அனில் குமார்: சுவாமி! உண்மையில், தெய்வீகத்தையே அச்சாணியாகக் கொண்டிருக்கும் மனிதகுலம் முழுவதும் ஒன்றேதான். அப்படியிருக்க, நாம் ஏன் பலவாறாகச் செயல்படுகிறோம்?

பகவான்: மனிதகுலம் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள். இது இயற்கையின் நியதி. எண்ணம், சொல், செயல் இவை காலம் மற்றும் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஓர் உதாரணம்: ஒரு பிஞ்சு துவர்ப்பாக இருக்கும்; காய் புளிக்கும், அதுவே பழமானால் இனிக்கும். அது எப்படி நடந்தது? ஏன்? கால ஓட்டத்தில் சுவை மாறியது. யாரும் கனியில் சர்க்கரையை நிரப்பவில்லை. எனவேதான் நான் ‘மதிக்கேற்ப விதி, அந்தஸ்துக்கேற்பச் செல்வம்’ என்று சொல்கிறேன்.

மனித வாழ்க்கையில் மூன்று முக்கியமான அம்சங்கள் உண்டு: ‘செயல்’ (உடல்); ‘சிந்தனை’ (மனம்); ‘இருப்பு’ (ஆத்மா). உடல் ஆசைப்படுகிறது, மனம் எண்ணுகிறது, ஆத்மா அனுபவிக்கிறது. உங்களுக்குப் பரந்த மனப்பான்மை வேண்டும். குறுகிய மனப்பான்மை ஒருபோதும் கூடாது. தேர்வு முடிவுகள் வெளியானதும், நீங்கள் ஏன் மற்றவர்களும் வெற்றி பெற்றதற்காக மகிழக்கூடாது? பரந்த மனப்பான்மையோடு பார்த்தால்தான் உனது தேர்வெண்ணைச் செய்தித்தாளில் பார்க்கும்போது, மற்றவர்களின் எண்களும் கண்ணில் படும். மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் உனது எண்ணை மட்டுமே பார்ப்பது குறுகிய மனப்பான்மை.

மற்றோர் உதாரணம்: ஒரு குழுப் புகைப்படத்தில் எல்லோருமே நன்றாக வந்திருப்பதாக மகிழ்ச்சி அடைவதாக வைத்துக்கொள்வோம். அதற்குப் பின் நீ உன் உருவத்தைப் பார்த்தால், நீ பரந்த மனப்பான்மை கொண்டவனாகக் கருதப்படுவாய்.

மனித வாழ்க்கை முக்குணங்களின் சேர்க்கை. ஒரு மின்விசிறியின் மூன்று சிறகுகள் போல அவை சரியான இணக்கத்தோடு வேலை செய்கின்றன. புளி, உப்பு, மிளகாய் மூன்றையும் நன்றாக அரைத்துச் சட்னி செய்வதுபோல, முக்குணங்களின் நல்ல கலவையாக மனித வாழ்க்கை உள்ளது. உங்களுக்கு இந்தியர்கள் மெல்லுகிற தாம்பூலம் தெரியும். அதில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்ற மூன்றும் முறையே பச்சை, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளன. மூன்று நிறங்கள் கொண்ட பொருட்களை மெல்லும்போது நீ சிவப்பு நிறத்தைப் பெறுகிறாய்.

அதுபோலவே மனித வாழ்வில் முக்குணங்களும் சேர்ந்துள்ளன. ஆனால், ஆன்மீக ரீதியாகவும், அடிப்படையிலும், ஆதாரத்திலும், மனிதனின் அந்தராத்மா சத் (இருப்பு), சித் (அறிதல்), ஆனந்தம் ஆகியவைதாம். சத்தும் சித்தும் சேர்ந்து ஆனந்தத்தை அளிக்கின்றன.

ஓர் உதாரணம்: இதோ தண்ணீர், சர்க்கரை என்று இரண்டு தனித்தனிப் பொருட்கள் உள்ளன. அவை இரண்டையும் சேர்த்துக் கரைத்தால் அங்கே சர்க்கரையோ தண்ணீரோ இல்லை, ஆனால் சர்க்கரைக் கரைசல் உள்ளது. அதுபோல, நீர் என்பது சத், சர்க்கரைதான் சித், இரண்டும் சேர்ந்து ஆனந்தம் என்ற கரைசல் ஆகிறது. முக்குணங்களுடன் சத், சித், ஆனந்தம் மற்றும் உடல் மனம், புத்தி ஆகியவை பிரவிருத்தியுடன் (புறவுலகுடன்) ஊடாடும்போது, அங்கே வேறுபாடுகள், பன்மை, பலவாகும் தன்மை உண்டாகிறது.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0