அனில் குமார்: சுவாமி: ஒருவேளை கலியுகத்தின் தாக்கத்தினால் இந்தக் காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட எந்தப் புரிதலும் இருப்பதில்லையோ! பல குடும்பங்களில் விரோதம், சண்டை, குழப்பங்கள், போட்டி ஆகியவற்றைப் பார்க்கிறோம்; சில சமயங்களில் விவகாரம் முற்றிப்போய்க் குடும்பம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுகிறது. இந்தக் கஷ்டத்துக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள் சுவாமி!

பகவான்: உலகத்தில் வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உள்ளது. பன்முகத்தன்மை வெளிப்படத் தோன்றுகிறது; ஆனால் ஆதார ஒருமைப்பாடு உள்ளே மறைந்துள்ளது. இயற்கையனைத்திலும் இவ்விரண்டு அம்சங்களும் உண்டு.

பூமியை எடுத்துக்கொள்ளுங்கள்; அது எல்லா இடத்திலும் ஒன்றுபோல இல்லை. குன்றுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆனாலும் நாம் அதில் ஒருமைப்பாட்டைத்தான் உருவகிக்கிறோம். ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன? இல்லையே. அதுபோலவே, ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்றுபோல, சமச்சீராக இருப்பதில்லை. அவர்கள் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்களல்ல. ஆனாலும் குடும்ப உறுப்பினர்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு ஆகியவை இல்லாமல் போக எந்தச் சரியான காரணமும் கிடையாது.

புராணங்களிலிருந்து இதற்கு நாம் நல்ல உதாரணங்களைப் பார்க்கமுடியும். சிவபெருமான் குடும்பத்தை உற்று நோக்குங்கள். சிவனின் தலையில் கங்கை நீர் உள்ளது, இரண்டு கண்களுக்கு நடுவே நெற்றியில் நெருப்பு உள்ளது. அதனால் அவரைத் ‘திரிநேத்ரர்’ (முக்கண் கடவுள்) என்கிறோம். நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று இயல்பில் எதிரானவை, சேர்ந்து இருக்காதவை.

சிவன் பன்னகதரர், நாகபூஷணர். ஏனெனில் அவர் தனது கழுத்தில் நாகப்பாம்புகளை அணிந்திருக்கிறார். அவருடைய இளைய மகன் சுப்ரமண்யரின் வாஹனம் மயில். பாம்பும் மயிலும் எதிரிகள்.

பார்வதி தேவியின் வாஹனம் சிங்கம், அவள் சிம்மவாஹினி. சிவனின் மூத்த மகனின் முகமே யானை முகம். அதனால் கணேசர், கஜானனர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு யானையால் தனது கனவில்கூட சிங்கத்தைக் காண முடியாது.

பார்வதி எல்லா ஆபரணங்களையும் அணிந்தவர்; அவளது கணவனோ மிகக்குறைவாக ஆடையணிந்த திகம்பரர். பஸ்மபூஷிதாங்கர் (உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டவர்). சிவபெருமானின் குடும்பத்தில் எதிரெதிரானவையே நிரம்பியிருந்த போதிலும் அவர்களிடையே இணக்கம், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு மற்றும் ஒற்றுமை உள்ளது.

அதுபோலவே, உங்கள் குடும்பங்களிலும், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும், நீங்கள் சிவனின் குடும்பத்தைப் போல நல்லிணக்கத்தோடு வாழ முடியவேண்டும். காலங்காலமாகச் சிவபெருமான் உலகத்துக்குப் போதிக்கும் பாடம் இதுவே.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0