ஆயிரம் ஊசலாடும் மனங்களை விட ஒரு உறுதியான மனம் சிறந்தது
ராஜ்யத்தை ஆளுவது, ராஜ்ஜியத்துக்கு உரிய காரியங்களைச் செய்வது ஆகிய உலக காரியங்களுக்கு இடையேயும் தனது கவனம் முழுவதையும் இறைவன்பால் செலுத்த ஜனக மகாராஜாவுக்கு முடிந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிதிலாபுரிக்கு மிக அருகே உள்ள வனம் ஒன்றில் தனது சீடர்களுக்கு பல விஷயங்களைப் போதித்துக் கொண்டிருந்தார் மகரிஷி சுகர்.
இதைக் கேள்விப்பட்டு ஜனகரும் அவரது சீடராக விரும்பினார். வனத்துக்கு சென்ற ஜனகர் தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, “தங்களது சீடர்களுள் ஒருவனாக அடியேனையும் ஏற்றுக் கொண்டு தங்கள் வகுப்பிற்கு வர அனுமதி தர வேண்டும்” என்று வேண்டினார். அன்று முதல் ஜனகர் ஒரு சீடனாகவே நடந்து கொண்டார். ஒரு நாள் ஜனகர் தாமதமாக வந்தார்; ஜனகர் வரும்வரை சுகர் பாடத்தைத் தொடங்கவில்லை. பாடத்தைத் தாமதமாகத் தொடங்கியதற்குரிய காரணத்தை சுகர் மற்ற சீடர்களிடம் சொன்னார். அந்தக் காரணத்தை அவர் சொன்னவுடன் மற்ற சீடர்கள்: “மன்னர்கள் மற்றும் அதிகாரம் படைத்தோர் என்ற பாரபட்சம் இவர் காட்ட மாட்டார் என்று தானே இந்த மகரிஷியிடம் சேர்ந்தோம்” என்று தங்களுக்குள் முணுமுணுத்தனர். அன்று முதல் குருவிடம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பலவீனம் அடைந்தது. அத்துடன் ஜனகர் மீது பொறாமையும் கொண்டனர். சீடர்கள் இடையே பொறாமையும் பகையும் வளர்வதை கண்ட சுகர், அவர்களுக்குப் புத்தி புகட்ட விரும்பினார். தக்க தருணம் ஒன்றில் மிதிலாபுரி நகர் முழுவதும் தீப்பற்றி எரிவது போன்ற ஒரு பிரமையை அவர்களிடையே உண்டாக்கினார்.
தத்தம் இல்லங்களுக்கு எந்த நேரமும் என்ன ஆகுமோ என்ற எண்ணத்துடன் அனைவரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய நகரத்தை நோக்கி ஓடினர்.
ஆனால் மன்னர் ஜனகர் மட்டும் அசையவில்லை; அதிர்ச்சி அடையவில்லை. நெருப்பு அரண்மனையிலும் படர்ந்து விட்டதாகக் கருதுகிறேன்; எனவே அங்கு இருப்பவர்களைக் காப்பாற்றும் பொருட்டு தாங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று சுகர் ஜனகரிடம் கூறினார். அதைக்கேட்டு ஜனகர் சிரித்தார்; எது இறைவன் எண்ணமோ அது நடந்தே தீரும் என்பது அவர் முடிவு.
நகருக்குள் ஓடியவர்கள் அங்கே நெருப்பு எதையும் காணாததால் அதை யாரோ கிளப்பி விட்ட வதந்தி எனக் கருதினர். திரும்பிய சீடர்கள் நடந்ததை சுகரிடம் கூறினர். ஜனகரின் நிலைகுலையா மனதை எண்ணி அவர்கள் வியந்தனர். பொறாமைப்பட்ட சீடர்களைப் பார்த்து சுகர்: “ஆயிரம் ஊசலாடும் மனங்களை விட ஒரு உறுதியான மனம் சிறந்தது” என்று கூறினார்.