ஆத்மா ராமனை அல்லது கண்ணனை அறியுங்கள்
ஆயர்பாடிச் சிறுவர்களுடன் இருந்தபோது குழல் ஊதிக் கிராம மக்களை மகிழ்வித்த கண்ணனின் லீலைகளை நீங்கள் கொண்டாடக் கூடாது. உடலின் தொப்புள் பகுதியில் (மதுரா) ஆற்றலாகத் (தேவகி) தோன்றி, வாய்க்கு (கோகுலம்) வந்து அதன்பின் நாவில் (யசோதா) இனிக்கும், வர்ணிக்க முடியாத, ஆராய முடியாத கண்ணனின் தெய்வீக நாமத்தையே நாம் போற்ற வேண்டும். கண்ணனின் நாமம் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் போது யசோதாவிற்குக் கிட்டிய கண்ணனின் காட்சி, நமது ஆத்மாவுக்கும் கிட்டும்.
சிறுவனாக இருந்த கண்ணனின் காளிங்க நர்த்தனத்தின் மூலம் அந்தப் பாம்பின் விஷம் முழுவதும் அகன்றுவிட்டது. அதைப்போலவே நமது நாவிலும் கண்ணனின் நாமம் இடைவிடாது ஒலிக்குமானால், நச்சு நீங்கி அந்த நாவானது பிறர்க்குத் துன்பம் தராமல் இனிமை பெறும்.
தயிர் கடையும் போது பானையை உடைத்து விட்டுக் கண்ணன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான், இருப்பினும் அவன் பாதச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்று அவன் ஒளிந்திருந்த இடத்தை யசோதை கண்டு பிடித்து விடுகிறாள்.
இந்தக் கதை ஒரு தத்துவத்தைக் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘உடல் தான் நாம்’ எனும் நமது எண்ணத்தை உடைத் தெறிந்துப் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதற்குரிய அடையாளங்களையும், சிக்னல்களையும் (எச்சரிக்கைகளையும்) நம்மைச் சுற்றி இறைவன் அமைத்துள்ளார். இந்தச் சிக்னல்கள் எப்போதும் நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் இயற்கையின் வடிவில் அதாவது காலைக் கதிரவனின் அழகாக, வானவில்லின் பரவசமூட்டும் பொலிவாக, பறவைகளின் இன்னிசையாக, தாமரைப் பூத்தத் தடாகமாக, பனிச் சிகரங்களின் மோன நிலையாக இருந்து கொண்டே இருக்கின்றன. உண்மையில் கனிரசமாக, ரசத்தின் இனிமையாக, பரவசத்தின் ஆனந்தமாக இருப்பவன் இறைவன் அல்லவா? அந்த ரசமும், இனிமையும், பரவசமும் தோற்றத்துக்கு வரும்போது மேலே கூறப்பட்ட இயற்கைக் காட்சிகளாக மலர்கின்றன. உருவத்துடன் அல்லது அருவத்துடன் எப்படி இருந்தாலும் இறைவன் ஆனந்த சொரூபியே. ஆனந்த வடிவாகவும் ஆனந்தம் அளிப்பதாகவும் இருப்பது ராமநாமம் அல்லது கண்ணனின் நாமம், அதை இதயப்பூர்வமாக ஜபித்தால், அந்த நாமம் அளிக்கும் ஆனந்தம் உங்களை இறைவனுக்கருகே இட்டுச் செல்லும்; எனவே நீங்கள் அனைவரும் பூஜை, ஜெபம், தியானம் மூலமும் மற்ற செயல்கள் மூலமும் இறைவனுடன் வாழுங்கள். அது ஞானக் கதவுகளைத் திறந்து வீடுபேறு அளிக்கும். புத்திசாலிகளுக்குரிய லட்சணம், வீடுபேறு அடைவதுதான். அறியாமையில் மூழ்கிய மற்றவர்கள், சிறுவர்களுக்குரிய பொம்மைகளையும் விளையாட்டுப் பொருள்களையும் வைத்துக் கொண்டு அர்த்தமற்ற அற்பமான பொழுது போக்குகளில் தங்கள் காலத்தைச் செலவழித்துக் கொண்டு அலையட்டும்.