அனில் குமார்: சுவாமி! இன்றைக்கு உலகமே போராடிச் சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது. இன வெறுப்பு, வகுப்புச் சண்டை, ரத்தம் சிந்துதல், போர் போன்றவற்றைக் கேட்கிறோம். கருணைகூர்ந்து இன்றைய உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லுங்கள்.
பகவான்: இன்றைக்கு ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்கிற பல அறிவுஜீவிகளைக் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர் மிகச் சிலரே. உலகில் இன்றுள்ள துயரங்கள், குழப்பம், சண்டைகள், போராட்டம் போன்றவற்றுக்கு இதுவே காரணம். மானவன், தானவனைப் (அரக்கன்) போல நடந்துகொள்கிறான். எனவே கொடூரமான, அரக்கத்தனமான, மிருகத்தனமான, மனிதத்துவமற்ற இயல்புகளை மனிதரிடத்தே நாம் காண்கிறோம். எந்தக் கணத்தில் மனிதன் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு அனுபவிக்கிறானோ, அப்போது அமைதி, சுகம், பாதுகாப்பு, மகிழ்ச்சி எல்லாம் நிச்சயம்.
உலகெங்கிலும் மனித ரத்தத்தின் கூறுகள் ஒன்றுதான்; எல்லோரும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறார்கள். எல்லோரும் நிலத்தின் மீதுதான் நடக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உண்ணும் பணக்காரனுக்கும், கஞ்சி குடித்துப் பசியாறும் பிச்சைக்காரனுக்கும் பசியென்பது ஒன்றுதான். குளிர்பானம் குடிக்கும் பணக்காரனுக்கும், சாலையோரக் குழாயில் தண்ணீர் குடிக்கும் ஏழைக்கும் தாகம் ஒன்றுதான். இருவருமே சந்தோஷம் வந்தால் மகிழ்கிறார்கள், துக்கம் வந்தால் துயரப்படுகிறார்கள்.
மனிதவுடல் நிலம், நீர், வாயு, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. உடலென்பது ஜடம். அதற்குள் நாம் காற்றை உள்ளிழுக்கிறோம். உடலை வெம்மையாக வைத்துக்கொண்டு, உணவை ஜீரணிக்க உதவுகின்ற நெருப்பு உள்ளே இருக்கிறது. உடலின் பாகங்கள் அனைத்தையும் வைத்துக்கொள்ள உள்ளே இடம் (ஆகாயம்) இருக்கிறது. உடலில் ஏராளமாகத் தண்ணீர் இருக்கிறது. ஆக, வெளியே இருக்கும் ஐம்பூதங்கள் உள்ளேயும் உள்ளன. எல்லோருக்கும் இவை ஒரே விகிதத்தில்தான் உள்ளன.
உன்னிடம் இருப்பவை எல்லோரிடமும் உள்ளன. அப்படியிருக்க நீ ஏன் எல்லோரிடமும் போய்க் கையேந்துகிறாய்? எதற்காக? உன்னிடமில்லாத எது இன்னொருவரிடம் இருக்கிறது? அடிப்படையில் ஒன்றுமில்லை. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவம். இந்த ஒற்றுமைதான் தெய்வீகம்.
இத்தகைய ஆன்மீக ஒற்றுமையை அனுபவிப்பதே முக்தி (விடுதலை); பெருக்கம், பன்மை, வேற்றுமை உணர்வுகளே பந்தம், பற்று.
மலர்கள் பல, வழிபாடு ஒன்றே; பசுக்கள் பல, பால் ஒன்றே; நகைகள் பல, பொன் ஒன்றே; வழிகள் பல, இலக்கு ஒன்றே; தாரகைகள் பல, வானம் ஒன்றே; உயிரினம் பல, உயிர்மூச்சு ஒன்றே; நாம ரூபங்கள் பல, ஆனால் தெய்வம் ஒன்றே.
இதுதான் ஒருமைப்பாடு அல்லது ஒற்றுமை; நூலிழைகள் பலவானாலும் அவற்றை நெய்தால் துணியாகிறது. தெய்வீகத்தை உணர நீ இப்படித்தான் ஒருமையைக் கண்டறிந்து அனுபவிக்க வேண்டும். மானுடர் மதத்தின் பெயரால் போரிடுகிறார்கள். அது எத்தனை வெட்கம்! எந்த மதமும் உன்னைப் பொய் சொல்லவோ, பிறரைத் துன்புறுத்துவது, கொல்வது போன்றவற்றைச் செய்யவோ சொல்லவில்லை. எல்லா மதங்களும் அன்பு, சகோதரத்துவம், தியாகம், சாந்தி, சத்தியம் போன்றவற்றயே வலியுறுத்துகின்றன. எனவே, மதத்தின் பெயரால் சண்டை போடுவது எத்தனை நகைப்புக்குரியது. உண்மையில், உன் மனம் நல்லதானால் எந்த மதம்தான் தீயது?
இருப்பது ஒரே மதம்தான், அன்பின் மதம். மொழி அல்லது இனத்தின் அடிப்படையில் பேதங்கள் பார்ப்பது கெட்டது. அது குறுகிய மனப்பான்மையின் அடையாளம். இருப்பது ஒரே மொழிதான், இதயத்தின் மொழி. ஜாதியின் அடிப்படையில் பேதம் பார்ப்பது மிகக் கீழானது. உனது ஜாதியைச் சொல்லும் பெயர்ப்பலகையோடு நீ பிறக்கவில்லை. காற்றின் ஜாதி என்ன? நீர் எந்த ஜாதியைச் சேர்ந்தது? நெருப்புக்கும் நிலத்துக்கும் என்ன ஜாதி? எனவே, இருப்பது ஒரே ஜாதிதான், மனிதஜாதி. கடவுளின் பெயரால் போர்கள் நடத்தப்படுகின்றன. பல கடவுளர்கள் இல்லை என்பது உனக்குத் தெரியாதா? மற்றொன்றில்லாத ஒருவரே கடவுள். அவரை எந்தப் பெயரால் வேண்டுமானாலும் அழைக்கலாம். இருப்பவர் ஒரே கடவுள், அவர் எங்கும் நிறைந்தவர்.
ஏகம் சத் விப்ராஹ் பகுதா வதந்தி (சத்தியம் ஒன்றே, அதனைப் பண்டிதர்கள் பலவாக அழைக்கின்றனர்). தெய்வீகத்தில் பாகுபாடுகள் இல்லை. சித்தசுத்தி, இதயத் தூய்மை இருந்தால் நீ அந்த ஏகத்துவத்தை அனுபவிக்கலாம், அதுவே தெய்வத்தை அடையும் பாதை. முதலில் தூய்மையை வளர்த்துக்கொள். அது ஒற்றுமையைச் சாதித்து, தெய்வீகத்தை அடைய உனக்கு உதவும்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு