அனில் குமார்: சுவாமி! உங்களுடைய எல்லையற்ற கருணையினாலும் இரக்கத்தாலும் நாங்கள் உங்கள் சன்னிதியில் இருக்கிறோம். எங்களையெல்லாம் உங்கள் ஆசிகள் இங்கே கொண்டுவந்திருக்கின்றன. உங்கள் தெய்வீக தர்சனம், ஸ்பர்சனம், சம்பாஷணம் ஆகியவை பொழியும் சூரிய ஒளியில் நாங்கள் ஆனந்திக்கிறோம். அப்படியிருந்தாலும் எங்களுக்கு முன்ஜன்மங்களின் புண்ணியமும் நல்வினைகளும் தேவையா?

பகவான்: இப்போதைய ஆனந்தம் முந்தைய ஜன்மத்தின் புண்ணியம் இரண்டுமே முக்கியம், அவை ஒருசேர அமையவேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த உதாரணத்தைக் கவனி. இங்கே மணற்பாங்கான நிலம் உள்ளது. பலத்த மழை பெய்தால் மண் நீரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. உங்கள் நிலைமை அப்படித்தான். அதனால் பக்தி உறுதியாக இல்லை. ஒரு நதி ஓடுவதாக வைத்துக்கொள், அப்போது மழை பெய்தால் என்ன ஆகிறது? முன்பைவிட நீரோட்டம் அதிக வேகமாகிறது. இப்போது என்னுடன் இருக்கக் கிடைத்த வாய்ப்பு மழைநீர் போன்றது. உன்னிடம் முன் ஜன்மத்தின் நல்ல வினைப்பயன்கள், நதிநீரைப்போல, இருந்தால் இந்த ஆனந்த நிலைமையை அதிதீவிரமாக அனுபவிப்பாய்.

கடவுளின் அருள் மழைநீர் போன்றது. உன்னுடைய முந்தைய புண்ணியம் அதைத் தேக்கிவைக்கும் ஆற்றலைத் தரும். அதனால்தான் நான் அடிக்கடி ‘இந்த அதிருஷ்டத்தை, வாய்ப்பை, உங்களுக்குத் தரப்பட்ட சலுகைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்’ என்கிறேன். கிணற்றிலிருந்து ஒரு வாளியில் தண்ணீர் இறைக்கிறாய். ஆனால் அந்த வாளி நிறையத் தண்ணீரை நீதான் இழுக்கவேண்டும். பாதியில் அதை விட்டுவிட்டால் என்ன ஆகும்? தண்ணீர் இறைக்க முடியாது, இல்லையா? ஆனால் ஒரு முக்கியமான விஷயம். நீ கடவுளைத் தீவிரமாக நேசித்தால், உன்னால் எதையும் சாதிக்கமுடியும். மனிதனின் முயற்சி அதிகரிக்கும்போது, இறைவனின் அருள் அந்த முயற்சிக்கு அதிக வலுவையும் ஆழத்தையும் கொடுக்கிறது. அதனால் இறுதியில் மனிதன் வெற்றியடைகிறான்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0