மெய்ப்பொருள் நாயனார்
திருக்கோவிலூரில் அவதரித்து அவ்வூரை ஆட்சி செய்த மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவபக்தர். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள்’ எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட முத்தநாதன் எனும் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலமுறை மெய்ப்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்ப்பொருளாரை வெல்ல முடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான்.
அவன் மேனியெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, புத்தகம் வைக்கும் உறை ஒன்றில் கத்தியைச் செருகி மறைத்தவாறு கோவிலூர் அரண்மனைக்குச் சென்றான். மெய்ப்பொருளாரும் அடியாரை வரவேற்று உபசரித்தார். முத்தநாதன் மெய்பொருளாரிடம், தான் சிவபெருமான் ஓதிய ஆகம நூலை வாசிக்க மெய்ப்பொருளார் கேட்க வேண்டுமென்று கூற, மெய்ப்பொருளாரும் பணிவுடன், படியுங்கள் என்று கூறி வணங்கினார். அப்படி அவர் வணங்கும்போது அந்த வஞ்சகன் புத்தக உறையில் இருந்து கத்தியை உருவிக் குத்தி விட்டான்.
ஓசை கேட்டு உள்ளே வந்த ‘தத்தன்’ என்ற காவலாளி முத்தநாதனைக் கொல்ல எத்தனிக்க, அவனைத் தடுத்து, ‘அடியார் வேடத்தில் வந்த அவரைக் கொல்வது பாவம்’ என்று கூறி ஊர் எல்லை வரை கொண்டுவிடச் சொன்னார் மெய்ப்பொருளார். ஊர் எல்லை வரை அனுப்பிய செய்தி கேட்ட பின்னரே மெய்ப்பொருளார் உயிர் போயிற்று.
சிவனடியார்களிடம் வைத்த பக்தியைக் கண்டு வியந்து அவருக்கு சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.