கர்மம் ஈந்த புனிதக்கனிகள்
ஒரு சனிக்கிழமை, வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த தந்தை மகனை அழைத்து ஒரு ரூபாயைக் கொடுத்துச்சில வாழைப்பழங்களை வாங்கி வரும்படி பணித்தார்.
மகன் நல்ல பையன்; வாழைக்கனிகளை வாங்கிவிட்டான்.
ஆனால், வரும் வழியில் ஒரு தாயும் சேயும் மிக்கப்பசியுடன் சாலையில் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தான். பழங்களை நோக்கிப் பசியோடு இருந்த பையன் ஓடினான். சேய் ஓடுவதைப் பார்த்த தாய் அவன் பின்னாலேயே ஓடி வந்து அவனைப் பிடித்துவிட்டாள். ஆனால் பசி மயக்கத்தில் இருவருமே விழுந்து விட்டனர். பசியால் வாடிய அவர்களைப் பார்த்த அந்த இளைஞன், அந்தப் பழங்களை இல்லத்துக்கு எடுத்துச் செல்வதை விடப் பசித்தவர்களுக்குப்புசிக்கக் கொடுப்பதே மிகவும் சிறந்தது என்று எண்ணினான். கனிகளைத் தாய்க்கும் சேய்க்கும் கொடுத்துவிட்டுக் குடிப்பதற்கு நீரும் கொண்டு வந்து கொடுத்தான்.
பசி, தாகத்துயர் நீங்கப்பெற்ற அவர்கள் ஆனந்தக்கண்ணிர் சிந்தி தமது நன்றியைப் பலவழிகளில் தெரிவித்தனர்.
அந்த இளம் மாணவன் வீட்டை அடைந்தவுடன், “பழங்களை வாங்கி வந்துவிட்டாயா?” என்று தந்தை கேட்ட போது, ‘ஆம்’ என்று பதில் கூறினான். “அப்படியானால் அவைகள் எங்கே?” என்று கேட்டதற்கு, அந்த பழங்கள் புனிதமானவை என்றும், அவை கண்ணுக்குத் தெரியாது என்றும் கூறினான்.
அந்தக் கனிகளை பசியுடன் இருந்த இரண்டு உயிர்களுக்கு அளித்ததாகவும், தான் தனது இல்லத்துக்கு எடுத்து வந்த கனிகள் அந்தக்கர்மம் தந்த புனிதக் கனிகளே (பயன்) என்றும் விளக்கினான்.
அன்றைய வழிபாட்டுக்குரிய பயன் (விடை) கிட்டியது குறித்தும், தனக்குத்தகுதியான மகன் கிட்டியது குறித்தும் தந்தை பெருமிதம் அடைந்தார். அன்று முதல் தந்தை மகன் மீது அன்பு செலுத்தினார். இருவரும் மிக மிக நெருக்கமாகப்பழகினர்.