அடிப்படை ஒன்று ஆனால் அர்த்தப் படுத்துவது வேறு வகையில்
சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த குரு ஒரு நாள்: “குரு பிரம்மா; சிஷ்ய பிரம்மா; ஸர்வம் பிரம்மா” என்று சொன்னார். பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மமே எனும் மறைப்பொருளை குரு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.
சீடன் ஒருவன் தினமும் குருவை மரியாதையுடன் வரவேற்பது வழக்கம். ஆனால் குரு இப்படி போதித்த பிறகு அவன் தன் இருக்கையை விட்டு எழுந்து மரியாதை செய்யவில்லை. அவனது வித்தியாசமான நடத்தைக் குறித்து குரு கேட்டதற்கு, முந்திய நாள் அவர் எல்லாம் பிரம்மம் என்று போதித்தபடி, அவருக்கும், தனக்கும் வேறுபாடில்லை என்று பதிலளித்தான்.
தான் எறிந்த பந்து திரும்ப வந்து தன்னையே தாக்குவதைப் போன்று, தனது போதனையும் அமைந்து விட்டதை குரு உணர்ந்தார்; எனவே சீடனுக்கு நன்றாகப் பாடம் கற்பிக்க விரும்பினார். அவர் கரும்பலகையில் ‘குரு பிரம்மா’வைத் தனித்தனி வார்த்தையாக (இரண்டாக)ப் பிரித்து எழுதினார்.
அதைப் போலவே சிஷ்ய பிரம்மாவையும், ஸர்வம் பிரம்மாவையும் எழுதினார். இந்த மூன்றையும் நீங்கள் பார்க்கும்போது, மூன்று இடத்திலும் பிரம்மம் எனும் சொல் ஒன்றாக இருப்பது போல் தோன்றியபோதிலும் குரு, சிஷ்ய, ஸர்வம் ஆகியவை தனித்தே நிற்கின்றன. இந்த மூன்று சொற்களும் ஒன்றாகும்போதுதான் அனைவரும் ஒன்று என்று நீ சொல்ல முடியும் என்று விளக்கினார். இப்படியாக அனைத்திலும் உள்ள அடிப்படை ஒற்றுமையை அனுபவப் பூர்வமாக உணரும்வரை, மாணவன் மாணவனாகவே இருப்பான்; குரு குருவாகவே இருப்பார். அதுவரை சீடன் குருவை மதித்துத்தான் ஆகவேண்டும். பொருள் ஒன்றுதான், பாத்திரங்கள்தான் வேறு வேறாகக் காட்டுகின்றன.