கருணை – மஹான்களுக்குரிய அடையாளம்
ஒருமுறை சமர்த்த ராமதாசர் தனது சீடர்களுடன் கிராமத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்; சற்றுபின் தங்கிய சீடர்கள் கரும்புத் தோட்டம் ஒன்றைப் பார்த்து விட்டு அதற்குள் நுழைந்துவிட்டனர்.
கரும்புகளைப் பிடுங்கிக் கடித்து அதன் சாற்றை ருசித்துப் பருகி அனுபவித்தனர். அவர்கள் நடத்தையால் சினம் அடைந்தத் தோட்ட உரிமையாளர், கரும்புகளைச் சேதப்படுத்தி நஷ்டமுண்டாக்கிய சீடர்களைத் தடித்த கரும்பு ஒன்றினால் அடித்துவிட்டார். நாக்கைக் கட்டுப்படுத்தாமல் அந்த இனிய சாற்றுக்கு ஆசைப்பட்ட சீடர்களின் செயலுக்காக மிகவும் வருத்தம் தெரிவித்தார் குரு.
மறுநாள் அவர்கள் சிவாஜியின் அரண்மனையை அடைந்தனர். அங்கே குருவுக்கும் சீடர்களுக்கும் பிரமாதமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குருவைச் சிறப்பிக்கும் பொருட்டு அவரை நீராட்ட சிவாஜியே முன்வந்தார். ராமதாசர் தன் ஆடைகளைக் களைந்த போது அவர் அடிபட்டதற்குரிய அடையாளங்களாகக் கன்றிய சிவந்த தடிப்புகளைப் பார்த்த சிவாஜி அதிர்ச்சி அடைந்தார்.
தன் சீடர்கள் மீது விழுந்த அடிகளைத் தனக்கு மாற்றிக் கொண்டார் அவர். பெரிய மஹான்களிடம் இயல்பாகக் காணப்படும் அதிநுட்பமான இரக்ககுணம் இது. சிவாஜி தோட்ட உரிமையாளரை அழைத்துவர ஆள் அனுப்பினார்; சக்கரவர்த்தியின் முன்பும், அவருடைய குருவின் முன்பும் உரிமையாளர் நடுங்கிக் கொண்டு நின்றார்; தாங்கள் விரும்பும் தண்டனையை இவனுக்கு வழங்கலாம் என்று ராமதாசரை வேண்டினான்.
ஆனால் ராமதாசரோ, தவறு செய்தது தன் சீடர்கள்தான் என்று உண்மையை ஒப்புக் கொண்டதுடன், தோட்டக்காரருக்கு நிரந்தரமாக வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வரத்தையும் அருளி ஆசீர்வாதம் செய்தார்.