அனில் குமார்: சுவாமி! வெவ்வேறு மனோபாவம், கருத்துகள், எண்ணங்கள், நோக்குகள், ஆசைகள் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களிடையே சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தன் வழியில்தான் எல்லாம் நடக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார். அப்போது என்ன செய்வது?
பகவான்: ஒவ்வொரு தலையிலும் அறிவு வேறு (சம்ஸ்கிருதப் பழமொழி). இரண்டுபேர் பார்க்க ஒன்றுபோல இருப்பதில்லை; இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எண்ணங்கள் மாறுபடுவது இயல்புதான். ஒவ்வொருவரும் தானே சரி என்று நினைக்கிறார். ஆனால், ஒற்றுமை, சமத்துவம், மனதின் சமநிலை ஆகியவை இருக்கும்படி நீ பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய உதாரணம்: ஒருமுறை கையின் ஒவ்வொரு விரலும் நானே மற்றவற்றைவிட உயர்ந்தது எனக் கூறியது. முதலில் சுண்டுவிரல், “பார்! நீ வணங்கும்போது நானே முதலில் இருக்கிறேன். அதனால் நான்தான் முக்கியமானவன்” என்றது. அடுத்து மோதிரவிரல், “என்ன! என் மதிப்பு உனக்குத் தெரியாதா? விலையுயர்ந்த வைர மோதிரங்களை என்னைச் சுற்றித்தான் அணிகிறார்கள்!” என்றது. அடுத்து நடுவிரல், “இதென்ன கேலிக்கூத்து! என்ன பேசுகிறாய்? நான்கூட விலைமிக்க மோதிரத்தை அணீயத் தயார்தான். சிலர் அப்படியும் அணிவார்கள். இன்னும் சொன்னால், பாருங்கள், நான் உங்கள் எல்லாரையும்விட உயரமானவன் இல்லையா? உங்களையெல்லாம் விட நான் உயர்ந்தவன் என்பதற்கு இது ஒன்று போதாதா?” என்றது. “யாருக்காவது வழிகாட்ட வேண்டுமென்றால் நான்தான் முதலில் வருவேன். எல்லோரும் பிறருக்கு வழிகாட்ட என்னையே பயன்படுத்துகிறார்கள். பிறரை எச்சரிக்கவும் நானே முதலில் வருவேன். நீங்கள் பார்த்ததில்லையா?” என்றது சுட்டுவிரல். இறுதியாகக் கட்டைவிரல், “நடப்பதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் நால்வரும் ஒன்று சேர்ந்தாலும், நான் சேராவிட்டால் நீங்கள் செயல்பட முடியாது. சாப்பிடும்போது நான் இல்லாமல் உங்களால் சமாளிக்க முடியுமா? அவ்வளவு ஏன், ஓர் அம்பை எய்ய வேண்டுமென்றால் கூட, நான்தான் நாணைப் பின்னுக்கு பலமாக இழுக்கவேண்டும். இல்லையென்றால் அம்பு வெகுதூரம் போகாது. நமக்குள்ளே மிக உயர்ந்தவன் நான்தான்” என்றது புன்னகையோடு.
இப்படித்தான் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவர் என்பதாகச் சொல்லிக்கொள்வதும். எவரிடமிருந்தும் நல்லதைப் பெற்றுக்கொள்ள நீ எப்போதும் தயாராக இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் நீங்கள் ஒத்துழைத்து, இணக்கமாகச் செயல்பட வேண்டும். யாரும் எவரையும்விட உயர்வென்று எண்ணக்கூடாது. அப்படியின்றி, ஒருவர்மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதால்தான் குழுக்கள், பிரிவுகள், போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள் ஏற்படுகின்றன. அதன் விளைவாக, அங்கிருக்கும் அன்பு முழுவதுமாகக் காணாமல் போகிறது. பாருங்கள், ஐந்து விரல்களும் சேர்ந்தாலொழிய உங்களால் எதுவும் செய்யமுடியாது. அங்கத்தினரிடையே ஒத்துழைப்பு, ஒட்டுறவு மற்றும் ஒற்றுமை இல்லாவிட்டால் ஒரு சமுதாயம் முன்னேற முடியாது.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு