மோஹஜித்தின் வைராக்கியம்

பக்தி மற்றும் அதன்மூலம் முடிவில் அடையும் சரணாகதி மனப்பான்மை எனும் கனியானது எப்படிப்பட்ட நெருக்கடியையும் சந்திக்கும் மிகப் பெரிய மன வலிமையைத் தரும்; இந்த மனவலிமைதான் வைராக்யம் எனப்படும். இந்த உச்சக்கட்ட வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மோஹஜித்தின் கதைதான். மோஹஜித் வனத்தை அடைந்து முனிவர் ஒருவரைச் சந்தித்துத் தனக்கு ஆன்மீகத்தில் வழிகாட்டும்படி வேண்டினான்.

“உனது பெயருக்கேற்ப நீ மோஹத்தை வென்று விட்டாயா?” என்று முனிவர் கேட்டார். “நான் மட்டுமல்ல எனது நாட்டிலுள்ள அனைவரும் அதைப் பெற்றிருக்கிறோம்” என்றான் இளவரசன். எனவே அவன் கூறியதிலுள்ள உண்மையைச் சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். அவர் இளவரசனின் ஆடைகளை ரத்தத்தில் தோய்த்து, அதை அரண்மணை நுழைவாயிலுக்கு விரைவாக எடுத்துச்சென்று, சிலமுரடர்கள் இளவரசனைக் கொன்று விட்டதாக் கோரமான கதை ஒன்றைப் பரப்பிவிட்டார். அந்தக் கதையை அரண்மணைக்கு உள்ளே பரப்ப அந்த வழியாக வந்த பெண்மணி மறுத்துவிட்டாள்;

அதற்கு அவள் கூறிய காரணம், “பிறந்தவன் இறப்பது உறுதி. எனவே எனது அன்றாட அலுவல்களைக்கெடுத்து ராஜாவிடம் இந்தச் செய்தியை அவசரப்பட்டுச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” ஒரு வழியாக அந்தத் தகவலைத் தெரிவிக்க எப்படியோ ஒருவன் கிடைத்தான். அவன் மூலம் செய்திகேட்ட அரசன்:- “தான் ஒய்வெடுத்த மரக்கிளையிலிருந்து பறவை பறந்து விட்டது” என்றான்; ராணியும் அச்செய்தியால் சலனப்படவில்லை:- “இந்த பூமி பயணிகள் தங்குவதற்குரிய ஓர் இடம். இங்கே இருட்டும்போது மனிதர்கள் தங்குகிறார்கள், விடிந்தவுடன் அவரவர்க்குரிய வழியில் ஒருவர்பின் ஒருவராகச் சென்றுவிடுவார்கள். சொந்தம் பந்தம் என்ற சொற்களெல்லாம் குறுகிய பயணக்காலத்தில் தாம் ஒருவர்மீது ஒருவர் கொண்ட பற்றினால், தொடர்பினால் ஏற்பட்டவை” என்று முனிவரிடம் கூறினாள்.

இறந்து போன இளவரசனின் மனைவியும் கலங்கவில்லை. “ஒடுகின்ற வெள்ளத்தில் மிதந்து செல்லும் இரண்டு மரத்துண்டுகளைப் போன்றவர்களே கணவனும் மனைவியும்; சற்று நேரத்துக்கு அவை இரண்டும் ஒன்றாக மிதக்கின்றன; பின்னாலேயே, அலை ஒன்று வந்து விட்டால் அவைகள் பிரிந்து விடுகின்றன; அதன் பின் அவை தமது வேகத்தையும் நேரத்தையும் அனுசரித்து முன்பின்னாக கடலில் சங்கமமாகின்றன. இரண்டாக இருந்தவை பிரிந்து விட்டனவே என்று துக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை; இயற்கையின் இயல்புப்படி அப்படித்தான் இருக்க வேண்டும்” என்றாள் இளவரசி.

ஆள்வோர்; ஆளப்பட்டோர் ஆகியவர்களிடையே காணப்பட்ட உறுதியான, மனமொன்றிய வைராக்யம் குறித்து முனிவர் மிகவும் மனம் மகிழ்ந்தார். அவர் வனத்துக்குத் திரும்பி வந்து “இளவரசே! தாங்கள் வனத்துக்கு வந்த பிறகு அன்னியர்கள் உங்கள் நாட்டின் மீது படையெடுத்து, அரச குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, ராஜ்யத்தைக் கைப்பற்றி மக்களையும் சிறையில் அடைத்து விட்டனர்”, என்று கூறினார். அந்தச் செய்தியை அமைதியாகக் கேட்ட இளவரசன், “அனைத்துமே நீர்க்குமிழ் போன்று நிலையற்றவை; அழியக் கூடியவை; அதைப் போன்றதுதான் அரசாட்சியும். தயவுசெய்து தாங்கள் எனக்கு எல்லையில்லாத அழியாத பொருளை அடைய வழிகாட்டுங்கள்” என்று முனிவரை வேண்டினான்.

பட விளக்கம் :
செல்வன். விஸ்வேஸ்வரா ,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவன் (இரண்டாம் பிரிவு)

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0