லா அன்புடையவராக வாழ்ந்தவர் திருநீலகண்டர். சிவனடியார் உணவு ஏற்று உண்ணும் திருவோடுகளைச் செய்து வழங்கும் சிறந்த தொண்டை அவர் செய்து வந்தார். சிவபெருமான், தேவர்கள் அமுதை உண்ணுவதற்காகத் தான் நஞ்சுண்ட பெருங்கருணையை நினைந்து அப்பெருமானுடைய திருக்கழுத்தைப் போற்றி திருநீலகண்டத்தின் மீது பெரும் பக்தியுடையவராய் இருந்தார்.
இத்தகைய பக்தர் ஒரு நாள், விலைமாதரிடம் சென்றதை அறிந்த அவரது மனைவி திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டு ஒருவரையொருவர் தொடாமல் வாழ்ந்தனர். அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சிவபெருமான் சிவனடியாராக வந்து திருவோடு ஒன்றைக் கொடுத்து, பின்னர் வந்து பெற்றுக் கொள்வதாகச் சொல்லிச் சென்றார். இறைவன் அருளால் அந்தத் திருவோடு மறைந்து விட மீண்டும் வந்த சிவனடியாரிடம் திருவோடு மறைந்து விட்டதாகச் சொல்ல, தாங்கள் சொல்வது உண்மையெனில் தம்பதிகள் கரம்பற்றி குளத்தில் முழ்கி எழவேண்டும் என்று அவர் கூறினார்.
தம்பதிகள் ஒரு மூங்கில் துண்டின் இருமுனைகளைப் பிடித்துக் கொண்டு மூழ்கக், கைகளைப் பிடித்துக் கொண்டு தான் மூழ்க வேண்டும் என்று சிவனடியார் கூற அவர்களும் அடியாரிடம் மறைப்பதற்கு முடியாது என்ற நிலையில் தம்முடைய விரதத்தை யாவரும் கேட்கச் சொல்லுவதையன்றி வேறு வழியில்லாமல், அந்த வரலாற்றை ஆதிமுதல் சொல்லிவிட்டு கைப்பற்றி மூழ்கி எழும் போது முதுமை மாறி இளமைக் கோலத்துடன் எழுந்தனர். மறையவனாகி வந்த சிவபெருமான் தன் கோலத்தை மாற்றி ரிஷப வாகனத்தில் தேவியுடன் காட்சி தந்து அருளினார்.
Help Desk Number: