அனில் குமார்: சுவாமி! எதிர்பார்த்தது போல மனிதன் நடந்துகொள்வதில்லை. மனிதத்தன்மையை அவன் இழந்து வருகிறான். இந்த நிலையில் அவன் தன்னை எப்படி உயர்மாற்றம் செய்துகொள்ள வேண்டும்? அவன் இப்படியே இருந்தால் சமூகம் என்ன ஆகும்?
பகவான்: சில வார்த்தைகளின் பொருளை அறியாமலே அவற்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் சொல்லும் வார்த்தையின் பொருளை அறிந்தால், அவற்றிலேயே விளக்கம் இருப்பதை அறிவீர்கள்; அவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் பொருள் தருகின்றன. ‘மானவ’ என்ற சொல்லின் பொருள் என்ன? ‘மா’ என்றால் மாயை, ‘ந’ (தெலுங்கில்) தாண்டிச் செல்லுதல், ‘வ’ என்றால் (தெலுங்கில் ‘வர்திஞ்சு) நடத்தை. அதாவது ‘மானவ’ என்றால் ‘மாயையைக் கடந்து சென்று அதற்குத்தக நடப்பவன்’ என்று பொருள்; நிச்சயமாக, மாயைக்கு அடிமையானவனல்ல.
அதை மற்றொரு வகையிலும் விளக்கலாம். ‘மானவ’ என்ற சொல்லில், ‘மா’ என்றால் ‘அல்ல’, ‘நவ’ என்றால் ’புதியவன்’. அதாவது, ‘மானவன்’ என்றால் ‘புதியவனல்ல’ எனப் பொருள்படும். மனிதன் முன்பே பல பிறவிகளை எடுத்திருக்கிறான், இந்தப் பிறவியும் ‘புதிதல்ல.
மனிதனை ‘நரஹ’ என்று (சம்ஸ்கிருதத்தில்) சொல்வார்கள். ‘ந’ என்றால் ‘அல்ல’, ‘ரஹ’ என்றால் ‘அழிபவன்’. நரஹ என்றால் அழிபவனல்ல என்று பொருள். ஆக, அவன் அழிவற்றவன், அதாவது மரணமற்றவன் அல்லது ஆத்மா, சத்தியம். வானர என்றொரு சொல் உள்ளது. ‘வா’ என்றால் ‘வால்’. அப்போது மனிதன் வால் இல்லாத நரன் என்று ஆகும். மனிதன் ‘சாக்ஷரன்’: ‘சா’ என்றால் தெய்வீகமான, ‘அக்ஷர’ என்றால் குறைவற்ற, நிரந்தரமான. அப்போது சாக்ஷர என்றால் எவன் குறைவற்ற, நிரந்தரமான அல்லது அமரனான ஆத்மாவோ அவன் என்று பொருள்படும். அத்தகைய ஆத்மவை அறிந்தவன் சாக்ஷரன். ஆனால் இன்றைக்கோ மனிதன் ராக்ஷஸன் போல நடந்துகொள்கிறான். மனிதனிடம் ‘தமம்’ (புலனடக்கம்) இருக்கவேண்டும். ஆனால் அவனோ மதம் (திமிர்) பிடித்தவனாக இருக்கிறான். இந்த வார்த்தைகளின் பொருளை நாம் புரிந்துகொண்டால், தனிமனிதன் அல்லது வ்யக்தி, ஆத்மாவான அவன், அதன் குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு சமுதாயம் அல்லது குழுவான மக்கள் ஒரு சமூகம் ஆகிறார்கள். தனி மரம் தோப்பாகாது. தனி வீடு கிராமம் ஆகாது. சமாஜம் அல்லது சமுதாயம் என்றால் என்ன? ‘சம’ என்றால் சமத்துவம் அல்லது மனதின் சமநிலை, ’ஜ’ என்றால் ‘அதிலிருந்து பிறந்தது’. ஆக, சாமஜம் என்றால் சமத்துவம் மற்றும் மனதில் சமநிலை கொண்டது எனப் பொருள். இன்றைய சமுதாயத்தில் தேவைப்படுவது என்ன? சமைக்யதா (ஒற்றுமை), சமக்ரதை (ஒருங்கிணைப்பு), சமரசம் (ஒன்றுசேர்தல்), சௌப்ராத்ரதா (சகோதரத்துவம்), சமானதா (சமத்துவம்). ஒரு லட்சிய சமூகத்தின் அடையாளங்கள் இவையே.
சமுதாயம் மாறவேண்டுமென்று மக்கள் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால், எனது கருத்துப்படி அது தவறு. தனிமனிதன் மாறினால் சமுதாயம் தானாகவே மாறிவிடும். ஒரு சிறிய உதாரணம்: தந்தை ஒருவர் தன் மகனுக்கு இந்தியாவின் வரைபடத்தைக் கொடுத்தார். தவறுதலாக அந்தப் பையன் அதைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டான். தந்தை அவனைக் கடிந்துகொண்டார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பையன் வரைபடத்தை முழுவதுமாகக் கொண்டுவந்தான். எப்படிச் செய்தாய் என்று தந்தையார் கேட்டார். அதற்குச் சிறுவன், வரைபடத்தின் பின்பக்கத்தில் ஒரு மனிதனின் படம் இருந்தது, நான் செய்ததெல்லாம் துண்டு துண்டாக இருந்த மனிதனை ஒன்றுசேர்த்து முழுமையான படம் ஆக்கியதுதான் என்றான். அப்போது வரைபடமும் தானாகவே சரியாகிவிட்டது.
அதுபோலவே, தனிமனிதர்கள் சீர்திருந்திவிட்டால் சமுதாயமும் தானே சீர்திருந்திவிடும். தனிமனிதனின் சந்தோஷம் சமுதாயத்தின் மகிழ்ச்சியில்தான் உள்ளதென்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். மனிதனின் நலம், முன்னேற்றம் மற்றும் வளம் சமுதாயத்தைச் சார்ந்தே இருக்கிறது. இந்த உண்மையை எல்லோரும் முழுமையாக உணரவேண்டும். உதாரணமாக, அண்டை வீட்டில் நெருப்புப் பற்றினால் நீ அதை அணைப்பதற்கு முயல்கிறாய். ஏன்? நீ அப்படிச் செய்யாவிட்டால், உன் வீடும் எரிந்துபோகும். காலரா போன்ற கொள்ளை நோய்கள் வரும்போது நீ கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் நீ அதற்குப் பலியாகிவிடுவாய். ஒரு தனிநபருக்கும் அவன் வாழும் சமுதாயத்துக்குமான தொடர்பு அத்தகையதே.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு