கர்ணன் தலைசிறந்த வள்ளல்
கர்ணனைக் குறித்து அருமையான கதை ஒன்றுள்ளது. குளிக்கும்முன் நவரத்னம் பதித்த ஒரு கோப்பையிலிருந்த எண்ணெயைத் தலையில் தடவினான் கர்ணன்; வலது கரத்தில் எண்ணெயை எடுத்துத் தலை முடியில் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த போது அங்கே கண்ணன் வந்தார். அவருக்கு மரியாதை செய்ய கர்ணன் எழுந்து நின்றான். அந்தக் கோப்பையைப் பரிசாகப் பெற்றுச்செல்லும் பொருட்டு அங்கு வந்ததாகக் கண்ணன் கூறினான்; “பிரபஞ்சத்தின் தலைவரான தாங்கள் இந்த அற்பப்பொருள் மீது ஆசை வைத்திருப்பது எனக்கு வியப்பைத்தருகிறது; ஆனால் நான் யார் இதையெல்லாம் கேட்க? கோப்பையைத் தாங்கள் கேட்டபடி அளிக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அதைத் தனது இடக்கரத்தால் எடுத்து பிரபுவின் வலது கரத்தில் வைத்தான்.
“இடது கையால் பரிசளிப்பது தர்மத்திற்குப் புறம்பானது: அதற்குரிய கழுவாயை (பரிகாரத்தை) நீ தேடிக்கொள்வாயாக என்று கண்ணன் பகர்ந்தார். ஆனால் கர்ணன், “ஓ பிரபு! என்னை மன்னித்தருளுங்கள். எனது வலது கை எண்ணெயாக இருக்கிறது. நான் கையைக் கழுவி முறைப்படி அதைத் தங்களிடம் ஒப்படைக்க நேரம் எடுத்துக்கொண்டால் இப்போது கொடுப்பதற்குச் சம்மதித்த எனது அலைபாயும் மனம் அதன்பின் தங்களுக்கு வாக்களித்தபடி கொடுக்க விடாமல் ஏதாவது சாக்குப் போக்குகளைத் தேட ஆரம்பித்துவிடலாம்; அப்போது இந்த இணையற்ற நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் நழுவிவிடும். என் மனமோ நிலைமாறும் இயல்புடையது. அதனால்தான் சம்பிரதாயங்களை மீறி உடனடியாகச் செயல்பட ஆரம்பித்தேன். கருணைகூர்ந்து என்மீது அனுதாபம் காட்டி மன்னித்தருளுங்கள் என்று மன்றாடினான். மனம் உறுதியற்றது என்பதை அறிந்தவன் கர்ணன். ஆனால் அதே மனதை, கண்ணன் அர்ஜுனனுக்குப் போதித்தபடி கட்டுப்பாட்டுடன் இருக்கவும் பற்றற்றிருக்கவும் பயிற்சி அளித்தால் அது வசப்பட்டுவிடும்.
Help Desk Number: